இதற்காகவா ஒரு கொலை?

இதற்காகவா ஒரு கொலை?
ஜி.எஸ்.எஸ்.

G.S.SUBRAMANIAN (ஜி.எஸ்.எஸ்.) A postgraduate in Economics, Business Management, Personnel Management and a graduate in law. More than 18,000 articles published in various magazines/newspapers in Tamil and English. More than 250 short stories published under the pen name Arun Charanya. A popular quizmaster and an effective HR trainer for corporates. Author of more than 80 books.

Updated on: 
ஜி.எஸ்.எஸ். 5.

ஆவ்ரில் லாவிக்னே (Avril Lavigne) ஒரு பிரபல பாடகி மற்றும் நடிகை. கனடா நாட்டைச் சேர்ந்தவர். எட்டு முறை கிராமிய விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்.

தனது பதினாறாவது வயதிலேயே இவர் உருவாக்கிய ஆல்பம் இவருக்குப் பெரும் புகழைத் தந்தது. 2002 இல் வெளியான இவரது லெட் கோ என்ற இசை ஆல்பம் இவருக்கு பெரும் புகழை குவித்தது. உலகெங்கும் இவருக்குப் பல ரசிகர்கள் குவிந்தனர். வெறித்தனமாக இவரை விரும்பிய ரசிகர்கள் எக்கச்சக்கம்.

அந்த வெறி காரணமாகவே நாற்பது ஆண்டு சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் சிகாகோவைச் சேர்ந்த ராபர்ட் லியான்ஸ்!

அவர் தன் அம்மாவின் தலையில் ஒரு ஷாம்பெய்ன் பாட்டிலை உடைத்தார். அவர் முதுகில் பலமுறை கத்தியால் குத்திய பின், இறந்து விழுந்த தாயின் உடலில் பல வேதியல் பொருட்களை ஊற்றி விட்டு, பிறகு அங்கிருந்து கவலையே படாமல் கிளம்பி ஒரு உணவகத்துக்கு சென்றிருக்கிறார்.

அம்மாவின் மீது எதற்காக இத்தனை கோபம்? கைது செய்யப்பட்ட மகன் அதற்கான காரணத்தை கூறியபோது அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

ஆனால் அதைக் கூறும்போது மகனின் குரலில் சிறிதும் வருத்தம் புலப்பட்டதாகத் தெரியவில்லை. ' எங்கள் நகருக்கு ஆவ்ரில்லின் இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதாக அறிவிப்பு வந்தது. அதற்குச் செல்ல வேண்டுமென எனக்குத் துடிப்பு ஏற்பட்டது. ஆவ்ரில்  என்றால் எனக்கு அவ்வளவு இஷ்டம். நான் அவரது வெறி பிடித்த ரசிகன். ஆனால் அதற்கு டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்பது எனக்குத் தெரியும்.

என் அம்மாவுக்கு சமூகத்தில் பலருடன் செல்வாக்கு உண்டு. எனவே அந்த இசை நிகழ்ச்சிக்கு எனக்கு சிறப்பு டிக்கெட்டுகள் வாங்கித் தருமாறு கேட்டேன். அவர் தொடர்ந்து மறுத்தார். இது எனக்கு மிகுந்த கோபத்தை கொடுத்தது. இசை நிகழ்ச்சிக்கு இன்னும் சில நாட்களே இருந்தன. அப்போதும் கூட அவர் எனக்கு அந்த நிகழ்ச்சிக்கான நுழைவுக் சீட்டுகளை வாங்கித் தருவதற்கு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதனால் எனக்கு மிகுந்த கோபம் வந்தது. அவரைத் தாக்கி கொன்றேன்' என்றார்.

மருத்துவர்கள் பரிசோதித்தபோது ராபர்ட்டுக்கு லேசான மனநலக் கோளாறு இருப்பது தெரிந்தது. என்றாலும் படுகொலை செய்ததற்கு அது மட்டுமே காரணம் என்பது நிரூபிக்கப்படவில்லை. எனவே அவருக்கு மிக நீண்ட கால சிறை தண்டனை வழங்கப்பட்டது. ஆறு நாட்கள் நடைபெற்றது இந்த வழக்கு. இறுதியில் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக கலந்து பேசி ஒருமித்த முடிவை ஜூரிக்கள் வழங்கினார்கள். நடந்தது அப்பட்டமான படுகொலை என்ற தீர்மானத்தை வெளியிட்டனர்.

ஒரு இசை நிகழ்ச்சிக்குச் செல்ல ஏற்பாடு செய்யாததற்காக சொந்தத் தாயை இந்த அளவுக்கு ஒருவன் கொடூரமாக தாக்கிக் கொல்ல முடியுமா என்பது குறித்துதான் அந்த ஊர் முழுவதும் பல நாட்கள் பேச்சாக இருந்தது.

சமீபத்தில் இந்தியாவில் நடைபெற்ற ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. சமூக ஊடகம் ஒன்றில் நடிகை மீரா சோப்ரா தன் ரசிகர்களுடன் மீராவைக் கேளுங்கள் என்ற நிகழ்ச்சியை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, ஒருவர் 'உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்?' என்று கேட்க, மகேஷ்பாபு என்று விடையளித்தார் மீரா. 'அப்படியானால் உங்களுக்கு ஜூனியர் என்.டி.ஆர் பிடிக்காதா?' என்று வேறு ஒருவர் கேட்க, நான் அவரது ரசிகை அல்ல என்று கூறிவிட்டார் மீரா. அவ்வளவுதான் அவருக்கு எக்கச்சக்கமான மிரட்டல் கடிதங்கள்.

ஜூனியர் என்.டி.ஆரை அவர் அவமானப்படுத்திவிட்டதாகவும் இதனால் அவரைத் தான் கற்பழிப்புக்கப் போவதாகவும் பலர் எழுதியிருந்தனர். சிலர் மீராவையும் அவரது பெற்றோரையும் கொலை செய்யப் போவதாகவும் மிரட்டியிருந்தனர்.

இப்படி முப்பதாயிரம் மிரட்டல் வாசகங்கள் அவருக்கு வந்து சேர்ந்தன. அப்படி எழுதியவர்களின் உணர்வு வேகம் எப்படி இருந்திருக்க முடியும் என்பதையும் அப்போது மீராவை நேரிடையாக அவர்களில் சிலர் சந்தித்தால் என்ன செய்திருப்பார்கள் என்பதையும் யோசித்தால் கவலை ஏற்படத்தான் செய்கிறது. அவர்களில் ஒருவராவது  ராபர்ட் போல நடந்து கொண்டிருக்கக் கூடுமோ?

கலை என்பது மனதை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். இசை என்பது மனதை உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் கலாரசிகன், இசை ரசிகர் ஆகியோர் எல்லை தாண்டிய மனநிலைக்குச் செல்லும்போதுதான் விபரீதங்கள் விளைகின்றன.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com