
தனக்கென்று ஒன்றும் இல்லாததாகிய, எதுவும் தேவையில்லாததாகிய ‘நிறைவை‘ ஒருவன் அடைந்து விட்டால் அவன் முற்றிலும் சாந்த வடிவானவானாகத் திகழ்வது சாத்தியம் என்பதற்கு ஸ்ரீரமண மகரிஷி ஒரு சிறப்பான உதாரண புருஷர்.
இத்தகைய பற்றற்ற தன்மை, அவருடைய இளம் வயதிலேயே துளிர் விட்டது. படிப்பில் நாட்டமில்லாமல், 17வது வயதில் ஆன்மிகத் தூண்டுதல் ஏற்பட்டு, ஞானம் தேடி, பயணத்தை அவர் மேற்கொண்டபோது வீட்டாருக்கு எழுதி வைத்த கடிதமே இதை விளக்கும்:
‘‘நான் என் தகப்பனாரைத் தேடிக்கொண்டு, அவருடைய உத்தரவின்படி இவ்விடத்தை விட்டுப் புறப்பட்டு விட்டேன். இது நல்ல காரியத்தில்தான் பிரவேசித்திருக்கிறது. ஆகவே, இந்தக் காரியத்துக்கு ஒருவரும் விசனப்பட வேண்டாம். இதைப் பார்ப்பதற்காகப் பணமும் செலவு செய்ய வேண்டாம்…. இப்படிக்கு….‘‘
ஆரம்பத்தில் 'நான்' என்று துவங்கிய கடிதம், பிறகு ‘இது‘ என்றாகி, இறுதியில் கையொப்பம்கூட இடாமல் முடிவு பெற்றிருக்கிறது! பிறகு ரமணர் திருவண்ணாமலையத் தன் வாழ்விடமாகக் கொண்டார்.
1879, டிசம்பர் 30ம் நாள், சுந்தரமய்யர் – அழகம்மை தம்பதிக்கு திருச்சுழி என்ற ஊரில் அவதரித்தார், பின்னாளில் ரமண மகரிஷி என்று போற்றப்பட்ட வெங்கடராமன்.
திருவண்ணாமலைக்கு வந்து, கோவணாண்டியாய் துறவு வாழ்க்கையை மேற்கொண்ட அவர், வெகு விரைவில் ஆன்மிக அருள் நெறி காட்டும் குருவாக மாறினார். தனக்கென எதையும் வைத்துக் கொள்ளாமல், தனக்கு அளிக்கப்படும் அனைத்தையும் பிறருக்கே தானமளித்து முற்றும் துறந்தவரானார்.
பக்தர்களின் வருகை பெருகவே, அவர்களுடைய வசதிக்காக ஓர் ஆசிரமம் நிறுவப்பட்டது. நூற்றுக் கணக்கில் பக்தர்கள் வந்து அவரை தரிசிப்பதை அறிந்த சில திருடர்கள், ஆசிரமத்திற்குள் செல்வம் நிறைந்திருக்கும் என்று நினைத்தார்கள். ஆகவே உள்ளே புகுந்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டார்கள்.
நள்ளிரவில் ஜன்னல் கண்ணாடி உடைந்த சப்தம் கேட்டுத் திடுக்கிட்டு விழித்தனர் சீடர்கள். அவர்களுடன் எழுந்த ரமணர் திருடர்களைப் பார்த்து விட்டார். உடனே அவர்களிடம், ‘‘திருடிக் கொண்டு போவதற்கு இங்கே என்னப்பா இருக்கிறது? கதவும் திறந்துதான் இருக்கிறது. வீணாக ஜன்னலை உடைத்துக் கையில் வலி ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்களே!‘ என்று கனிவு ததும்பச் சொன்னார். கொள்ளையர்களோ அவரது கருணையைப் புரிந்து கொள்ளாமல், கொள்ளையடிக்க எதுவும் இல்லை என்று தெரிந்து விட்டதால், கோபத்துடன், ஒருசில தட்டு முட்டு சாமான்களை அடித்து உடைத்தார்கள்.
இதற்கிடையில் தைரியசாலிகளான சில சீடர்கள் கொள்ளையர்களை எதிர்க்க முற்பட, அவர்களைத் தடுத்தார் ரமணர். ‘‘வேண்டாம், அவர்களைத் தாக்காதீர்கள். அவர்களுடைய தர்மத்தை அவர்கள் செய்கிறார்கள்; நம் தர்ம வழிப்படி நாம் செல்வோம்,‘‘ என்று சொல்லி ஆறுதல்படுத்தினார்.
ஆனால் கொள்ளையர்களுக்கோ ரமணர் நடிக்கிறார் என்றே தோன்றியது. அவர்களுக்கு மேலும் கருணை காட்டும் வகையில், ‘‘நாங்களெல்லாம் வெளியே போய் விடுகிறோம். நீங்கள் உங்களுக்குத் தேவையானவற்றை எடுத்துச் செல்லுங்கள்,‘‘ என்றும் கூறினார் ரமணர்.
இப்போது உண்மையைப் புரிந்து கொண்ட திருடர்கள், தாம் ஏமாந்ததுக்குப் பழி வாங்க வேண்டும் என்பதற்காக ஆசிரமவாசிகள் ஒவ்வொருவரையும் கட்டைகளால் தாக்கினார்கள். ரமணரின் இடது தொடையில் பலமான அடி விழுந்தது.
‘‘உனக்கு திருப்தி ஏற்படவில்லை என்றால் என் உடலில் பிற பாகங்களையும் அடித்துவிட்டுப் போ, அப்பா,‘‘ என்று வலியற்ற குரலில் சொன்னார் மகரிஷி. கொள்ளையர்கள் அங்கிருந்து வெறுப்புடன் அகன்றார்கள்.
தான் அமர நிலையை அடையப் போகும் சமயம் (11.01.1950), ‘‘நான் இறந்துவிடப் போவதாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் ‘நான்‘ போக மாட்டேன். எங்கேதான் போவேன்? இங்கேதான் இருப்பேன். எங்கிருந்தோ வந்தாலல்லவா வேறெங்கோ போவதற்கு? எங்குமே இருப்பவருக்கு இருக்க இடம் என்று ஏதேனும் உண்டா என்ன?‘‘ என்று கேட்டார் அவர்.
தன் 17வது வயதில் ‘இது‘வாக இருந்த அவர், 71வது வயதில் மீண்டும் ‘நான்‘ ஆகி, அருணாசல ஜோதியுடன் கலந்த அதிசயத்தைக் கண்ட அன்பர்கள் கண் கலங்கி நின்றார்கள்.