உணவு முதல் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வரை: உலகின் 4 அதிசய நாடுகளின் சுவாரஸ்ய ரகசியங்கள்!

சுயமாக உணவை தயாரிக்கும் கயானா முதல் உலகின் பாதுகாப்பான சான் மரினோ வரை ஒரு பார்வை.
சுவாரஸ்ய நாடுகள்
சுவாரஸ்ய நாடுகள்AI image
Updated on

லகின் 186 நாடுகளில், தென் அமெரிக்க நாடான கயானா மட்டுமே தனது அனைத்து உணவு மற்றும் ஊட்டச்சத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதற்கு வெளிநாடுகளை நாடாமல் உள்நாட்டு உற்பத்தியை முழுமையாக சார்ந்திருக்கக்கூடிய நாடாக திகழ்கிறது. தனது உணவுத்தேவைகளை தானே பூர்த்தி செய்யும் உலகின் ஒரே நாடு இது தான் என்கிறது 'நேச்சர் புட்ஸ்' நடத்திய ஆய்வு.

கயானா (Guyana) 83,000 சதுர மைல் பரப்பளவுள்ள ஒரு தென் அமெரிக்க நாடாகும். இது கரீபியன் பிராந்திய நாடுகளுடன் நெருங்கிய கலாச்சாரத் தொடர்புகளைக் கொண்டுள்ளது. இது தென் அமெரிக்காவின் பரப்பளவிலும் மக்கள் தொகையில்யிலும் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும்.

நாட்டில் 8 லட்சம் மக்கள் மட்டுமே வசிக்கின்றனர். நாட்டின் பெரும்பாலான மக்கள், நாட்டின் 5% நிலப்பரப்பைக் கொண்ட கடலோரச் சமவெளிகளில் வாழ்கின்றனர். நாட்டின் ஆட்சி மொழியாக ஆங்கிலம் உள்ளது சிறப்பாக கருதப்படுகிறது.

அத்தியாவசிய ஊட்டச்சத்து வகைகள் அனைத்தையும் உற்பத்தி செய்வதிலும், உள்நாட்டுத் தேவையைத் தாண்டி மாவுச்சத்து மிகுந்த உணவுகள் மற்றும் பழங்களை ஏற்றுமதி செய்வதிலும், உணவு உற்பத்தியில் உலகளவில் தனித்துவமான இடத்தையும் கயானா பிடித்துள்ளது. கயானா இந்த நிலையை எட்டியதற்கு காரணம் இயற்கையை எந்த வகையிலும் சேதப்படுத்தாதது தான். ஆம்! மற்ற தென் அமெரிக்க நாடுகள் விவசாயத்திற்காக நிலத்தை விரிவாக்கம் செய்வதற்காக காடுகளை அழிக்கின்றன.

ஆனால் கயானா தனது காடுகளில் 85 சதவீதத்திற்கும் அதிகமானவற்றை இன்றும் பாதுகாத்து வருகிறது. உலகிலேயே அதிக குடிநீர் வளம் கொண்ட நாடுகளில் இரண்டாம் இடத்தில் உள்ளது கயானா.

உலகின் பாதுகாப்பான நாடு: சுற்றுலாச் செல்லும் முன்பாக பயணிகள் அனைவரும் யோசிக்கும் முதல் விஷயம் அந்த நாடு எவ்வளவு பாதுகாப்பானது?' என்பதுதான். உலகிலுள்ள 195 நாடுகளில் பாதுகாப்பு அளவில் பெரிய வேறுபாடுகள் உள்ளன. இந்நிலையில், அமெரிக்காவின் காப்பீட்டு ஒப்பிட்டுத் தளமான 'ஸ்கொயர் மவுத்' (Squaremouth) உலகம் முழுவதிலும் உள்ள 100 சுற்றுலாத் தலங்களை ஆய்வு செய்து, தனியாகப் பயணம் செய்ய உலகின் மிக பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அரசியல் ஸ்திரத்தன்மை, மனித வள மேம்பாட்டுக் குறியீடு மற்றும் தெருக்களின் பாதுகாப்பு, குற்றமின்மை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மதிப்பீடு கணக்கிடப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலில் முதல் 10 இடங்களில் 7 நாடுகள் ஐரோப்பாவிலும், 3 நாடுகள் ஆசியாவிலும் அமைந்துள்ளன.

இதில் முதலிடம் பிடித்த நாடு இத்தாலியின் நடுவே அமைந்துள்ள சான் மரினோ (San Marino) - இந்தச் சிறிய நாடு உலகிலேயே மிகவும் பாதுகாப்பான இடமாக முதலிடம் பிடித்துள்ளது. இதன் ஆபத்து குறியீடு 0.78/10 என்கிறது ஆய்வு.

சான் மரினோ (San Marino) என்பது தெற்கு ஐரோப்பாவில் இத்தாலி நாட்டால் முழுமையாகச் சூழப்பட்டுள்ள ஒரு சிறிய நிலப்பரப்பு ( 61 சதுர கிமீ)நாடாகும். இது உலகின் மிகப்பழமையான மற்றும் ஐரோப்பாவில் உள்ள ஐந்தாவது மிகச்சிறிய குடியரசு ( மக்கள் தொகை 35,000) நாடாகும்.

இதன் தலைநகரம் சான் மரினோ இங்கு இரவிலும் பயமின்றி தெருக்களில் உலா வரலாம். சிறந்த மருத்துவ வசதிகளும் இங்கு உண்டு. ஆண்டுதோறும் மூன்று மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களை வரவேற்கும் இந்தச் சிற்றரசின் பொருளாதாரத்தில் சுற்றுலாவே ஆதிக்கம் செலுத்துகிறது.

உலகின் மிக அழகான தீவாக இடம் பெற்றுள்ள நாடு: சர்வதேச அளவில் புகழ்பெற்ற முன்னணி சுற்றுலா இணைய தளமான பிக் 7 டிராவல் (Big 7 Travel) வெளியிட்டுள்ள உலகின் "50 சிறந்த தீவுகள்" வருடாந்த பட்டியலில், உலகின் மிகவும் பிரபலமான பிரான்சின் பொலினீசியாவில் உள்ள 'மோரியா' மற்றும் ஈக்வடாரின் 'கலாபகோஸ்' போன்ற தீவுகளைப் பின்தள்ளி இலங்கை முதலிடத்தை பெற்றுள்ளது.

இலங்கை இந்தியப் பெருங்கடலில் இந்தியாவின் தெற்கே அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும். இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழிகளாக சிங்களம் மற்றும் தமிழ் விளங்குகின்றன. பரப்பளவு: 65,610 சதுர கிலோமீட்டர், சுமார் 2.2 கோடி மக்கள் தொகை கொண்ட நாடு.

இலங்கையின் 1,300 கிமீக்கும் அதிக நீளமுள்ள அழகிய கடற்கரைகள் (மிரிஸ்ஸ, உனவடுன, பெந்தோட்டை, அருகம்பே, பாசிக்குடா), சிகிரியா, தம்புள்ளை குகைக்கோயில், வரலாற்றுச் சிறப்புமிக்க கண்டி, அனுராதபுரம், பொலன்னறுவை ஆகிய ஆன்மீக மற்றும் புரதான நகரங்கள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.

யானைகள் மற்றும் சிறுத்தைகள் வாழும் யால் தேசிய பூங்கா, மிரிஸ்ஸவில் மற்றும் கல்பிட்டியில் திமிங்கலம் பார்த்தல் போன்ற இடங்களும் இலங்கைக்கு கூடுதல் சுற்றுலா பலமாக அமைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
கேப் டவுன் பயணம்: சொர்க்கத்தை பூமியில் காணத் தயாரா?
சுவாரஸ்ய நாடுகள்

மத்திய மலைநாட்டின் தேயிலைத் தோட்டங்கள் மற்றும் கண்டி - ஹப்புத்தலே இடையிலான தொடருந்து பயணம், மூடுபனி சூழ்ந்த மலைப் பிரதேசங்கள் இலங்கையின் அழகை பறைசாற்றுகின்றன. முந்தைய ஊடகங்களின் மதிப்பீடுகள், சமூக வலைத்தளங்களில் இலங்கையின் பிரபலம் மற்றும் பயணிகளின் தற்போதைய ஆர்வம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தரவரிசை கணிக்கப்பட்டுள்ளது.

உலகின் வலிமையான பாஸ்போர்ட் கொண்ட நாடு: வலிமையான பாஸ்போர்ட் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்தி, வணிக பயணத்தை எளிதாக்கி, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என்கிறார்கள். அந்த வகையில், சர்வதேச விமான போக்குவரத்து சங்கத்தின் (IATA) தரவுகளின் அடிப்படையில் உலகின் சக்திவாய்ந்த 199 நாடுகளின் பாஸ்போர்ட்டுகளின் தரவரிசையை ஹென்லி பாஸ்போர்ட் இன்டெக்ஸ் தற்போது வெளியிட்டுள்ளது.

சுவாரஸ்ய நாடுகள்
சுவாரஸ்ய நாடுகள்AI image

அதில் உலகின் மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் தரவரிசையில் சிங்கப்பூர் (Singapore)முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் உலகின் 20 மிகச்சிறிய நாடுகளில் ஒன்றாகும். தென் கிழக்கு ஆசியாவில் 64 தீவுகளை உள்ளடக்கிய சுமார் 730 சதுர கிலோமீட்டர் பரப்பளவைக் கொண்டுள்ள நகர நாடு. இருப்பினும் அது ஒரு முக்கிய உலகளாவிய நிதி மையமாக திகழ்கிறது.

இதையும் படியுங்கள்:
ஆப்கானிஸ்தான் முதல் வடகொரியா வரை: சுற்றுலா பயணிகள் செல்லக்கூடாத 5 ஆபத்தான நாடுகள்!
சுவாரஸ்ய நாடுகள்

அந்நாட்டின் பாஸ்போர்டை பயன்படுத்தி 195 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும் என கூறப்படுகிறது. மேலும், பிரான்ஸ், இத்தாலி, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் இந்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன.

உலக அளவில் தனித்து விளங்கும் நாடுகளின் இயற்கை வளம், பாதுகாப்பு, சுற்றுலா மற்றும் பயண சக்தி ஆகியவற்றின் பின்னணியை அறிவதன் மூலம், சர்வதேச வளர்ச்சி மற்றும் புவியியல் சார்ந்த உங்கள் பொதுவறிவை சுவாரஸ்ய நாடுகள் பற்றி மேம்படுத்திக் கொள்ள முடியும்.

logo
Kalki Online
kalkionline.com