

ஆந்திரமாநிலத்தில் நந்தியால் (முந்தைய கர்னூல் மாவட்டம்) மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான நல்லமலா மலைத்தொடரில் (Nallamala Hills) அமைந்துள்ளது அஹோபிலம் எனும் புனிதத்தலம். அஹோபிலம் கீழ், அஹோபிலம் மேல் என அஹோபிலம் இரண்டாகப் பிரித்து அறியப்படுகிறது. இப்பகுதியில் நவநரசிம்மர்கள் பல இடங்களில் எழுந்தருளி சேவை சாதித்து வருகிறார்கள். அஹோபிலம் மலையும் மலை சார்ந்த பகுதி என குறிஞ்சி நிலப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதியில்தான் ஸ்ரீநரசிம்மர் இரணியனை வதம் செய்து அழித்தார்.
இரணியகசிபுவை வதம் செய்வதை பார்த்துக் கொண்டிருந்த முப்பத்துமுக்கோடி தேவர்களும் நரசிம்ம ஸ்வாமியின் உக்ரத்தைக் கண்டு பயந்து “அஹோவீர்யம் அஹோசௌர்யம் அஹோபாஹ பராக்ரம: நரசிம்மம் பரம் தெய்வம் அஹோபலம் அஹோபிலம்” என்ற கோஷம் எழுப்பியதாகவும் அதனால் இப்பகுதிக்கு அஹோபிலம் (Ahobilam Temple - Nava Narasimha) என்ற பெயர் உண்டானதாகவும் கூறப்படுகிறது.
ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள இரண்டு திவ்ய தேசங்களில் ஒன்று திருமலை திருப்பதி. மற்றொன்று அஹோபிலம்.
திருமங்கையாழ்வார் அஹோபிலத்தை 'சிங்கவேள்குன்றம்' என அழைக்கிறார். ஆழ்வார்களில் திருமங்கையாழ்வார் மட்டுமே அஹோபில ஷேத்திரத்தின் மகிமையை பெரிய திருமொழியில் பத்து பாசுரங்களாய் பாடியுள்ளார்.
ஆதிசேஷன் ரூபத்தில் காணப்படும் இம்மலைத்தொடரின் தலைப்பகுதி 'திருமலை' எனவும் உடல்பகுதி 'அஹோபிலம்' எனவும் வால்பகுதி 'ஸ்ரீசைலம்' எனவும் அற்புதமாகத் திகழ்கிறது.
கிருதாயுகத்தில் சிவபெருமானும் திரேதாயுகத்தில் ஸ்ரீராமபிரானும் சீதாப்பிராட்டியும், துவாபரயுகத்தில் பாண்டவர்களும் அஹோபிலத்திற்கு வந்து நரசிம்மரை வழிபட்டதாக ஐதீகம்.
மலை அடிவாரமானது கீழ் அஹோபிலம் எனவும் அடிவாரப்பகுதியிலிருந்து சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவில் சுமார் மூவாயிரம் அடி உயரத்தில் அமைந்த மலைப்பகுதிகள் மேல் அஹோபிலம் எனவும் அழைக்கப்படுகின்றன.
கிருதயுகத்தில் இப்பகுதியானது அசுரர்களின் தலைவனான இரண்யகசிபுவின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியாக இருந்துள்ளது. இங்குதான் ஆயிரம் தூண்களைக் கொண்ட இரணியகசிபுவின் அரண்மனை இருந்துள்ளது.
கருடபகவான் மகாவிஷ்ணுவிடம் நரசிம்மாவதாரத்தை தரிசிக்க விரும்புவதாக விண்ணப்பிக்க அவரும் அஹோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடபகவானுக்கு காட்சி கொடுத்தருளினார். கருடபகவான் ஒன்பது நரசிம்ம மூர்த்தங்களையும் பூஜித்து வழிபட்டதாக ஐதீகம்.
அஹோபிலத்தில் நவநரசிம்மர்களும் நவகிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்திகள் காட்சி தருவது தனிச்சிறப்பாகும்.
மகாவிஷ்ணு தன் பக்தனான பிரஹலாதனுக்காக நரசிம்ம அவதாரம் எடுத்து இரணியனை வதம் செய்த இடம் இதுவே. அஹோபிலத்தின் அமைந்துள்ள மலையில் நரசிம்மர் வெளிப்பட்ட தூண் உள்ளது. இதை உக்ர ஸ்தம்பம் என்று அழைக்கிறார்கள்.
அஹோபிலத்தைப் பற்றிய குறிப்புகள் விஷ்ணுபுராணம், வாயு புராணம், பிரம்மாண்ட புராணம், அக்னி புராணம், மத்ஸ்ய புராணம், நரசிம்ம புராணம், கூர்ம புராணம், பாகவத புராணம் என பல்வேறு புராணங்களில் காணப்படுகின்றன.
அஹோபிலத்தில் அமைந்துள்ள நவநரசிம்ம ஷேத்ரங்களை ஒரே நாளில் தரிசித்தால் நவக்கிரங்களை ஒன்றாக தரிசித்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.
கீழ் அஹோபிலத்தில் அமைந்துள்ள பிரகலாத வரத லஷ்மி நரசிம்மர் ஆலயத்தில் பதினாறாம் நூற்றாண்டைச் சேர்ந்த விஜயநகர மன்னர்களின் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. கிருஷ்ணதேவராயர் தனது படையெடுப்பிற்கு முன்னும் பின்னும் அஹோபிலத்திற்கு வந்து இந்த கோயிலில் தரிசனம் செய்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
மேல் அஹோபிலப் பகுதியில் முதலில் அமைந்துள்ள அஹோபில நரஸிம்மர் எனும் உக்ர நரஸிம்மர் ஸ்தலத்தில் ஆதிசங்கரர் நரசிம்ம சுதர்சன சக்கரத்தை பிரதிஷ்டை செய்துள்ளார். மேலும் இந்த ஸ்தலத்தில் சிவலிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ளார்.
அஹோபிலத்தில் வேதமலை மற்றும் கருடமலை என இரண்டு பெரிய மலைத்தொடர்கள் அமைந்துள்ளன. இவற்றின் இடையில் பவநாசினி ஆறு ஓடுகிறது. பவநாசினி ஆற்றைக் கண்களால் காண்பவன் முற்பிறவிகளில் செய்த அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபடுகிறான். நரசிம்ம ஸ்வாமியை வணங்கி பவநாசினித் தீர்த்தத்தை தலையில் தெளித்துப் கொள்ளுபவர் கங்கை நதியில் ஸ்நானம் செய்த முழுபலனையும் அடைவதாக ஐதீகம். பவநாசினி ஆற்றின் தீர்த்தத்தைக் கொண்டு சாளக்கிராம பூஜை செய்து அதைப் பருகுபவர் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்து விடுபடுவார்கள்.