
காசிரங்காவில் ஜங்கிள் சபாரி யானையிலும், ஜிப்பிலும் நடத்தப்படுகிறது. இந்த யானை சஃபாரியில், காட்டு விலங்குகளை மிகவும் அருகாமையில் நம்மால் பார்க்க முடிகிறது. பூங்காவினுடைய அதிகபட்ச பகுதியை எளிதில் அணுகக் கூடியதாக இருக்கிறது.
முழுமையாக வளர்ந்த காண்டாமிருகங்கள் 2 முதல் 2 1/2 டன் எடை கொண்டதாக இருக்கும். ஆண், பெண் என்ற இரண்டு காண்டாமிருகங்களுக்குமே ஒற்றைக் கொம்பு உள்ளது. இவை கெரட்டின் என்ற பொருளால் ஆனது. தங்களை பாதுகாப்பதற்கும், மற்ற விலங்குகளை பயமுறுத்துவதற்கும், மரங்களின் கிளைகளை உடைப்பதற்கும், வேரை தோண்டுவதற்கும் இந்த கொம்பை பயன்படுத்துகின்றன. விலங்குகளை அவற்றின் இயற்கையான வாழ்விடங்களில் மிக அருகில் சென்று பார்ப்பது சிறந்த அனுபவமாக இருந்தது.
காசிரங்காவில் யானை சஃபாரி இரண்டு ஸ்லாட்களில் நடத்தப்படுகிறது. யானை சபாரிக்கு முன்பதிவு செய்வது நம் ஏமாற்றத்தை பெரிதும் தவிர்க்க உதவும். ஆன்லைன் வசதி உள்ளதால் நாம் முன்பாகவே யானை சஃபாரிக்கு பதிவு செய்து கொள்ள முடியும்.
காசிரங்கா காட்டுப்பகுதி முழுவதும் யானைப் புல், ஈட்டி புல், கரும்பு புல், மற்றும் நெடிதுயர்ந்த மரங்களும் காணப்படுகிறது. யானைகள் மெதுவாக ஆடி அசைந்து செல்வதே அழகு. அத்துடன் உயரமான இடத்தில் அமர்ந்து கொண்டு (யானை மீது 11 அடி உயரத்தில்) காட்டுப் பகுதியை சுற்றி வருவது சிறந்த அனுபவமாக இருந்தது. ஜீப் சபாரியை விட இந்த யானை சஃபாரியில், யானைகள், அடர்ந்த புற்கள் மற்றும் ஈர நிலங்கள் வழியாக காட்டின் உள்ளே செல்வதால் காட்டின் அழகை முழுவதும் ரசிக்க முடிகிறது.
காசிரங்கா, கௌகாத்தியிலிருந்து 230 கிலோமீட்டர் தொலைவில் உள்ளதால் 4 மணி நேரம் பயணம் செய்து அடைந்து விடலாம். அக்டோபர் முதல் ஏப்ரல் வரை யானை சஃபாரி செய்ய திறந்திருக்கும். ஜூன் முதல் செப்டம்பர் வரை அதிக மழை பெய்யும். வெள்ள அபாயம் காரணமாக தேசிய பூங்கா மூடப்பட்டிருக்கும். எனவே வறட்சியான காலத்தில் நம் பயணத்தை திட்டமிடுவது சிறந்தது.
யானை சஃபாரி வனத்துறை அதிகாரிகளால் ஏற்பாடு செய்யப்படுகிறது. சஃபாரியில் இருக்கும் போது யானையை கிண்டல் செய்யவோ, காயப்படுத்தவோ, அனுமதியின்றி யானைகளுக்கு உணவளிப்பதோ தடை செய்யப்பட்டுள்ளது. மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்று கூறுகிறார்கள்.
காசிரங்கா தேசிய பூங்கா 430 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. சுற்றுலாப் பயணிகள் எளிதில் அணுகும் வகையில் 4 மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால் யானை சஃபாரி இரண்டு மண்டலங்களில் மட்டுமே நடக்கிறது. கோஹோரா வரம்பில் வெளிநாட்டினர் மற்றும் விஐபி பிரதிநிதிகள் மட்டுமே சஃபாரி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். பகோரி வரம்பு அனைத்து மக்களுக்காகவும் இயக்கப்படுகிறது.
எங்களுக்கு காலை முதல் ஸ்லாட் 5 - 6 மணிக்கு டிக்கெட் பதிவாகி இருந்ததால் காலை நாலரை மணிக்கு கிளம்பி சென்றோம். ஒரே கும்மிருட்டு. எப்படி இந்த இருட்டில் காட்டுப் பகுதியை பார்க்கப் போகிறோம் என்று நினைத்தால் யானையில் அமர்ந்து காட்டுக்குள் செல்லும் பொழுது 5 மணிக்கு நல்ல வெளிச்சம் இருந்தது.
யானை சஃபாரியில் ஜீப்புகள் கூட செல்ல முடியாத கடினமான நிலப்பரப்புகளில் பயணிக்க முடிந்தது. அடர்த்தியான மற்றும் காடுகளின் தொலைதூரப் பகுதிகளை சென்று பார்க்க முடிந்தது. ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் அழகாக நடமாடுவதையும், காட்டுப்பன்றிகள், காட்டு நீர் எருமை, சாம்பல் மான்கள், சதுக்குமான், இந்திய யானைகள், விதவிதமான பறவை இனங்கள் என ஏகப்பட்டதை கண்டு களித்தோம்.
ஆளுயர ஈட்டிப்புற்கள், யானைப்புற்கள் போன்றவற்றை பார்க்க முடிந்தது. எங்கும் பசுமையாக, கண்ணுக்கு குளிர்ச்சியாக நீர்நிலைகள், குளங்கள் ஆற்றின் கரையோரங்களில் நிறைய நீர்வாழ் தாவரங்களையும் காண முடிந்தது.
ஒரு மணி நேர பயணம் போனதே தெரியவில்லை. சஃபாரி முடிந்ததும் அங்கேயே யானைக்கான கரும்புகள், வாழைப்பழங்கள் நிறைய விற்கிறார்கள். நாங்கள் வாழைப்பழ சீப்புகள் வாங்கி எங்கள் கையால் யானைக்கு கொடுத்து அருகில் நின்று புகைப்படங்களும் எடுத்துக் கொண்டோம். யானை சஃபாரியின் பொழுது மஹவுட்கள் (யானை பாகன்கள்) நம்மிடம் உள்ள கேமராவை வாங்கி பக்கத்தில் உள்ள யானைப்பாகனிடம் கொடுத்து அவரை விட்டு புகைப்படம் எடுக்க சொல்கிறார்கள். நட்ட நடுக்காட்டில் சுகமாக போட்டோக்கு போஸ் கொடுத்து போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்.
காசிரங்கா தேசிய பூங்காவில் சிவப்பு நிற ஆடை அணிய அனுமதி இல்லை. பூங்காவிற்குள் உண்ணக்கூடிய உணவுப்பொருட்களை எடுத்துச் செல்லவும் அனுமதிப்பதில்லை. நாங்கள் கொண்டு சென்ற பிஸ்கட், சிப்ஸ்கள் போன்றவற்றை உள்ளே நுழையும் முன்பே வாங்கி வைத்துக்கொண்டார்கள். அத்துடன் ஒருமுறை முன்பதிவு செய்த டிக்கெட்டை ரத்து செய்யவோ, மாற்றவோ முடியாது என்பதால் நன்கு பிளான் செய்து டிக்கெட்டை முன்பதிவு செய்து கொண்டால் ஆனந்தமாக பயணிக்கலாம். யானை சஃபாரி, ஜீப் சஃபாரி இரண்டிற்குமே முன்பதிவு செய்து கொள்வது டிக்கெட் கிடைக்கவில்லையே என்ற ஏமாற்றத்தை தவிர்க்க உதவும்.