ஏரியின் நடுவே 850 ஆண்டு பழமையான ஜைனக் கோவில்! உடுப்பி வரங்கா கிராமத்தின் ரகசியங்கள்!

மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமைக்கு நடுவே அமைந்துள்ள இந்த அதிசய யாத்திரைத் தலத்தை உடனே பாருங்கள்.
வரங்கா கிராமம்
வரங்கா கிராமம்AI image
Updated on

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள வரங்கா கிராமம், மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமை மலைகளால் சூழப்பட்ட அமைதியான யாத்திரைத் தலம். 850 ஆண்டுகள் பழமையான கெரே பசதி, 1200 ஆண்டுகள் பழமையான நேமிநாதர் பசதி, 1000 ஆண்டுகள் பழமையான சந்திரநாதர் பசதி ஆகிய ஜைனக் கோவில்கள் இங்கு முக்கிய ஈர்ப்புகள். அக்டோபர் முதல் மார்ச் வரை பயணம் சிறந்தது.

இந்த இடம் அதன் ஜெயின் கோயில்களுக்கு மிகவும் பிரபலமானவை. அவற்றுள் முக்கியமானவை கெரே பசதி மற்றும் நேமிநாத் பசதி. அக்டோபர் முதல் மார்ச் வரை பயணிக்க உகந்த காலம்.

கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள வரங்கா கிராமம் அழகிய இயற்கை சூழலும், பல நூற்றாண்டுகள் பழமையான ஜைனக் கோவில்களும் (பசதிகள்) நிறைந்த ஒரு சிறிய அமைதியான இடமாகும். இது கார்கலாவிலிருந்து (Karkala) அகும்பே செல்லும் வழியில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவிலும், உடுப்பியிலிருந்து சுமார் 37 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

வரங்காவில் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்கள்:

1. கெரே பசதி (Kere Basadi):

இந்த கிராமம் சமண மதத்தினரின் முக்கிய ஆன்மீக யாத்திரைத் தலமாக அறியப்படுகிறது. கெரே பசதி என்பது 850 ஆண்டுகள் பழமையான ஒரு சமணக் கோவிலாகும். இது பன்னிரண்டாம் நூற்றாண்டில் குலசேகர மன்னரால் கட்டப்பட்டதாக கருதப்படுகிறது. இது சதுர்முக பசதி அல்லது ஏரிக்கோவில் என்றும் அழைக்கப்படுகிறது.

14 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரியின் நடுவே அமைந்துள்ள அழகிய ஜைனக் கோயிலாகும். இக்கோவிலை அடைவதற்கு ஒரு சிறிய படகு மூலம் பயணம் செய்ய வேண்டும். இக்கோவிலின் மூலவர் பார்சுவநாதர் (Parshwanatha Basadi) 23 வது தீர்த்தங்கரர் ஆவார்.

வரங்கா கிராமம்
வரங்கா கிராமம்AI image

நான்கு திசைகளிலும் நுழைவாயில்களைக் கொண்டு நான்கு தீர்த்தங்கரர்களின் (பார்சுவநாதர், நேமிநாதர், சாந்திநாதர் மற்றும் ஆனந்தநாதர் ஆகிய தீர்த்தங்கரர்களின்) சிலைகள் நான்கு திசைகளை நோக்கி அமைக்கப்பட்டுள்ளதால் இதற்கு சதுர்முக பசதி என்ற பெயரும் உண்டு. கோவிலின் உள்ளே பத்மாவதி தேவியின் சிலையும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. இது ஒரு நட்சத்திர வடிவ அடித்தளத்தில் கட்டப்பட்டுள்ளது.

2. நேமிநாதர் பசதி(Neminatha Basadi):

நேமிநாத பசதி, ஹைரே பசதி என்றும் அழைக்கப்படுகிறது. பார்சுவநாத பசதிக்கு எதிரே அமைந்துள்ள இக்கோவில் நேமிஸ்வரருக்கு அர்பபணிக்கப்பட்டுள்ளது. ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ள 1200 ஆண்டுகள் பழமையான கோவில், சமண மதத்தின் மற்றொரு முக்கிய வழிபாட்டுத் தலமாகும். இங்குள்ள நேர்த்தியான சிற்பங்கள் மற்றும் வேலைப்பாடுகள் இந்த இடத்தின் கலை நுட்பத்தை வெளிப்படுத்துகின்றன.

இக்கோவில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளதுடன், 70 அடிக்கு 70 அடி பரப்பளவில் முற்றிலும் கற்களால், பாரம்பரிய கடலோர கர்நாடகா மற்றும் மலைநாடு பாணியிலான சாய்ந்த கூரையுடன் கம்பீரமாகக் கட்டப்பட்டுள்ளது. கருங்கல்லால் செதுக்கப்பட்ட இரண்டு பிரதான நுழைவாயில்களையும் கொண்டுள்ளது.

இக்கோவிலின் பிரதான தெய்வமான நேமிநாதரின் சிலை சுமார் 5 அடி உயரமுள்ள கற்தூணால் ஆன பிரம்மாண்டமான சிலை தாமரை பீடத்தின் மீது வீற்றிருக்கும் கோலத்தில் செதுக்கப்பட்டுள்ளது. நவரங்கம் என அழைக்கப்படும் இக்கோவிலின் மண்டபத்தில் 24 தீர்த்தங்கரர்களின் வெண்கல சிலைகள் கயோத்சர்க தோரணையில் பாதுகாக்கப்பட்டுள்ளன. இது கிராமத்தின் முக்கிய தெய்வமாக கருதப்படுகிறது. வரங்காவிலுள்ள மூன்று முக்கிய சமணக் கோயில்களில் இதுவும் ஒன்றாகும்.

இதையும் படியுங்கள்:
பசுமை, அருவி, வியூ பாயிண்ட்: ஆச்சரிய அனுபவங்கள் தரும் நெல்லியம்பதி மலைகள்!
வரங்கா கிராமம்

3. சந்திரநாதா பசதி (Chandranatha Basadi):

இதுவும் வரங்காவில் உள்ள மற்றொரு பாரம்பரியமிக்க சமணக் கோவிலாகும். புகழ்பெற்ற சந்திரநாதா பசதி என்பது சுமார் 1000 ஆண்டுகள் பழமையான புகழ்பெற்ற திகம்பர் சமணக் கோயிலாகும். இந்த ஆலயம் சமண மதத்தின் 8வது தீர்த்தங்கரரான சந்திரநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது உள்ளூரில் "மடடா பசதி" என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில் இங்கு சமண மடாதிபதி தங்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க சமண மடம் அமைந்துள்ளது. சுற்றிலும் பசுமையான மரங்களும், இயற்கையான சூழலும் இப்பகுதிக்கு வரும் பயணி களுக்கு மிகுந்த மன அமைதியைத் தருகின்றன.

பச்சைப் பசேலென்ற மேற்குத் தொடர்ச்சி மலையின் பசுமையான மலைகளுக்கு நடுவில் இந்த கிராமம் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கேப் டவுன் பயணம்: சொர்க்கத்தை பூமியில் காணத் தயாரா?
வரங்கா கிராமம்

4. பயணிக்க சிறந்த காலம்:

அக்டோபர் முதல் மார்ச் வரையிலான மாதங்கள் வரங்காவிற்குச் செல்ல மிகச்சிறந்த பருவமாகும்.

இங்குள்ள கோவில்கள் அனைத்தும் காலை 8.30 மணி முதல் மதியம் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் 6:00 மணி வரையிலும் திறந்திருக்கும்.

5. எப்படி செல்வது?

அருகில் உள்ள விமான நிலையம் மங்களூர் விமான நிலையம். அருகில் உள்ள ரயில் நிலையம் உடுப்பி ரயில் நிலையம். வரங்காவில் இருந்து 39 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அரவணைப்பில் மறைந்திருக்கும் பழங்கால ஆன்மீகத் தலங்களை அறிந்துகொள்வதன் மூலம், அடுத்த பயணத்திற்கான அமைதியான மற்றும் கலாச்சாரம் நிறைந்த ஒரு புதிய சுற்றுலாத் தலத்தை உங்களால் எளிதாகத் திட்டமிட முடியும்.

logo
Kalki Online
kalkionline.com