உலகின் ஆகப் பெரும் இதிஹாஸமான மஹாபாரதத்தின் ஒரு பகுதியாக அமைகிறது பகவத் கீதை. 700 அருமையான ஸ்லோகங்கள் கொண்டது இது.
ஆழம் காண முடியாத அற்புத மெய்ஞானத்தைக் கொண்ட கீதை, பகவான் ஶ்ரீ கிருஷ்ணராலேயே நேரில் அர்ஜுனனுக்கு உபதேசிக்கப்பட்டது.
காலம் காலமாக லக்ஷக்கணக்கானோரை ஆன்மீக உயரத்தில் ஏற்றிய இதன் பெருமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது.
கீதையில் சொல்லப்படும் முக்கியமான கட்டளைகள் பன்னிரெண்டு.
அவற்றைக் கீழே காணலாம்.
1. உத்தரேத் ஆத்மனாத்மானம் (அத்தியாயம் 6, ஸ்லோக எண் 5)
ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
ஆத்ம முன்னேற்றத்திற்கு ஒருவன் முயற்சி செய்து தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும்.
2. உத்திஷ்ட யசோ லபஸ்வ (அத்தியாயம் 11, ஸ்லோக எண் 33)
எழுந்திரு, புகழை அடை. வெற்றி பெறு.
எழுந்திரு. எதிரிகளை வென்று புகழை அடை என்ற கிருஷ்ணனின் உபதேசம் ஆழ்ந்த பொருளைக் கொண்டது. யசஸ் என்ற வார்த்தை ஆழ்ந்த அர்த்தத்தைக் கொண்ட வார்த்தை.
3. க்லைப்யம் மா ஸ்ம கம: (அத்தியாயம் 2, ஸ்லோக எண் 3)
பேடித்தனத்தை அடையாதே!
சோம்பேறித்தனம்,மயக்கம் ஆகியவற்றை உதறித் தள்ளு என்பது கிருஷ்ணனின் உபதேசமாக அமைகிறது.
4. கர்மண்யேவாதிகாரஸ்தே மா பலேஷு கதாசன (அத்தியாயம் 2, ஸ்லோக எண் 47)
கர்மம் செய்யத்தான் உனக்கு உரிமை உள்ளது. ஒரு போதும் அதன் பலனில் இல்லை.
மிக முக்கியமான தத்துவம் இங்கு உபதேசிக்கப்படுகிறது. வேலை செய், வேலை செய் – இதுவே உனக்குள்ள கடமை. அதன் பலனை எதிர்பார்க்காதே.
5. மாம் ஏகம் சரணம் வ்ரஜ (அத்தியாயம் 18, ஸ்லோக எண் 66)
என் ஒருவனையே சரண் அடை.
அற்புதமான இந்த உபதேசம் கடைசியில் கிருஷ்ணரது இறுதி உரையாக அமைகிறது. இறைவனை சரண் அடைந்து விட்டால் மற்றதை அவன் பார்த்துக் கொள்வான்! நேரடியாக இறைவன் கூறும் இந்த உரை மனித குலத்தில் உள்ள ஒவ்வொருவருக்குமான உபதேசம் ஆகும்.
6. ந சாந்திம் ஆப்னோதி காமகாமி (அத்தியாயம் 2, ஸ்லோக எண் 70)
இன்பங்களை நாடும் இச்சை உள்ளவனுக்கு அமைதி கிட்டாது.
7. சம்சயாத்மா வினஷ்யதி (அத்தியாயம் 4, ஸ்லோக எண் 40)
சந்தேகப்படுபவன் அழிந்துபடுவான். சத்திய உரையில் சந்தேகம் கூடவே கூடாது.
8. ச்ரத்தாவான் லபதே ஞானம் (அத்தியாயம் 4, ஸ்லோக எண் 39)
சிரத்தை உள்ளவனுக்கு ஞானம் கிட்டும்.
சிரத்தை என்ற வார்த்தை ஆழ்ந்த பொருள் கொண்டது. உறுதியான நம்பிக்கையோடு இறைவனின் சொற்களை ஏற்று நடப்பவனுக்கு மெய்ஞானம் கிட்டும்.
9. ச்ரேயான் ஸ்வதர்மோ (அத்தியாயம்18, ஸ்லோக எண் 47)
ஒருவன் சொந்த தர்மத்தையே கடைப்பிடிக்க வேண்டும். இது அவனுக்கு வேண்டியதைத் தரும். .
10. ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்கதிம் (அத்தியாயம் 6, ஸ்லோக எண் 40)
எவன் ஒருவன் நல்ல காரியங்களைச் செய்கிறானோ அவனுக்கு துர்கதி என்பதே கிடையாது.
அவன் நல்லதையே அடைவான் – எப்போதும். இது கிருஷ்ண பகவானின் வாக்குறுதி.
11. மாம் அனுஸ்மர, யுத்த ச (அத்தியாயம் 8, ஸ்லோக எண் 7)
என்னை நினை; யுத்தம் செய்!
அற்புதமான இறைவனின் இந்தக் கூற்று பலவித பிரச்சினைகள் நிறைந்த உலக வாழ்க்கையில் ஒருவன் எப்படி நடக்க வேண்டும் என்று சுட்டிக் காட்டுகிறது. அவனை நினைத்து பிரச்னைகளோடு போராடு. அனைத்தும் தீரும் என்பதே அருளுரை.
12. மன்மனா பவ (அத்தியாயம் 9, ஸ்லோக எண் 34)
என்னவனாக ஆகு.
சுருக்கமாக பகவத் கீதையின் மொத்த சாரத்தையும் இந்த இரண்டு சொற்களில் அடக்கி விடலாம். கிருஷ்ணரது மனதிற்குப் பிடித்தவனாக ஆகி விடு. அத்தனை குணங்களையும் கொண்டு விடு என்பதே இதன் பொருள்.
இந்தப் பன்னிரெண்டு கட்டளைகளையும் ஒருவன் தினமும் மனதில் பதித்து அதன்படி நடப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மிகுந்த ஆழ்ந்த அர்த்தங்கள் உள்ள இந்தக் கட்டளைகளே ஒருவனுக்கு இந்த உலகத்தில் அனுபவிக்க வேண்டிய சுகங்களைத் தரும். பரலோக முக்தியையும் அளிக்கும். இதில் ஐயமில்லை. ஏனெனில் இது இறைவனின் வாக்காகும்.