

பல பக்திமான்கள் இஷ்டதெய்வத்தையும் குலதெய்வத்தையும் போட்டுக்குழப்பிக் கொள்கிறார்கள். பலருக்கும் இந்த சந்தேகம் உண்டு. குல தெய்வம் வேறாகவும் இஷ்ட தெய்வம் வேறாகவும் இருக்கலாம். இக்கட்டுரையில் குலதெய்வம் என்பது சாமியா அல்லது மனுசனா குலதெய்வ விழா எங்கே, எப்படி, எப்பொழுது, யாரால் வழிபாடு செய்யப்படுகிறது என்பதை விரிவாகப் பார்ப்போமா ?
இஷ்ட தெய்வம் -
தொழில் நுட்பம் அதிகம் வளராத ஆதிகாலத்தில் இயற்கைச் சீற்றங்களிலிருந் தும் வன விலங்குகள் கொள்ளையர்கள்களிடமிருந்தும் மனித குலத்தைக்காக்க போராடி உயிர் நீத்த ஒவ்வொரு மனிதனும் சாமிதான். அவனின் தியாகத்தை மறக்காமல் நன்றி செலுத்தி நடுகல் நட்டு வணங்குவது கோவில் எழுப்பி வழிபடுவது ஆதி மனித குல மாண்பு. அப்படித்தான் மனித சாமிகள் தோன்றி இருக்கணும்.
இஷ்டதெய்வம் என்பது தனக்குப்பிடித்த அல்லது விரும்பி வழிபட பெற்றோர்கள் காட்டி, தன் சொந்த விருப்பத்தின் பேரில் வணங்கும் தெய்வமே இஷ்டதெய்வம் ஆகும். வாழ்க்கையில் காலப்போக்கில் தமக்கு விருப்பமான இஷ்டதெய்வத்தை மாற்றிக்கொள்ளலாம். அல்லது பல தெய்வங்களை இஷ்ட தெய்வமாக வழிபடலாம்.
அது அவரவர் இஷ்டம். இந்த இஷ்ட தெய்வங்கள் சிவனாகவோ முருகனாகவோ பெருமாளாகவோ கிருஷ்ணனாகவோ மீனாட்சியாகவோ காமாட்சியாகவோ இசக்கியம்மாவாகவோ எல்லாருக்கும் பொதுவான சில தெய்வங்களாக இருக்கலாம்.
குலதெய்வம்
குலதெய்வம் என்பது பரம்பரை வழிபாடு இது தலைமுறை தலைமுறையாக அவரவர் முன்னோர்கள் வணங்கும் தெய்வம் ஆகும். குடும்பம் அல்லது குலத்தின் அடிப்படையில்தான் இது அமைகிறது குலதெய்வம் எப்போதும் மாறாது.
தமிழர் வழிபாட்டு மரபில் குலதெய்வம் என்பது வெறும் கடவுள் மட்டுமல்ல.
அது தங்களின் முன்னோர்களாகவும், குடும்பத்தையும், சந்ததியினரையும் தீமைகளில் இருந்து தங்களைக் காக்கும் காவல் தெய்வமாகவும் பார்க்கப்படுகிறது.
எந்தவொரு சுபகாரியம் தொடங்குவதற்கு முன்பும் குலதெய்வத்திற்குத்தான் முதல் வழிபாடு செய்வது வழக்கம். குலம் என்றால் குடும்ப பாரம்பரியம் என்று பொருள்.
குல தெய்வங்கள் பெரும்பாலும் கிராமங்களின் எல்லையிலோ அல்லது ஊருக்கு வெளியிலோ பிரதிஷ்டை செய்யப்படுகிறது. குல தெய்வங்கள் எல்லையைக் காக்கும் காவல் தெய்வங்களாக எல்லைச்சாமிகளாக வழிபடப்படுகின்றன
இதற்கு முக்கியமான ஆன்மீக, வரலாற்று பாதுகாப்பு காரணங்கள் உள்ளன. ஊருக்கு வரும் தீய சக்திகள், நோய்கள், இயற்கைச் சீற்றங்கள் அல்லது எதிரிகள் ஊருக்குள் நுழையாமல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனும் நம்பிக்கையில் அவை ஊரின் எல்லையில் அல்லது ஊருக்கு வெளியே பிரதிஷ்டை செய்யப் படுகின்றன.
பல குல தெய்வங்கள் தங்களின் வம்சத்தைக் காப்பதற்காகவோ ஊரைக் காப்பதற்காகவோ போரிட்டு வீர மரணம் அடைந்த முன்னோர்கள் ஆவர் எதிரிகள் ஊருக்குள் நுழையும் எல்லைப் பகுதியிலேயே பெரும்பாலும் போர்கள் நடக்கும். முன்னோர்கள் எங்கு வீழ்ந்தார்களோ, அல்லது எங்கு போரிட்டார்களோ அதே எல்லைப் பகுதியில் அவர்களைத் தெய்வமாக உருவகப்படுத்தி வீர மரண மரபுப் பெருமையுடன் நடுகல் நட்டியும் கோவில் கட்டியும் வழிபட்டுவருகின்றனர்
தீய சக்திகள், நோய்கள் ஊருக்குள் வராமல் தடுப்பது. உயிர் நீத்த முன்னோர்களை வழிபடும்போது பலி சடங்குகள் அசைவப் படைப்புகள் மற்றும் இரத்த பலி சடங்குகளை குடியிருப்பு பகுதிகளுக்குக்கு வெளியே மற்றவருக்கு உபத்திரவம் இல்லாமல் ஊர் எல்லையில் நடத்துவதையும் கடைப்பிடித்தனர்.
முற்காலத்தில் தமிழர்கள் மரங்கள், பாறைகள், காடுகள் போன்ற இயற்கை கூறுகளையே தெய்வமாக வழிபட்டனர். அதனால்தான் சோலைகள்,வனப்பகுதி குளக்கரைகள் போன்ற அமைதியான இயற்கை சூழல் நிறைந்த இடங்களில் குல தெய்வங்கள் வணங்கப்படுகின்றன. இயற்கையோடு இயைந்த வழிபாடுதான் ஆதிமனிதனின் திருவிழா. இது மக்கள் இயற்கையை வணங்குவதற்கும், அமைதியான சூழலில் தியானிப்பதற்கும் ஏதுவாக இருந்தது.
இது ஒட்டுமொத்த குலமும் குறிப்பாக பங்காளிகள் தங்களுக்குள் எந்தவித பாகுபாடும் இன்றி சமமாக ஒன்று கூடும் இடமாக குலதெய்வம் இருந்து வருகிறது. வனப்பகுதிகளில் இருந்து உருவான குலதெய்வங்கள், தொடக்கத்தில் குறிப்பிட்ட இனக்குழுக்களால் மட்டுமே வழிபடப்பட்டு, பின்னர் பிரபலமாகி அனைவராலும் பரவலாக வழிபடப்படும் பொதுத் தெய்வங்களாக மாறியுள்ளன.
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் காரையார் காரியஸ்தான் அணைக்கு மேலே, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியின் அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள மிகவும் புகழ்பெற்ற வன தெய்வம் சொரிமுத்து அய்யனார் ஆகும். ஆரம்பத்தில் இப்பகுதி காணி பழங்குடி இன மக்களின் காவல் தெய்வமாகவும், குறிப்பிட்ட சில குடும்பங்களின் குல தெய்வமாகவும் இருந்தது.
தமிழகத்தின் பல்வேறு காடுகளின் எல்லையிலும், மலை அடிவாரங்களிலும் அமையப்பெற்ற சில முக்கிய பெண் காவல் தெய்வங்கள் வனப்பேச்சி அம்மன் என்கிற காளி. பொள்ளாச்சிக்கு அருகில் உள்ள ஆனைமலை காடுகள் மற்றும் ஆற்றின் கரையை ஒட்டி அமைந்திருக்கும் சயன (படுத்துள்ள) நிலையில் அமைந்த பெண் தெய்வம் மாசாணியம்மன், சத்தியமங்கலம் அடர்ந்த காட்டுப் பகுதியில் (தற்போது புலிகள் காப்பகம்) அமைந்திருக்கும் இயற்கை அன்னை வடிவிலான தெய்வம் பன்னாரி மாரியம்மன்.
வன தெய்வங்கள் பொதுமக்கள் வழிபாட்டுத்தலங்களாக மாறியதற்கான முக்கிய காரணங்கள். நம்பிக்கை இந்த தெய்வங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவை என்றும், அநீதிக்கு எதிராக உடனே தண்டனை வழங்கும் என்றும் மக்கள் நம்புகின்றனர்.
எந்தவித ஆகம விதிகளும் இன்றி, திறந்த வெளிகளில் இயற்கையோடு இணைந்த வழிபாடு மக்களை எளிதில் கவர்ந்ததால் பக்தர்களை ஈர்த்தது.
காட்டு மரங்களின் நிழல்களில் மலை உச்சிகளில் அமைந்துள்ள தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மக்களின் காவல் குலதெய்வம் கருப்பண்ணசாமி தென் மாவட்ட மலை அடிவார காவல் தெய்வங்களாகும். ஏரிக்கரை குளக்கரை ஊர் எல்லைகளில் காவலிருக்கும் இன்னொரு முக்கியமான காவல்தெய்வம் அய்யனார்சாமி. இதல்லாமல் பண்டைய தமிழர்களின் போர்க்கடவுள் கொற்றவை.
போருக்கு புறப்படும் முன் தங்களுக்கு வெற்றியைத் தேடித்தரக்கோரி கொற்றவைக்கு உயிர் பலி கொடுக்கும் சடங்கே கொற்றவை வழிபாடு போரில் வெற்றி கிடைக்க வேண்டும் என்பதற்காக வீரர்கள் தங்கள் உயிரையே கொற்றவைக்கு காணிக்கையாகத் தரும் 'அவிப்பலி' அல்லது 'நவக்கண்டம்' போன்ற சடங்குகள் சங்க காலத்தில் வழக்கத்தில்இருந்தன.
மன்னர்களைப் போலவே கொள்ளையர்கள் வழிப்பறி செய்யவும் திருடவும் கொள்ளையடிக்கவும் ஆநிரை கவரவும் செல்லும்போது கொற்றவை வழிபாடு புரிந்தனர். கொற்றவை பல தமிழ் சமூகங்களின் மற்றும் அரச குலங்களின் வரலாற்று ரீதியான குல தெய்வம் ஆகும்.வறண்ட பாலை நிலத்தின் முதன்மைத் தெய்வமாகவும் கொற்றவை வழிபடப்பட்டாள்.
இன்று பல குடும்பங்களில் குல தெய்வமாக வணங்கப்படும் பல்வேறு அம்மன் வடிவங்களின் ஆதிப் புள்ளி கொற்றவைதான். இதல்லாமல் சில குறிப்பிட்ட வட்டாரங்களில் உள்ள சில ஜாதியாரின் குல தெய்வங்கள் -
கவுண்டர் காடை குல தெய்வம் வீரமாத்தி அம்மன்.
அருந்ததியர்களின் குலதெய்வங்கள் - சென்றாயப் பெருமாள், வீரமாத்தி அம்மன்.
தேவாங்கச் செட்டியார் குலதெய்வம் - ஸ்ரீசவுடேஸ்வரி அம்மன்.
கொங்கு வேளாளர் குல தெய்வங்கள் - காடேஸ்வரன் - வெள்ளையம்மாள்.
தேவேந்திர குல வேளாளர்களின் குலதெய்வங்கள் மாறநாட்டுக் கருப்பணசாமி - முத்தம்மாள் - மதுரைவீரன்.
படையாச்சிக்கவுண்டர் எனப்படும் வன்னியர்களின் ஒரு பிரிவினரின் குலதெய்வம் - பெரிய கருப்பசாமி.
வன்னியர்களின் குலதெய்வங்கள் தில்லாளம்மன் & கருப்புச்சாமி ஆதி திராவிடர்களின் குல தெய்வங்கள்: சாம்பான் – வீரமாத்தி.
இது குறிப்பிட்ட பகுதிகளின் சுருக்கமாக சொல்லப்பட்ட குறிப்புகள்தான் எங்கே எந்த நாட்டில் வாழ்ந்தாலும் ஒரே ரத்த சம்மந்தப்பட்ட உறவுகளெல்லாம் ஒரே நாளில் ஒரே இடத்தில் ஒன்று கூடி குல தெய்வங்களை ரொம்பப்பெருகளமாக கும்பிடுகிறார்கள்.
ஒரே சமூக மக்கள் வெவ்வேறு மாவட்டங்களில் வெவ்வேறு குல தெய்வங்களை வழிபடுகிறார்கள். பொதுவாக குலதெய்வ வழிபாடு பங்குனி உத்திரம் அமாவாசை பவுர்ணமி நாட்கள் மாசிமாத அமாவாசை மஹா சிவராத்திரி போன்ற நாட்களில் பரவலாகக் கும்பிடப்படுகிறது.