

உலகெங்கும் உள்ள சில ஊர்களின் பெயர்களை கேட்கும் போது வேடிக்கையாக இருக்கும், அதேபோல் சில சாலைகளின் பெயர்களை கேட்கும் போதும் வேடிக்கையாகவும், விசித்திரமாகவும் இருக்கும் அப்படிப்பட்ட உலகின் சில வேடிக்கையான சாலைகளை பற்றிய சுவாரஸ்யமான பதிவு இங்கே.
1. நோவேர் எல்ஸ் ரோடு (வேறு எங்கும் இல்லாத சாலை" (Nowhere Else Road) என்பது உண்மையில் ஆஸ்திரேலியாவில் உள்ள கிராமப்புறப் பகுதியில் அமைந்துள்ள அமைதியான பண்ணை நிலங்கள் வழியாகச் செல்லும் ஒரு விசித்திரமான பெயரிடப்பட்ட சாலையாகும். ஆஸ்திரேலியாவின் ஐயர் தீபகற்பம் (Eyre Peninsula) என்பது ஆஸ்திரேலியாவின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு முக்கோண வடிவிலான நிலப்பகுதி ஆகும். இங்கு ஷெரிங்காவிற்கு கிழக்கே 13 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இந்த சாலை.
1880-களில் ஒரு கால்நடை வளர்ப்பாளரால் கட்டப்பட்ட மேய்ப்பர் குடிசையின் இடத்தை இந்த சாலையின் பெயர் பலகை நினைவுகூருகிறது. லேக் ஹாமில்டன் ஸ்டேஷனின் மேற்பார்வையாளரால் ஆய்வுக்காக அந்தக் குடிசையைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவர், "அது இந்தக் குன்றின் மறுபுறம் இல்லையென்றால், வேறு எங்கும் இருக்காது" என்று கூறியதாகவும் கூறப்படுகிறது. அதன் நினைவாக நகைச்சுவையாக வைக்கப்பட்டதுதான் இந்த சாலையின் விசித்திரமான பெயர்.
2. நானைமோ (Nanaimo) என்பது கனடா நாட்டின் பிரிட்டிஷ் கொலம்பியா மாநிலத்தில், வான்கூவர் தீவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள ஒரு அழகான துறைமுக நகரமாகும். இது இயற்கை எழில் கொஞ்சும் இடங்களுக்கும், வேடிக்கையான சாலைகளுக்கும் பெயர் பெற்றது.அதில் ஒன்றுதான் ட்விக்லி விக்லி சாலை(Twiggly Wiggly Road) 1960கள் மற்றும் 70களில், ஃபிராங்க் நெய் என்பவர் அப்பகுதியில் மேயராக இருந்தார், மேலும் அவர் ரியல் எஸ்டேட் மேம்பாட்டிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார். அவரே இந்த பகுதியில் இருக்கும் பல விசித்திரமான சாலைகளின் பெயர்களுக்கு காரணமாக இருந்தவர்.
குறிப்பாக, ட்விக்லி விக்லி சாலைக்கு, ஃபிராங்க் நெய் மகள் மோனிக்(Monique)1960-களில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் சூப்பர்மாடலான ட்விக்கியின் பெயரால் செல்லமாக அழைக்கப்பட்டு வந்தார். பழைய கிரீன் மவுண்டன் ஸ்கை லாட்ஜுக்குச் செல்லும் சாலையில் மேலே குறிப்பிட்ட பகுதிக்கு செல்லும்போது அந்தச் சிறுமி தனது கார் இருக்கையில் அடிக்கடி நெளிந்து கொண்டிருந்தாள் என்றும், அந்த சூழ்நிலையில் இரண்டையும் இணைத்து அந்த பகுதி சாலைக்கு' 'ட்விக்லி விக்லி' என்ற அசாதாரணமான பெயரைத் தேர்ந்தெடுத்தார் என்றும் கூறப்படுகிறது.
3. ஹா-ஹா சாலை (HaHa Road )என்பது தென்கிழக்கு லண்டனில் உள்ள வூல்விச்சில், (Woolwich) ராயல் ஆர்ட்டிலரி பேரக்ஸ் மற்றும் வூல்விச் காமன் ஆகியவற்றிற்கு அருகில் அமைந்துள்ள ஒரு சாலையாகும். இதன் அசாதாரணமான பெயர் சிரிப்பிலிருந்து வரவில்லை, மாறாக "ஹா-ஹா" என்பதிலிருந்து வந்தது.
"ஹா-ஹா" என்பது 18 ஆம் நூற்றாண்டில், பார்வையைத் தடுக்காமல் கால்நடைகளைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஒரு தாழ்வான அகழி மற்றும் சுவரைக் கொண்ட ஒரு நிலப்பரப்பு அம்சமாகும்.
4. ஸிஸிக்ஸ் சாலை (Zzyzx road )என்பது கலிபோர்னியாவின் மொஜாவே பாலைவனத்தில், லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் லாஸ் வேகாஸ் நகரங்களுக்கு இடையில் பேக்கர் நகருக்கு அருகில் அமைந்துள்ள, இன்டர்ஸ்டேட் 15 நெடுஞ்சாலையிலிருந்து பிரிந்து செல்லும் ஒரு புகழ்பெற்ற 4.5-மைல் நீளமுள்ள கிராமப்புற இணைப்புச் சாலையாகும் .
1944-ல் வானொலி மதபோதகரும், தன்னைத்தானே 'மருத்துவர்' என அறிவித்துக்கொண்டவருமான கர்டிஸ் ஹோவ் ஸ்பிரிங்கரால் உருவாக்கப்பட்டது. தான் ஸிஸிக்ஸ் சாலை(Zzyzx road )'ஆங்கில மொழியின் இறுதி வார்த்தையாக' இது இருக்க வேண்டும் என்பதற்காக அவர் இதைத் தேர்ந்தெடுத்தார்.
ஸ்ப்ரிங்கர், போலி கனிம நீர் சிகிச்சைகளை ஊக்குவிக்கும் வகையில், ஒரு இயற்கை நீரூற்றை மையமாகக் கொண்டு ஸிஸிக்ஸ் மினரல் ஸ்பிரிங்ஸ் மற்றும் ஹெல்த் ஸ்பாவைக் கட்டி போலி மருத்துவம் பார்த்து வந்தார். பின்னர் அரசால் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்.
5. சிக்கன் டின்னர் ரோடு (Chicken Dinner Road)என்பது ஐடஹோவின் கேன்யன்கவுண்டியில் (Idaho canyan county), கால்டுவெல் மற்றும் நம்பாவிற்கு அருகில் அமைந்துள்ள, 20 மைல் நீளமுள்ள ஒரு புகழ்பெற்ற கிராமப்புற தார்ச் சாலையாகும். 1930-களில், ஒரு உள்ளூர் விவசாயியின் மனைவி, லாரா லாம்ப், ஐடஹோ ஆளுநர் சி. பென் ராஸுக்குத் தனது பிரத்தியேகமான பொரித்த கோழி, சூடான ரொட்டித் துண்டுகள் ஆகியவற்றை அளித்து, சாலையில் இருந்த மோசமான பள்ளங்களைப் பற்றிப் புகார் கூறினார். அதைத் தொடர்ந்து, அந்தச் சாலை விரைவில் சரி செய்யப்பட்டது .
இந்நிலையில் அந்தப்பகுதி சமூக விரோதிகள் சிலர் தார் சாலையில் "லாம்ப்ஸ் சிக்கன் டின்னர் அவென்யூ" என்று வண்ணம் தீட்ட, பள்ளி மாணவர்கள் தங்கள் பேருந்துப் பயணங்களின்போது அந்தப் பெயரை முழங்கத் தொடங்கினர்.
அதுவே அந்த சாலைக்கு' சிக்கன் டின்னர் சாலை 'என்ற விசித்திரமான பெயர் வரக்காரணமாகியது.
6. இந்தத்தெரு', 'அந்தத் தெரு', 'மற்றொரு தெரு' ( This Street," "That Street," and "The Other Street ) என்பவை கனடாவின் நோவா ஸ்கோஷியாவில் உள்ள போர்ட்டர்ஸ் லேக்கில் உள்ள ஒரு சாலையின் பெயர். இந்தத் தெரு', 'அந்தத் தெரு', 'மற்றொரு தெரு' என்பவை உண்மையில் ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட மூன்று குடியிருப்புச் சாலைகளாகும்.
இக்குடியிருப்பு கட்டுமான நிறுவனத்திற்கு வழக்கமான யோசனைகள் தீர்ந்துவிட்டதாலோ அல்லது ஒரு விளையாட்டுத்தனமான பெயரிடும் திட்டத்தில் நகைச்சுவையைச் சேர்க்க விரும்பியதாலோ என்னவோ அவற்றுக்கு இந்தப் பெயர்கள் சூட்டப்பட்டன என்கிறது வரலாறு.
உலகப் புவியியல் மற்றும் கலாச்சார வரலாற்றுத் தகவல்களைச் சுவாரஸ்யமான முறையில் அறிந்துகொள்வதுடன், சர்வதேசப் பயணங்களின் போது பார்வையிட வேண்டிய விசித்திரமான சாலைகள் இடங்கள் குறித்த அறிவை வாசகர்கள் பெறுவார்கள்.