

தொங்கா இராச்சியம் (Kingdom of Tonga) என்று அதிகாரப்பூர்வமாக அழைக்கப்படும் நாடு பொலினீசியாவில் 177 தீவுகளைக்கொண்ட ஒரு தீவுக்கூட்டம் ஆகும். 750 சதுர கிலோ மீட்டர்கள் கொண்ட இத்தீவுக்கூட்டம் தெற்குப் பசிபிக் பெருங்கடலில் 7,00,000 சதுர கி.மீ. தூரம் வரை பரவியுள்ளன. தொங்காவின் 1, 03,000 மக்கள் தொகையும் 52 தீவுகளில் வசிக்கின்றனர். இவர்களில் 70 சதவிகித மக்கள் தொங்காதாப்பு என்ற முக்கிய தீவில் வசிக்கின்றனர்.
தொங்கா வட - தெற்கு கோட்டில் கிட்டத்தட்ட 800 கி.மீ. தூரம் பரந்து காணப்படுகிறது. இது வடமேற்கே பிஜூ, வலிசு புட்டூனா ஆகிய நாடுகளினாலும், வடகிழக்கே சமோவாவினாலும், கிழக்கே நியுவேயினாவும், வடமேற்கே நியூசிலாந்தின் ஒரு பகுதியான கெர்மாடெக் தீவுகளினாலும், மேற்கே பிரான்சு நாட்டின் நியூ கலிடோனியா பகுதி, வனுவாட்டு ஆகியவற்றைச் சூழ்ந்துள்ளது.
தொங்கா தனது இறையாண்மையை எந்த ஒரு வெளிநாட்டு சக்திக்கும் விட்டுக் கொடுக்காமல் இருந்து வருகிறது. 2010 ஆம் ஆண்டில், அரசியல் சட்டச் சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்டமை முதலாவது சார்பாண்மை மக்களாட்சிக்கு வழி வகுத்தது. இதன் மூலம் முழுமையான அரசியல் சட்ட முடியாட்சி ஏற்படுத்தப்பட்டது. தொங்கா தென் தீவுகளில் தொங்காடப்பு தீவின் வட கடற்கரையில் அமைந்துள்ள நுக்கு'அலோபா (Nukuʻalofa) எனும் நகரம் தொங்கா இராச்சியத்தின் தலைநகரமாக இருக்கிறது.
2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14 ஆம் நாளன்று ஒரு பெரிய வெடிப்பு தொடங்கியது. வளிமண்டலத்தில் 20 கிலோமீட்டர் தொலைவுக்கு எரிமலையானது சாம்பல் மேகங்களை அனுப்பியது. தொங்கா அரசாங்கம் குடியிருப்பாளர்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்தது. எரிமலைக்கு அருகில் உள்ள தொங்கா நாட்டுப் புவியியலாளர்கள் வெடிப்புகளையும் 5 கிலோமீட்டர் அளவுக்கு அகலமான சாம்பல் மேகத்தையும் கவனித்தனர்.
மறுநாள், குறிப்பிடத்தக்க அளவு பெரிய வெடிப்பு, மாலை 5.00 மணிக்கு ஏற்பட்டது. எரிமலை சாம்பல் ஆலோசனை மையம் விமான நிறுவனங்களுக்கு மீண்டும் ஒரு ஆலோசனை அறிவிப்பை வெளியிட்டது. எரிமலை வெடிப்பின் சாம்பல் தொங்காவின் முக்கியமான தீவில் நிலச்சரிவை ஏற்படுத்தியது. மேலும் இந்த சாம்பல் மேகம் சூரியனையே மறைத்தது.
தொங்கா நாட்டின் தலைநகரான நுக்கு'அலோபாவில் 65 கிலோ மீட்டர் தொலைவில் உரத்த வெடிச்சத்தங்கள் கேட்டன. வானத்திலிருந்து சிறிய கற்கள் மற்றும் சாம்பல் மழை பொழிந்தது. தொங்காவில் வசிக்கும் பலர் உயரமான பகுதிகளுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது நெரிசலில் சிக்கிக்கொண்டனர். வெடிச்சத்தம் தோராயமாக 840 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள சமோவா வரை கேட்டது. பிஜியில் வசிப்பவர்கள் வெடிச்சத்தத்தை இடியின் ஒலிகளாக விவரித்தனர். நியூசிலாந்தின் வடக்குத் தீவிலும், ஆஸ்திரேலியாவின் கிழக்குக் கடற்கரை வரையிலும் பெரும் சத்தம் கேட்டது.
விண்வெளியில் இருந்தும் மிகவும் பரந்த வெடிப்புத் தோற்றமும் அதிர்ச்சி அலைகளும் செயற்கைக்கோள்கள் மூலம் அறியப்பட்டன. நியூசிலாந்து முழுவதும் உள்ள வானிலை நிலையங்களால் அழுத்த அலையானது அதிகபட்சமாக 7 ஹெக்டா பாஸ்கல்கள் அளவு வீச்சாக அளவிடப்பட்டது. ஆஸ்திரேலியாவில் உள்ள வானிலை நிலையங்களாலும் அழுத்த அலை பதிவு செய்யப்பட்டது. அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையமும் 5.8 என்ற மேற்பரப்பு அலை அளவுகளில் வெடிப்பைப் பதிவு செய்தது. சுவிட்சர்லாந்தில் 2.5 ஹெக்டோ பாஸ்கல் அழுத்த ஏற்ற இறக்கம் அளவிடப்பட்டது.
எரிமலை வெடிப்பு நேரத்தில் தீவிர மின்னல் செயல்பாடும் பதிவு செய்யப்பட்டது. வைசாலா தேசிய மின்னல் கண்டறிதல் வலையமைப்பு கதிரியக்க அலைகள் வடிவில் மின்னலைக் கண்டறிந்தது. எரிமலை வெடிப்பதற்கு முந்தைய இரண்டு வாரங்களில் பல நூறு முதல் ஆயிரம் மின்னல்கள் கணினியால் பதிவு செய்யப்பட்டன. ஜனவரி 14 முதல் 15 வரை பல்லாயிரக்கணக்கான மின்னல்கள் ஏற்பட்டன. ஜனவரி 15 அன்று காலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலான ஒரு மணி நேர இடைவெளியில் 2,00,000 மின்னல்கள் பதிவு செய்யப்பட்டன என்பதும் இங்கு கவனிக்கத்தக்கது. ஆக்லாந்து பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஒரு விஞ்ஞானி இந்நிகழ்வை 1000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நிகழும் என்று தெரிவித்தார்.
மிகப்பெரும் எரிமலை வெடிப்பு, பல ஆயிரம் மின்னல்கள், அதிகமான இடிச்சத்தங்கள் என்று பல்வேறு பாதிப்புகளுக்குள்ளான தொங்கா நாட்டினை நட்புத் தீவுகள் என்று குறிப்பிடுகின்றனர். அதாவது, 1773 ஆம் ஆண்டில் ஜேம்ஸ் குக் அங்குள்ள தீவில் சென்று இறங்கியபோது, அங்கு ‘இனாசி’ என்ற ஆண்டுத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவ்விழாவின் போது தீவுகளின் தலைவருக்கு முதல் பழங்கள் வழங்குவது வழக்கமாக இருந்தது. அந்த வேளையில் ஜேம்ஸ் குக் அங்கு சென்றபோது, அங்கிருந்த மக்களால் அவர் மிகவும் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டார். அதனால், அத்தீவு ‘நட்புத் தீவுகள்’ என அழைக்கப்பட்டது. இன்றும் தொங்காவிற்கு நட்புத்தீவுகள் என்ற பெயர் பயன்பாட்டிலிருக்கிறது.