திருச்சுரம் என்று பல்லாண்டுகளாய் அழைக்கப்பட்டு வந்த திரிசூலம் கோவிலைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் சுற்றிப்பார்க்கப் போகிறோம்.
'சுரம்' என்றால் வளம் நிறைந்த மலை என்று பொருள். நம் சென்னையில் விமான நிலையத்துக்கு எதிரே அமைந்துள்ளது திரிசூலம். நான்கு குன்றுகளின் நடுவே இக்கோவில் அமைந்துள்ளது. நான்கு குன்றுகளும் நான்கு வேதங்களையும், நடுவில் உள்ள ஈசன் அந்த நான்கு வேதத்தின் உட்பொருளாகவும் இருக்கிறார் என்பதையும் உணர்த்துவதற்காகவே இக்கோவில் இவ்விடம் அமைந்திருப்பதாக நம்பப்படுகிறது.
இப்பகுதியில் 1901ஆம் ஆண்டு நடந்த அகழாய்வில் 14 கல்வெட்டுகள் கிடைத்துள்ளன. அவற்றுள் பழைமையானது பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் குலோத்துங்கன் காலத்துக் கல்வெட்டாகும். இதன்படி பார்த்தால் பதினோராம் நூற்றாண்டிற்கு முன்னரே ஒரு பல்லவ மன்னர் இங்கு முதன் முதலில் கோவில் கட்டி இருக்கலாம் என்பது உறுதியாகிறது. ‘பல்லவபுரமான சதுர்வேதி மங்கலம்’ என்று இந்த இடம் அழைக்கப்பட்டு வந்திருக்கிறது. முதலாம் குலோத்துங்கர் இந்தக் கோவிலுக்கு நிலமும் செல்வமும் தேவ தானமாக அளித்து ‘திருநீற்றுச் சோழநல்லூர்’ என்று இதன் பெயரையும் மாற்றி உள்ளார். அதன் பிறகு வந்த பல சோழ மன்னர்கள் இக்கோவிலுக்கு திருப்பணிகள் செய்துள்ளதையும் அறிய முடிகிறது.
‘சோழ வளநாட்டு திருச்சுரம்’ என்று சில காலங்கள் வழங்கப்பட்டு வந்த இக்கோவிலின் பெயர் காலப்போக்கில் திரிசூலம் என்று மாறி இருக்கலாம் என்று கூறுகின்றனர். இவையெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.
புராணப்படி பார்த்தால், தன்னுடைய அகந்தை அழிய வேண்டும் என்பதற்காக பிரம்மதேவர் சிவனுக்காக எழுப்பி வழிபட்ட ஆலயம் தான் இது என்ற தகவல் நமக்கு கிடைக்கிறது. பிரம்ம தேவர் ஸ்தாபித்த லிங்கம் என்பதால் இந்த திரிசூலநாதருக்கு பிரம்மபுரீஸ்வரர் என்ற நாமமும் உண்டு. இங்கு உள்ள தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று வழங்கப்படுகிறது.
கொடி மரத்தை தரிசித்து விட்டு நந்தி அனுமதி பெற்று கோவிலுக்குள் பிரவேசித்தால் கிழக்கு நோக்கி வீற்றிருக்கிறார் திரிசூலநாதர். கருவறையில் அவருக்கு பக்கத்திலேயே சவுந்தராம்பிகை அம்மையும் சிலாரூபமாக அருள் பாலிக்கிறாள்.
அடுத்தபடியாக நாக யக்ஞோபவீத கணபதி என்ற அபூர்வமான விநாயகரை தரிசிக்கலாம். நாகத்தைப் பூணூலாகத் தரித்துள்ளபடியால் இவர் நாக யக்ஞோபவீத கணபதி ஆகிறார். குண்டலினி சக்தியை மேலெழுப்பும் விநாயகராக இவர் அறியப்படுகிறார். ராகு கேது தோஷம் உள்ளவர்களுக்கு அருள் பாலித்து நற்கதி தருகிறார் இந்த கணபதி.
அவருக்கு அடுத்தபடியாக தெற்கு நோக்கி தட்சணாமூர்த்தி அமர்ந்திருக்கிறார். இவரும் சிறப்பு வாய்ந்த வடிவத்தில் தான் இங்கே காட்சி தருகிறார். வலது செவியில் மகர குண்டலமும் இடது செவியில் பத்ர குண்டலமும் அணிந்து வலது காலை முயலகன் மீது அழுத்தியும் இடது காலை குத்திட்டு வைத்துக் கொண்டும் வீராசன தட்சணாமூர்த்தியாக அர்த்தநாரி வடிவில் இங்கே அருள் பாலிக்கிறார்.
பிரகாரத்தில் அடுத்தபடியாக ஸ்ரீநிவாசரும், காசி விஸ்வநாதர் விசாலாட்சியும், வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியரும் பக்தர்களுக்கு அருள் புரிகின்றனர்.
முத்துக்குமாரசுவாமி அடுத்தபடியாக தனிச்சன்னதியில் காட்சி தருகிறார். வழக்கமாக முருகரின் மயில் வலப்புறம் நோக்கித் தானே இருக்கும். ஆனால் இங்கே முத்துக்குமார சுவாமியின் மயில் இடப்புறமாக நோக்கி இருக்கிறது. அவரும் ஒரு காலைச் சற்று தூக்கியபடி பறக்க ஆயத்தமாக காட்சி தருகிறார்.
லிங்க வடிவிலான மார்க்கண்டேயர், சமயக்குரவர் நால்வர், விஷ்ணு துர்க்கை, ஆதிசங்கரர் ஆகியோரை அடுத்தடுத்தபடியாக தரிசித்துவிட்டு சண்டிகேஸ்வரரிடம் வருகைப் பதிவும் செய்து கொண்டு தல விருட்சமான மரம் மல்லி மரத்தை ஒரு சுற்று சுற்றிக் கொண்டு தெற்கு நோக்கி எழில் கோலமாய் அருள் பாலிக்கும் திரிபுரசுந்தரி அம்மையிடம் வரலாம். ஞானத்தையும் செல்வத்தையும் ஒரு சேர அருளும் அம்மையை வணங்கிவிட்டு, கட்டிடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் உதாரணமாக விளங்கும் வகையில் கோவில் மாடத்திலும் கோபுரத்திலும் செதுக்கப்பட்டிருக்கும் தெய்வத்திருமேனிகளை ரசித்துவிட்டு மனநிறைவோடு வெளியேறலாம்.
இதில் கட்டாயம் கவனிக்க வேண்டிய ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் ஈசன் அமர்ந்திருக்கும் கருவறையின் மண்டபம் யானையின் பின்புற வடிவத்தில் அமைக்கப்பட்டுள்ளது தான். கஜபிருஷ்ட வடிவம் என்று இந்த அமைப்பு குறிப்பிடப்படுகிறது. வேறெங்கிலும் காண முடியாத தனிச்சிறப்பாகும் இது.
திரிசூலம் ரயில் நிலையம் அல்லது திரிசூலம் விமான நிலைய பேருந்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கோவிலை சுலபமாக அடையலாம். ஷேர் ஆட்டோ வசதி உண்டு. சொந்தக் காரில் போவதானால் சாலைகள் சற்று குறுகல்தான். வில்வம் மலர்கள் அர்ச்சனை தட்டு வாங்குவதற்கு கோவிலின் எதிரில் சில கடைகள் உள்ளன.
இறைவன் அழைப்பில் கட்டாயம் போய்வாருங்கள். அம்மையப்பர் அருள் பெறுங்கள்.
சிவாய திருச்சிற்றம்பலம்.