

வானில் தெரியும் நட்சத்திரங்களை வெறும் கண்களால் பார்த்து ரசிக்க வேண்டுமா? இந்தியாவில் அப்படி ஓர் இடம் இருக்கிறது. அதுதான் மகாராஷ்டிரா மாநில நாசிக் மாவட்டத்தில் உள்ள உத்மல் (Udmal) கிராமம். கடல் மட்டத்திற்கு மேல் 420 மீ உயரத்தில் சுற்றிலும் காடுகள் சூழ்ந்து அமைதியான சூழலில் அமைந்துள்ளது இந்த கிராமம்.
இந்த உத்மல் பழங்குடியின கிராமம், இந்தியாவின் முதல் ‘இருண்ட வான சமூகம்’ (Dark Sky Community) கிராமமாக உருவெடுத்து வரலாற்றுச் சாதனை படைத்து வருகிறது. இது மகாராஷ்டிரா. நாசிக் மாவட்டத் தலைமைய கத்திலிருந்து வடக்கே சுமார் 95 கி.மீ தொலைவில் குஜராத் மாநில எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சுர்கானா (Surgana Taluka) தாலுகாவில் உள்ளது.
இருண்ட வான கிராமம் (Dark Sky Village) என்றால் என்ன?
நகரங்களின் அதிகப்படியான செயற்கை ஒளி மாசினால் (Light Pollution) இரவு நேரத்தில் விண்மீன்களைப் பார்ப்பது கடினமாகிவிட்டது.
ஆனால், நாசிக்கின் சுர்கானா தாலுகாவில் உள்ள இந்த மலைக்கிராமத்தில் செயற்கை ஒளி வெளிச்சம் மிகவும் குறைவாக இருப்பதால், இரவு நேரத்தில் பால்வெளி மண்டலம் (Milky Way) மற்றும் பல்லாயிரக்கணக்கான நட்சத்திரங்கள் வெறும் கண்ணுக்கே மிகத் தெளிவாகத் தெரிகின்றன.
இரவு வானின் இயற்கையான இருளைப் பாதுகாத்து, விண்வெளி சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக, ஒவ்வொரு அமாவாசை இரவிலும் உத்மல் கிராமத்தின் பொது வீதி விளக்குகள் மற்றும் உயர்ரக மின்விளக்குகள் அனைத்தும் அணைக்கப்படும்.
வீடுகளுக்குள் மட்டும் மின்சாரம் இருக்கும். இதன் மூலம் கிராமமே முழு இருளில் மூழ்கி, வானில் உள்ள விண்மீன்கள் பிரகாசமாக காட்சியளிக்கும். இந்தப் பகுதியில் இது 'பத்தி குல் அமாவாசை' (Batti Gul Amavasya) என்று கொண்டாடப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் இந்தக் கிராமம்' இருண்ட வான கிராமமாக' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
ஒளி மாசற்ற தெளிவான இரவு வானத்தைப் பாதுகாத்து, விண்வெளி மற்றும் நட்சத்திரங்களை உற்றுநோக்கும் வானியல் சுற்றுலாவுக்கு (Astro-tourism) ஏதுவான இடமாக இக்கிராமம் மாற்றப்பட்டு வருகிறது.
இந்த கிராமத்தைச் சுற்றி 5 கி.மீ சுற்றளவிற்கு நகர்ப்புறங்கள் இல்லாததால், இங்கு செயற்கை ஒளி மாசுபாடு (Light Pollution) மிகக் குறைவு. இதனால் சாதாரண நாட்களிலேயே இரவு நேரத்தில் விண்மீன் திரள்களையும் (Milky Way), எண்ணற்ற நட்சத்திரங்களையும் வெறும் கண்ணால் தெளிவாகப் பார்க்க முடியும்.
உத்மல் கிராமம் நாசிக் மாவட்டத்தின் சுர்கானா (Surgana) தாலுகாவில் மலைக்கிராமாக அமைந்துள்ளது. இந்த கிராம சபை மூலம் இந்தியாவின் முதல் இருண்ட வானம் தீர்மானம் (Dark Sky Resolution) நிறைவேற்றப்பட்டது. இதன்படி, அமாவாசை போன்ற முக்கிய இரவுகளில் இக்கிராமத்தின் பொது விளக்குகள் அணைக்கப்பட்டு, இயற்கை வானை ரசிக்க வழிவகை செய்யப்படுகிறது.
விண்வெளி மற்றும் நட்சத்திரங்களை ரசிப்பதில் ஆர்வம் கொண்ட விபுல் கிராதி (Vipul Khiradi) என்ற 22 வயது உள்ளூர் பழங்குடியின மாணவரே இம்மாற்றத்திற்குக் காரணம். இவர் கிராம மக்களை ஒருங்கிணைத்து இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். இந்த ஐடியா 2019 ம் ஆண்டு அவர் 8 வது படித்த 14 வயதில் தோன்றியது.
விபுல் கிராதி சதானாவில் உள்ள ஏக்லவ்யா ஆங்கில வழி உறைவிட பள்ளியில் 8 ம் வகுப்பு படித்த போது புனேயில் உள்ள ஆஸ்ட்ரான்ஈரா( AstronEra') நிறுவனம் 2019-ல் நடத்திய விண்மீன் நோக்குதல் நிகழ்வில் பங்கேற்ற இவருக்கு ஏற்பட்ட ஆர்வத்தால், தன் சொந்த கிராமத்தை சர்வதேச விண்வெளி சுற்றுலா வரைபடத்தில் கொண்டு வர முயன்றார்.
கிராமி தனது இயற்பியல் பட்டப்படிப்பை புனேவில் முடித்து விட்டு தன்னார்வலாராக ஆஸ்ட்ரான்ஈரா நிறுவனத்தில் சேர்ந்து இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் விண்வெளி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்படி ஒருமுறை அவர் மணாலி சென்றபோதுதான் அவர் "என் கிராமம் ஏன் இப்படி உலக வரைபடத்தில் ஒரு பகுதியாக இருக்கக்கூடாது" என்று என்று எண்ணியதன் விளைவாக இரவு வானத்தின் மீதான அவரது ஈர்ப்பு, சமூகம் தழுவிய ஒரு இயக்கமாக வளர்ந்தது.
நட்சத்திரங்களைக் காண்பதில் ஒரு தனிப்பட்ட ஆர்வமாகத் தொடங்கிய இது, விரைவில் உத்மல்லின் இயற்கையான இருண்ட வானத்தைப் பாதுகாக்கும் ஒரு இலட்சியப் பணியாக மாறியது.
இயற்பியல் மாணவர், கிராடி தனது தொலைநோக்குப் பார்வையை வீடு வீடாக எடுத்துச்சென்று, இரவு வானத்தைப் பாதுகாப்பது தங்கள் கிராமத்திற்கு அங்கீகாரத்தையும் புதிய வாய்ப்புகளையும் கொண்டு வரும் என்று ஆரம்பத்தில் சந்தேகத்துடன் இருந்த கிராம மக்களை நம்ப வைத்தார்.
அவரது முயற்சிகள் படிப்படியாக சமூக ஆதரவைப் பெற்று,கிராம மக்கள் அனைவரும் இணைந்து ஒளியைக் கட்டுப்படுத்தவும், இரவில் வானைப் பாதுகாக்கவும் கிராம சபையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானத்தை நிறைவேற்றினர். இக்கிராம மக்கள் தங்கள் கிராம சபையில் (PESA சட்டத்தின் கீழ்) இந்தியாவின் முதல் 'டார்க் ஸ்கை' தீர்மானத்தை நிறைவேற்றினர்.
மகாராஷ்டிரா வானியல் சுற்றுலா மேம்பாட்டுத் திட்டத்தால் அடையாளம் காணப்பட்ட பல இடங்களில் உத்மலும் ஒன்றாகும். இது விகாசித் மகாராஷ்டிரா 2047 திட்டத்தின் ஒரு பகுதியாகும். மகாராஷ்டிர அரசு இக்கிராமத்தில் வானியல் சுற்றுலாவை மேம்படுத்தவும், ஒளி மாசைக் குறைக்கும் அறிவியல் பூர்வமான விளக்குகளைப் பொருத்தவும் ₹42.1 லட்சத்தை ஒதுக்கியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'டார்க் ஸ்கை இன்டர்நேஷனல்' (Dark Sky International) அமைப்பின் சான்றிதழைப் பெற்று, மகாராஷ்டிராவின் முதல் அதிகாரப்பூர்வ இருண்ட வான கிராமமாக மாறியுள்ளது. தற்போது வான்வெளி ஆராய்ச்சியாளர்கள், புகைப்படக் கலைஞர்கள் மற்றும் விண்மீன்களை ரசிக்க விரும்பும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவொரு மிகச்சிறந்த இடமாக மாறி வருகிறது.
ஒரு கிராமம் தனது நட்சத்திரங்கள் நிறைந்த வானத்தை அறிவியல் கண்டுபிடிப்பு, சமூகப் பெருமை மற்றும் வாழ்வாதாரத்திற்கான ஓர் ஊற்றாக மாற்ற முடிந்தால் எப்படி இருக்கும்? மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில், உத்மல் கிராம சபை அமைப்பு இந்தக் கனவை நனவாக்க உழைத்து வருகிறது. அஸ்ட்ரோ-சுற்றுலா (Astro-Tourism): வானியல் ஆர்வலர்கள், விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் மற்றும் இரவுநேர புகைப்படக் கலைஞர்களைக் கவரும் வகையில் இக்கிராமம் அஸ்ட்ரோ-சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்பட்டு வருகிறது.
இயற்கையான முறையில் பால்வெளி மணடலத்தை கண்டு களிக்கச் உத்மல் செல்ல உகந்த நேரம் நவம்பர் முதல் ஏப்ரல் வரை.
எப்படி செல்வது? தரை மார்க்கமாக நாசிக் நகரம் சென்று அங்கிருந்து தரைவழி மார்க்கமாக 90 கிமீ தூரத்தில் இந்த கிராமத்தை அடையலாம். ரயில் மார்க்கமாக என்றால் நாசிக் ரோடு ரயில் நிலையம் சென்று அங்கிருந்து பேருந்து மூலம் இந்த கிராமத்தை அடையலாம்.
நவீன உலகத்தின் ஒளி மாசுக்கு நடுவே இயற்கையான இரவின் மௌனத்தையும் வானியல் அழகையும் விண்மீன்களையும் முழுமையாக அனுபவிக்கலாம்.