
இங்கிலாந்தின் தலைநகரான இலண்டன் மாநகரத்தையும், இந்தியாவின் கொல்கத்தா நகரத்தையும் இணைக்கும் ஒரு பேருந்து வழித்தடம் பயன்பாட்டிலிருந்தது என்பது உங்களுக்குத் தெரியுமா?
இலண்டன் - கொல்கத்தா பேருந்துப் போக்குவரத்து (London–Calcutta Bus Service) 1957 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தப் பேருந்து வழித்தடமானது, இந்தியாவின் கொல்கத்தா நகரத்தில் தொடங்கி, வடமேற்கு இந்தியா, பெல்ஜியம், யுகோஸ்லேவியா வழியாக லண்டன் நகரத்தை 50 நாட்களில் சென்றடைந்தது. இவ்வழித்தடமானது, 16,100 கிலோ மீட்டர் (10,000 மைல்கள்) நீளம் கொண்டது. 1957 ஆம் ஆண்டில் ஒருவழிப் பயணத்திற்கான பேருந்துச் செலவு, 85 இங்கிலாந்து பவுண்டுகள் (£85) என்று இருந்தது.
இலண்டன் - கொல்கத்தா பேருந்து வழித்தடத்திலான பேருந்து சேவையை ஆல்பர்ட் டூர் டிராவல்ஸ் நிறுவனம் இயக்கியது. இதன் முதல் பயணம் இலண்டனில் 1957 ஆம் ஆண்டு, ஏப்ரல் 15 அன்று தொடங்கி, 1957 ஆம் ஆண்டு ஜூன் 5 அன்று கொல்கத்தாவில் 50 நாட்களில் முடிந்தது. இப்பேருந்து இங்கிலாந்திலிருந்து பெல்ஜியம், மேற்கு ஜெர்மனி, ஆஸ்திரியா, யூகோஸ்லாவியா, பல்கேரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் மற்றும் இந்தியா வழியாக புதுதில்லி, ஆக்ரா, அலகாபாத் மற்றும் வாரணாசி வழியாக கொல்கத்தாவை அடைந்தது.
இந்தப் பேருந்துப்பயணத்தில் வாசிப்பு வசதிகள், அனைவருக்கும் தனித்தனியாக தூங்கும் அறைகள் மற்றும் மின்விசிறியால் இயக்கப்படும் வெப்ப ஊட்டிகள் ஆகியவை இருந்தன. இப்பேருந்தில் ஒரு சமையலறையும் இருந்தது. இப்பேருந்துப் பயணம் என்பதை விட ஒரு சுற்றுலாப்பேருந்து போன்று இருந்தது. பேருந்தில் வானொலி மற்றும் விருந்துகளுக்கு இசை அமைப்பு வழங்கப்பட்டது.
பனாரஸ் மற்றும் யமுனை ஆற்றங்கரையில் உள்ள தாஜ்மஹால் உள்ளிட்ட முக்கியச் சுற்றுலாத்தலங்களில் செலவிட நேரம் கிடைத்தது. டெஹ்ரான், சால்ஸ்பர்க், காபூல், இஸ்தான்புல் மற்றும் வியன்னாவிலும் கடைகளில் பொருட்கள் வாங்க அனுமதிக்கப்பட்டது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பேருந்து விபத்துக்குள்ளாகி பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பின்னர் ஆல்பர்ட் டூர்ஸ் எனும் சுற்றுலா நிறுவனம், 1968 ஆம் ஆண்டு, அக்டோபர் 8 அன்று சிட்னியில் இருந்து இந்தியா வழியாக இலண்டனுக்குப் பேருந்துப் பயணம் தொடங்கியது. பேருந்து இலண்டனை அடைய சுமார் 132 நாட்கள் ஆனது. மேலும் இது லண்டன் - கல்கத்தா - லண்டன் மற்றும் லண்டன் - கல்கத்தா- சிட்னி வழித்தடங்களில் இயக்கப்பட்டது.
ஈரான் வழியாக இந்தியா வந்த பேருந்து பின்னர், பர்மா, தாய்லாந்து மற்றும் மலேசியா வழியாகச் சிங்கப்பூர் சென்றது. சிங்கப்பூரில் இருந்து, பேருந்து ஆஸ்திரேலியாவில் உள்ள பெர்த்துக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து சாலை வழியாக சிட்னிக்குப் பயணித்தது.
இலண்டனிலிருந்து கல்கத்தாவிற்கு இந்தச் சேவைக்கான கட்டணம் இங்கிலாந்து பவுண்டுகள் (£145) ஆகும். இந்தப் பேருந்து சேவையில் முன்பு போலவே அனைத்து நவீன வசதிகளும் இருந்தன. 1976 ஆம் ஆண்டில் ஈரானில் ஏற்பட்ட உள் நாட்டுப் போர் காரணமாகவும் மற்றும் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்ததன் காரணமாகவும் இந்தப் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது.
1957 ஆம் ஆண்டில் தொடங்கி 1976 ஆம் ஆண்டு வரை இயக்கப்பட்ட இப்பேருந்து வழித்தடம் உலகின் நீண்ட பேருந்து வழித்தடமாகக் கருதப்பட்டது.