
பகவான் ரமண மஹரிஷி தோன்றியதிலிருந்து சமாதி அடைந்தது வரை கணம் தோறும் நிகழ்ந்த அற்புதங்கள் ஏராளம். அவரே அருளிச் செய்த பாடல்களும் உபதேசங்களும் ஏராளம். இப்படி உபதேசத்தோடு பல கதைகளையும் அவர் அவ்வப்பொழுது கூறி பெரும் உண்மைகளை விளக்கி இருக்கிறார். இவை அனைத்தையும் ரமண இலக்கியத்தில் காணலாம். எடுத்துக்காட்டிற்கு ஒரு கதை:
பக்தர்களிடம் அருணாசல லிங்கம் முதன் முதலில் தோன்றியது மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திர நன்னாளில் என்று விளக்கிய ரமண மஹரிஷி ஶ்ரீ ராமனை பார்வதி தேவி சோதித்துப் பார்த்த கதை ஒன்றை விவரித்தார்.
ஶ்ரீ ராமனும் லக்ஷ்மணனும் காடுகளில் சீதையைத் தேடி அலைந்து கொண்டிருந்தனர். அப்பொழுது ராமன் சோகத்தால் மிக வாடியவனாகக் காணப்பட்டார். இந்நிலையில் சிவபெருமானும் பார்வதி தேவியும் அவ்வழியே எதிரே வந்து கொண்டிருந்தனர். அவர்களருகே வந்ததும் சிவபெருமான் ராமனை வணங்கி மேலே சென்றார்.
பார்வதி தேவி ஆச்சரியமுற்று, 'அகில லோகநாதனும் தேவர்கள் அனைவராலும் வணங்கப் பெறும் சிவபிரான் ஏன் மனைவியைத் தேடி அலையும் ராமனை வணங்க வேண்டும்?' என்று எண்ணி அதை சிவனிடமே கேட்டு விட்டாள்.
சிவபிரான், “மனித வடிவு கொண்ட ராமன் மனிதனைப் போன்றே நடித்தாலும் அவன் மஹாவிஷ்ணுவே தான். இது பற்றி உனக்குச் சந்தேகம் இருந்தால் நீயோ சோதித்துப் பாரேன்” என்றார்.
உடனே பார்வதி தேவி சீதையைப் போல தன்னை உருமாற்றிக் கொண்டு, ராமன் எதிரே தோன்றினாள். அவளைப் பார்த்ததும் ராமன் புன்முறுவல் பூக்க, “ஏனம்மா, ஸதி! இங்கே எங்கே வந்தாய். சிவன் எங்கே? நீ ஏன் இப்படி உன்னை உருமாற்றிக் கொண்டாய்?” என்று கேட்டார். பார்வதி தேவி வெட்கம் அடைந்து சிவனுக்கும் தனக்கும் இடையே நடந்த உரையாடலை விவரித்தாள்.
உடனே ராமன், “நாங்கள் யாவரும் சிவபிரானின் அம்சங்களே ஆவோம். நேரில் காணும் போது அவரைப் பணிவோம். மற்ற நேரங்களில் அவரை ஸ்மரித்துக் கொண்டே இருப்போம்” என்றார்.
'ஏக ஏவ மஹாவிஷ்ணு; சிவஞான மஹோததி' (மஹா விஷ்ணு ஒருவரே சிவஞானப் பெருங்கடல் ஆவார்) என்ற ஆன்றோர் வாக்கை இப்படி அழகுற கதை மூலம் விளக்கினார் பகவான் ரமணர்.
பகவான் ரமணரின் பெருமை:
பகவானை முதலில் மஹரிஷி என்று இனம் கண்டு அவருக்கு ரமணர் என்ற பெயரைச் சூட்டிய பெரும் முனிவரான காவிய கண்ட கணபதி சாஸ்திரி ஒரு முறை கூறினார் இப்படி: “சாதனையில் ஈடுபட்டு மிகமிக உயரிய நிலையை அடைந்தவருக்கு சக்தி, சாந்தம் என இருவித அனுபவம் உண்டாகும். அந்த சக்தி வந்ததும் அவர்கள் ஆடல் பாடலில் ஈடுபடுவது, திக் விஜயம் செய்வது போன்ற செயலில் ஈடுபடுவர். புத்தர் இந்த நிலையில் தான் மத ஸ்தாபனம் செய்தார்.. சங்கரர் திக் விஜயம் செய்தார். விவேகானந்தர் சிகாகோ சென்று உலகையே வென்றார் ஆனால் பகவானோ சக்தியை வெளிக்காட்டாமல் உள்ளடக்கி மலையை விழுங்கிய மகாதேவனாக இருக்கிறார்” - இப்படிக் கூறி அவர் ஆச்சரியப்பட்டார்.
அரவிந்தரோ ரமணரைப் பற்றி கூறுகையில் அவர் யோகிகளில் ஒரு ஹெர்குலிஸ் என்றும் அவரது தவமே இந்திய வெற்றிக்கு வழி வகுத்தது என்றும் கூறினார்.