

ஆடி அமாவாசை நாளன்று அப்பருடைய பக்தியை மெச்சி சிவபெருமான் திருக்கைலாயக் காட்சியை திருவையாற்றில் கொடுத்தார். அதை பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.
சைவ சமயக் குரவர்கள் நால்வரில் ஒருவராகப் போற்றப்படுபவர் அப்பர் (திருநாவுக்கரசர்) ஆவார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகவும் போற்றப்படுகிறார். இவரின் இயற்பெயர் மருள்நீக்கியார். இவர் 7 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர், 63 நாயன்மார்களில் ஒருவராகவும், தேவாரப் பாடல்களைப் பாடிய மூவரில் ஒருவராகவும் விளங்குகிறார்.
திருஞானசம்பந்தர் தன்னைவிட வயதில் மூத்தவரான திருநாவுக்கரசரை 'அப்பர்' (தந்தை) என்று அன்போடு அழைத்ததால் அப்பெயர் நிலைபெற்றது என்பது வரலாற்றுச் செய்தியாகும்.
உமையம்மை இவருக்கு சிவஞானம் கலந்த ஞானப்பாலை ஊட்டியதால் மூன்று வயதிலேயே இறைவனைப் போற்றிப் பதிகம் பாடும் திறனைப் பெற்றவர். தமிழில் 'தாண்டகம்' என்னும் பா வகையை அதிகம் பாடியதால் இவர் ‘தாண்டகவேந்தர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.
இவர் தனது வாழ்நாளில் பல இன்னல்களைக் கடந்தும், சிவபெருமான் மீதான அளவு கடந்த அன்பினால் சைவ சமயத்தை நிலைநிறுத்தினார். இவரின் தமக்கை திலகவதியார் காட்டிய வழியில் சைவம் தழுவி, சிவனடியார்களுக்குத் தொண்டு செய்தார். சிவத்தலங்களில் தூய்மைப் பணிகளைச் செய்யும் 'உழவாரப் பணி'யை இவரே முதன் முதலில் தீவிரமாகத் தொடங்கினார். அதாவது, கைகளில் உழவாரம் ஏந்தி, சிவன் கோவில்களில் உள்ள புற்களை நீக்கித் தூய்மை செய்யும் உழவாரப் பணியை தமிழ்நாட்டில் முதன் முதலில் தொடங்கி வைத்தார்.
வயது முதிர்ந்த நிலையிலும் கைலாயம் செல்ல முயன்ற இவருக்கு, இறைவன் திருவையாண் குளம் ஒன்றில் தோன்றி திருக்கைலாயக் காட்சியை வழங்கியதாக வரலாறு கூறுகிறது.
சிவபெருமான் மீது அளவுகடந்த பக்தி கொண்டிருந்த அப்பர், கயிலாய மலையில் சிவபெருமானை நேரில் தரிசிக்க அவரது கண்களும்; உள்ளமும் ஏங்கின. கயிலையைத் தரிசித்தே தீருவது என்ற உறுதியுடன் வடதிசை நோக்கித் தம்முடைய பயணத்தினைத் தொடர்ந்தார். அந்த பயணம் மிகவும் கடுமையாக இருந்தது.
மலைகள், காடுகள், ஆறுகள் என பல தடைகளை சந்தித்தார். வயது முதிர்ந்த காலத்திலும், சிவபெருமானை தரிசிக்க வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தார்.
அப்போது சிவபெருமான், முனிவர் வடிவில் தோன்றி, அப்பரிடம், ‘மனித உடலுடன் கயிலாயத்தை அடைவது எளிதல்ல. அருகில் உள்ள இந்த பொய்கையில் நீராடுங்கள்’ என்றார்.
அப்பரும் இறைவனின் கட்டளையை ஏற்று, பொய்கையில் மூழ்கினார். அடுத்த கணமே திருவையாறு திருத்தலத்தில் எழுந்தார். அப்போது திருவையாறே கயிலாயமாக மாறி இருந்தது.
சிவபெருமான் ரிஷப வாகனத்தில் உமாதேவியுடன் அருள்பாலித்தார். தேவர்கள், முனிவர்கள் என அனைவரும் இறைவனை போற்றும் தெய்வீக தரிசனம் அப்பருக்கு கிடைத்தது.
இந்த அற்புத தரிசனத்தை கண்ட அப்பர், ‘மாதர்ப் பிறைக் கண்ணியானை...’ என தொடங்கும் தேவாரப் பாடலை பாடினார். இது நடந்தது ஆடி அமாவாசை நாளன்றுதான். அப்பருடைய பக்தியால் திருக்கைலாயத்தையே திருவையாறுக்கு கொண்டு வந்த இந்த நிகழ்வைக் கேட்கும்போது மெய்சிலிர்க்கிறது அல்லவா?
இதை நினைவு கூரும் வகையில், இச்சிறப்புமிக்க ஐதீக விழா ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் அமாவாசை அன்று சிவத்தலங்களில், குறிப்பாக திருவையாறில் உள்ள அறம் வளர்த்த நாயகி உடனுறை ஐயாறப்பர் கோவிலில் ‘அப்பர் கண்ட கயிலை காட்சி’ வெகு விமரிசையாக கொண்டாடப் படுகிறது. இவ்விழாவில் திருக்கயிலாயக் காட்சியை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு தரிசனம் செய்கின்றனர்.
அப்பர் பெருமானின் பக்திப் பெருமையை இத்திருவிழா நினைவூட்டுகிறது.
ஆடி அமாவாசையான இன்று (12.8.26) இவ்விழா திருவையாறு உள்ளிட்ட அனைத்து சிவன் கோவில் களிலும் நடைபெற உள்ளது. இவ்விழாவைக் காண்பவர்கள் திருக்கயிலையைக் கண்ட பேற்றை அடைவார்கள் என்பது நம்பிக்கை!