

தமிழ் நாட்காட்டியின்படி நான்காவது மாதமான ஆடி மாதம் ஆன்மீக வழிபாட்டிற்கும், இயற்கைக்கும் பெயர் பெற்றதாகும். ஆன்மீக வழிபாட்டிற்கு குறிப்பாக அம்மன் வழிபாட்டிற்கு உகந்த மாதமான ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், ஆடிக்கிருத்திகை, ஆடிப்பெருக்கு, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் போன்ற முக்கிய விழாக்களும் கொண்டாடப்படுகின்றன. இருப்பினும், தெய்வ வழிபாட்டிற்கு சிறந்த மாதமான ஆடிமாதத்தில் புதிய சுபகாரியங்கள் மற்றும் திருமணங்கள் செய்ய தவிர்க்கப்படுகிறது.
ஆடி மாதத்தில் முழுவதும் அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நாட்களாக இருந்தாலும் அந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மற்றும் செவ்வாய் கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளும் சக்தி தேவியான அம்மனுக்கு மிகவும் உகந்தவை. பெண்கள் திருமணத் தடை நீங்கவும், கணவரின் ஆயுள் மற்றும் மாங்கல்ய பலம் பெருகவும், குடும்ப நலம் காக்கவும் விரதம் இருந்து வழிபடுவார்கள்.
மேலும் ஆடி வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் விரதம் இருந்து அம்மன் கோவில்களில் கூழ் படைத்தல், மாவிளக்கு ஏற்றுதல், மற்றும் சிறப்பு பூஜைகள் செய்வது வழக்கம்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் பெண்கள் அதிகாலையில் எழுந்து குளித்துவிட்டு வாசல் தெளித்து மாக்கோலமிட்டு வீட்டை துடைக்க வேண்டும். வேப்பிலையை நிலை வாசலில் கட்ட வேண்டும். பின்னர் வீட்டின் பூஜை அறையை சுத்தம் செய்து, அம்மன் திருவுருவப் படத்திற்கு குங்குமம், பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். விளக்கேற்றி, லலிதா ஸஹஸ்ரநாமம் அல்லது அம்மன் துதிகளைப் பாராயணம் செய்து, கூழ், பொங்கல் அல்லது பழங்களை நிவேதனமாகப் படைத்து வழிபட வேண்டும். அன்றைய தினம் அருகில் உள்ள அம்மன் கோவில்களுக்குச் சென்று தரிசிப்பது வழக்கம்.
ஆடி மாதத்தில் வரும் அனைத்து வெள்ளிக்கிழைகளிலும் வழிபாடு செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வெள்ளிக்கிழமையிலாவது வழிபாடு செய்யலாம். திருமணத் தடை, குழந்தை பாக்கியம், மாங்கல்ய தோஷம் முதலானவை நீங்கி நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும் வல்லமையை அன்னை பராசக்தி அருளிடுவாள்.
ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் அம்மன் வழிபாடு செய்து, சுமங்கலிகளுக்கு புடவை, ஜாக்கெட் முதலான மங்கலப் பொருட்களும் சேர்த்துக் கொடுப்பது தாலி பாக்கியத்தை நிலைக்கச் செய்யும். கணவரின் ஆயுள் பெருகும். குடும்பத்தில் ஐஸ்வர்யத்தை நிலைக்கச் செய்யும். தடைப்பட்ட மங்கல - சுப காரியங்கள் அனைத்தும் தங்கு தடையில்லாமல் விரைவில் நிகழும்.
ஆடி வெள்ளி கிழமையில் காலை 10.30 மணி முதல் 12 மணி வரை ராகு காலமாகும். அதனால் வழிபாடு மேற்கொள்பவர்கள் காலை 9.15 மணி முதல் 10.15 வரையும், மாலையில் 04.45 மணி முதல் 05.45 மணி வரையும் வழிபாடு செய்யலாம்.
பொதுவாக வெள்ளிக்கிழமை ஆன்மிக வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாகும். அதுவும் ஆடி மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில் சில விஷயங்களை செய்யலாம். சில குறிப்பிட்ட விஷயங்களை கண்டிப்பாக செய்யக்கூடாது என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
செய்ய வேண்டியவை :
* ஆடி வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் மகாலட்சுமி அஷ்டோத்திரம் சொல்லி செந்தாமரை மலர் கொண்டு அர்ச்சனை செய்தால் தனலாபம் கிடைக்கும்.
* ஆடி வெள்ளிக்கிழமையில் பசுவிற்கு பூஜை செய்வது மிகவும் சிறப்பான பலன்களை தரும்.
* ஆடி வெள்ளிக்கிழமை அன்று வீட்டிற்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு கண்டிப்பாக பூ, குங்குமம், மஞ்சள், புடவை அல்லது ஜாக்கெட் பிட் கொடுத்து அனுப்ப வேண்டும்.
* உங்களால் முடிந்த அளவு உணவு தானம் செய்ய வேண்டும்.
* ஆடி வெள்ளியன்று புதிய வீட்டிற்கு பால் காய்ச்சுவதோ அல்லது வாடகை வீட்டிற்கு குடிபோவதோ கூடாது.
* ஆடி வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு உணவளிப்பதாலும் வீட்டில் செல்வம் சேரும்.
* வெள்ளிக்கிழமை கல் உப்பினை வாங்கினால், நமக்கு இரட்டிப்பு பலன் கிடைப்பதோடு, நமது வீட்டிலும் லட்சுமி கடாட்சம் எப்போதும் நிறைந்து இருக்கும் என்பது நம்பிக்கை.
* ஆடி மாதம் முழுவதும் சுப காரியங்களைத் தவிர்ப்பது வழக்கம். குறிப்பாக ஆடி வெள்ளிக்கிழமைகளில் சுப நிகழ்வுகளைப் பேசவோ அல்லது செய்யவோ கூடாது.
செய்யக்கூடாதவை:
* ஆடி மாதம் முதல் நாளில் சில பொருட்களை வாங்கக் கூடாது. ஆடி மாதம் முதல் நாள் மங்களகரமான பொருட்களை வாங்கி நன்மைகளை பெறுவது எவ்வளவு முக்கியமோ அதே அளவு சில பொருட்களை தவறியும் கூட வாங்கி விடக்கூடாது. அந்த வகையில் இந்தாண்டு ஆடி மாதம் வெள்ளிக்கிழமை அன்று பிறப்பதால் அன்றைய தினம் இரும்பு பொருட்கள், கத்திரிக்கோல், ஊசி மற்றும் கத்தி போன்ற கூர்மையான ஆயுதங்களை மறந்தும் கூட விலைக்கு வாங்காதீர்கள்.
* கருப்பு நிற ஆடைகள் அல்லது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கக்கூடிய உடைந்த, பழைய பொருட்களை வாங்குவதையும் முற்றிலும் தவிர்க்கவேண்டும். இவை குடும்பத்தில் தேவையற்ற சண்டைகளையும், பண நஷ்டத்தையும், துரதிர்ஷ்டத்தையும் கொண்டு வரும்.
* வெள்ளிக்கிழமையன்று முடி வெட்டவோ, நகம் வெட்டவோ கூடாது.
* ஈரத்துணி அணிந்துக் கொண்டும், ஈரமான தலையுடனும் பூஜை செய்யக்கூடாது.
* கூந்தலை விரித்து போட்டு இருக்கக்கூடாது.
* ஆடி வெள்ளிக்கிழமை அசைவம் சாப்பிடக்கூடாது. மது மற்றும் போதை வஸ்துக்களை உபயோகிக்கக்கூடாது.
* வீட்டில் விளக்கு ஏற்றிய பின்பு உப்பு, தயிர், ஊசி மற்றும் பணம் போன்றவற்றை யாருக்கும் கடனாகக் கொடுக்கவோ வாங்கவோ கூடாது.
* ராகு கால நேரத்தில் வீட்டில் விளக்கேற்றுவதைத் தவிர்க்க வேண்டும்.
* இரவு நேரத்தில் வீட்டைப் பெருக்கி குப்பையை வெளியில் கொட்டுவதைத் தவிர்க்க வேண்டும்.
* பூஜை செய்யத் தேவையான பொருட்களை வெள்ளிக்கிழமைகளில் சுத்தம் செய்யக் கூடாது.
* வெள்ளக்கிழமை மாலை நேரத்தில் வீட்டை இருள் சூழ்ந்ததாக வைத்திருக்கக் கூடாது.
* வெள்ளிக்கிழமையில் அழுக்கு துணிகளை சேர்த்து வைக்கக் கூடாது. கடன் சுமை அதிகரிக்கும்.