

தமிழ்நாட்டின் மையப்பகுதியில் அமைந்துள்ள திருச்சிராப்பள்ளி மாநகரின் மிக முக்கிய அடையாளமாக திகழ்வது ‘மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் ஆகும்.
தொன்மையான பாறையைக் குடைந்து உருவாக்கப்பட்ட இக்கோட்டை, இயற்கையின் அதிசயமாகவும், மனிதனின் சிற்பக்கலைத் திறனுக்குச் சான்றாகவும் விளங்குகிறது. ஆன்மிகம், வரலாறு மற்றும் கட்டிடக்கலை ஆகிய மூன்றும் சங்கமிக்கும் இத்தலத்தின் படிக்கட்டுகளின் அமைப்பும், அங்கு கட்டாயம் காணவேண்டிய இடங்களும் இப்பகுதியில் விரிவாக காணலாம்.
காவிரி ஆற்றின் தென்கரையில், தரை மட்டத்தில் இருந்து சுமார் 273 அடி உயரத்தில் கம்பீரமாக உயர்ந்து நிற்கும் இம்மலையின் உச்சியை அடைய பாறையிலேயே செதுக்கப்பட்ட 437 படிகள் உள்ளன. உச்சிப்பிள்ளையார் கோவிலை தரையில் இருந்து பார்த்தால் வானத்தை தொடுவதுபோல் ஒரு உணர்வைத்தரும்.
படிகட்டுகளில் ஏறும்போது ஆங்காங்கே சிறிய மண்டபங்களும், இளைப்பாறு வதற்கான இடங்களும் அமைக்கப்பட்டுள்ளன. படிக்கட்டுகளின் வழியே மேலே செல்லச் செல்ல, திருச்சி மாநகரின் பரந்து விரிந்த அழகும், காவிரி ஆற்றின் ஓட்டமும் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
மலைக்கோட்டைப் பயணத்தின் தொடக்கப் புள்ளியாக அடிவாரத்தில் அமைந்துள்ள கோவில் மாணிக்க விநாயகர் கோவில். பக்தர்கள் முதலில் இங்குள்ள மாணிக்க விநாயகரை வழிபட்டுவிட்டே மலைப்படிக்கட்டுகளில் ஏறத்தொடங்குகின்றனர்.
படிக்கட்டுகளில் பாதி தூரம் ஏறியதும், மலையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள மிகப் பெரிய சிவத்தலமே தாயுமானவர் கோவில் ஆகும். இங்கு சிவபெருமான் சுயம்பு லிங்கமாக எழுந்தருளியுள்ளார். ஒரு பக்தையின் பிரசவத்திற்காக இறைவனே தாயாக வந்து உதவி செய்த புராண வரலாற்றால் இத்தலத்து இறைவன் ‘தாயுமானவர்’ என அழைக்கப்படுகிறார். இக்கோவிலில் உள்ள நாயக்கர் காலத்து சிற்ப வேலைப் பாடுகள் நிறைந்த நூறுகால் மண்டபம் மற்றும் பிரம்மாண்டமான கோபுரம் ஆகியவை கட்டாயம் பார்க்கவேண்டிய கலைப் பொக்கிஷங்களாகும்.
தாயுமானவர் கோவிலுக்கு அருகிலேயே 6- ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பல்லவர் காலக் குடைவரைக் கோவில்களும், பாண்டியர் காலக் குடைவரைக் கோவில்களும் அமைந்துள்ளன. மகேந்திரவர்ம பல்லவன் காலத்தில் செதுக்கப்பட்ட இக்குகைகளில் உள்ள சிற்பங்களும், அரிய கல்வெட்டுகளும் தமிழகத்தின் பண்டைய வரலாற்றையும், சிற்பக்கலை வளர்ச்சியையும் பறைசாற்றுகின்றன.
உச்சிப் பிள்ளையார் கோவில் (மலை உச்சி) : 437 படிகளையும் கஷ்டப்பட்டு ஏறி மேலே போய்விட்டால் அங்கே வீசும் காற்றில் ஏறி வந்த களைப்பு பறந்து போய் விடும். இந்த கோவிலுக்கு என்று ஒரு கதை உண்டு.
இராமாயணப் போர் முடிந்ததும், இராவணனின் தம்பி விபீஷணன் இலங்கைக்கு கிளம்பும் தறுவாயில் அவருக்கு ராமர் ஒரு ஸ்ரீ ரங்க சிலையை பரிசாகக் கொடுத்தார். ஆனால் ஒரு கண்டிஷன் சொன்னார். இந்த சிலையை எக் காரணத்தைக் கொண்டும் கீழே வைக்காதே. அவ்வாறு வைத்தால் அது அங்கேயே ஒட்டிக்கொள்ளும் என்றார். சரி என்று சொல்லிக்கொண்டு விபீஷணன் சிலையோடு வருகிறார். வரும் வழியில் காவேரி ஆற்றின் அழகைப் பார்த்ததும் அவருக்கு குளிக்க ஆசை வந்தது.
அப்போது அந்தப் பகுதியில் ஒரு சிறுவன் விளையாடிக் கொண்டிருந்தான். அவனிடம் சிலையை கொடுத்து நான் வரும் வரையில் சிலையை கையில் வைத்துக்கோப்பா என்று சொல்லி விட்டு விபீஷணர் கிளம்பிவிட்டார்.
விபீஷணன் திரும்பி வருவதற்குள் சிறுவன் அந்த சிலையை கீழே வைத்துவிட்டான். அப்போதே சிலை ஸ்ரீ ரங்கத்தில் உறைந்துவிட்டது. திரும்பி வந்த விபீஷணனுக்கு கோபம் வந்து அந்த சிறுவனை துரத்தி செல்கிறார். அந்த சிறுவன் வேகமாக ஓடி இந்த மலை உச்சியில் வந்து உட்கார்ந்துவிட்டான். விடாத விபீஷணன் சிறுவனைப் பிடித்து தலையில் ஓங்கி ஒரு கொட்டு வைத்தார்.
அந்த சிறுவன்தான் நாம் அனைவரும் வணங்கும் இந்த உச்சிப்பிள்ளையார் ஆகும். அந்த கொட்டு வாங்கிய தழும்பு இப்போதும் உச்சிப்பிள்ளையார் தலையில் இருப்பதை பார்க்க முடியும்.
இக்கோவிலின் பிரகாரத்திலிருந்து பார்த்தால், திருச்சி மாநகரம், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் கோபுரங்கள், திருவானைக்காவல் மற்றும் காவிரி – கொள்ளிடம் ஆறுகளின் அழகிய காட்சியை 360 டிகிரி கோணத்தில் கண்டு ரசிக்கலாம்.
மலைக்கோட்டையின் அடிவாரத்திற்கு அருகிலேயே பிரம்மாண்டமான தெப்பக்குளம் அமைந்துள்ளது. இதன் நடுவில் அழகிய நீராழி மண்டபம் உள்ளது. ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் தெப்பத் திருவிழா இங்கு மிகவும் விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. மாலை நேரங்களில் மின்னொளியில் ஜொலிக்கும் மலைக்கோட்டையின் பிம்பம் இத்தெப்பக்குளத்தின் நீரில் பிரதிபலிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.
திருச்சி மலைக்கோட்டை உச்சிப் பிள்ளையாரைத் தரிசிப்பதும், வழியில் உள்ள குடைவரைச் சிற்பங்களையும், தாயுமானவர் கோவிலின் பிரம்மாண்டத்தையும் ரசிப்பதும் ஒவ்வொருவருக்கும் மறக்க முடியாத ஆன்மிக மற்றும் வரலாற்று அனுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.