ஐப்பசி பௌர்ணமி அன்னாபிஷேகம் 2026: கோடி சிவலிங்க தரிசன பலன் பெற சிவனை எப்படி வழிபட வேண்டும்?

பஞ்சபூத தத்துவமும் சந்திரன் சாப நிவர்த்தியும் இணைந்த அன்னாபிஷேக வழிபாட்டின் முழுமையான ஆன்மீகப் பலன்கள்!
அன்னாபிஷேகம் 2026 - Aippasi Pournami Shiva Pooja
அன்னாபிஷேகம் 2026 - Aippasi Pournami Shiva PoojaImage credit: Gemini
கே.எஸ்.கிருஷ்ணவேனி

Iam a graduate from Vaishnav College in the year 1984. My writings were published in Mangayar Malar,Aval Vikadan,Kumudham Sneghethi since 1992 and received many prizes. Now I am writing in Kalki Publications. Cooking, writing, playing Shuttle cock & making fur dolls are my passions.

Updated on: 

2026 ஆம் ஆண்டு ஐப்பசி மாத அன்னாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை - 25 அன்று வருகிறது. ஐப்பசி அன்னாபிஷேகம் என்பது ஐப்பசி மாத பௌர்ணமி திதியில் உலகில் உள்ள அனைத்து உயிர்களுக்கும் உணவளிக்கும் சிவபெருமானுக்கு, நன்றிக்கடனாக அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடும் ஒரு முக்கிய ஆன்மீக வழிபாடாகும்.

அன்னாபிஷேகம் 2026;

ஐப்பசி பௌர்ணமி நாளன்று மாலையில் சாயரட்சை பூஜையின் போது சிவலிங்கத்திற்கு பால், தயிர், தேன், சந்தனம் போன்ற பொருட்களால் அபிஷேகம் செய்து அதன் பிறகு புதிதாக வடித்து ஆறவைத்த சாதத்தால் சிவலிங்கத் திருமேனி முழுவதையும் மறைக்கும்படி காப்பு போல மூடி முழுமையாக அலங்காரம் (அன்னாபிஷேகம்) செய்வார்கள். அதன் மேல் காய்கறிகள், பழங்கள் மற்றும் மலர்களைக்கொண்டு அலங்கரித்து மகாதீபாராதனை காட்டப்படும்.

உணவு என்பது வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளில் ஒன்று. அது ஒவ்வொரு உயிரினத்தையும் நிலை நிறுத்த உதவுகிறது. இது சிவ வழிபாடு, உணவுக்கான நன்றி உணர்வு, வளம் வேண்டி பிரார்த்தனை செய்வது மற்றும் அந்த அன்னத்தை பிரசாதமாக பகிர்ந்தளிப்பது போன்றவற்றை ஒன்றிணைக்கும் ஒரு செயலாகும்.

ஐப்பசி பௌர்ணமி அன்று அன்னாபிஷேகம் செய்வது ஏன்?

ஐப்பசி பௌர்ணமி நாளில் சந்திரன் தனது சாபங்கள் முழுமையாக நீங்கி, 16 கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார். அரிசி சந்திரனுக்குரிய தானியமாகும். காசியில் அன்னபூரணி தேவி அன்னாபிஷேகம் செய்து சிவபெருமானின் பிரம்மஹத்தி தோஷத்தையும், பிச்சாடனர் கோலத்தின் அகந்தையையும் நீக்கிய நாள் இது என்பது ஐதீகம்.

பஞ்சபூதங்களின் தத்துவம்:

நிலத்தில் விளைந்த நெல், அரிசியாகி நீரில் வெந்து, தீயில் அன்னம் ஆகிறது. இது பஞ்சபூதங்களின் சேர்க்கையைக் குறிக்கிறது. சிவலிங்கத்தின் மேனி முழுவதும் அன்னத்தால் தழுவப்படும் போது, பஞ்சபூதங்களும் ஈசனின் அடக்கம் என்ற தத்துவம் உணர்த்தப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
ஐப்பசி மாதத்தில் காவேரியில் ஸ்நானம் செய்வதால் இவ்வளவு நன்மைகளா?
அன்னாபிஷேகம் 2026 - Aippasi Pournami Shiva Pooja

கோடிலிங்க தரிசனம்:

அன்னாபிஷேகம் சாற்றப்பட்ட ஒவ்வொரு சோற்றுப் பருக்கையிலும் சிவலிங்கம் இருப்பதாக நம்பப்படுகிறது. இதனால் அன்று சிவலிங்கத்தை தரிசிப்பது கோடி சிவலிங்கத்தை தரிசிப்பதற்கு இணையான பலனைத் தரும் என்று சொல்லப்படுகிறது. அன்னாபிஷேகப் பிரசாதத்தை உட்கொள்வதால் பஞ்சம், உணவுத் தட்டுப்பாடு நீங்கும் என்றும், குழந்தைப்பேறு கிட்டும், குடும்பத்தில் ஐஸ்வர்யம் பெருகும் என்றும் கூறப்படுகிறது.

சோறு கண்ட இடம் சொர்க்கம்:

சோறு கண்ட இடம் சொர்க்கம் என்ற பழமொழி இந்த அன்னாபிஷேகத்திலிருந்தே வந்தது. அன்னாபிஷேகம் செய்யப்பட்ட சிவலிங்கத்தின் ஒவ்வொரு அன்னப்பருக்கையும் ஒரு சிவலிங்கமாகவே கருதப்படுகிறது. பூஜைக்குப் பிறகு லிங்கத்தின் மேல் சாத்தப்பட்ட அன்னம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள அன்னம் அருகில் உள்ள நீர்நிலைகளில் (குளம் அல்லது நதி) வாழும் மீன்கள் மற்றும் நீர்வாழ் உயிரினங்களுக்கு உணவாகக் கரைக்கப்படுகிறது. இதில் ஒரு பருக்கை கூட வீணாக்கப்பட மாட்டாது.

அன்னாபிஷேகம் 2026 - Aippasi Pournami Shiva Pooja
அன்னாபிஷேகம் 2026 - Aippasi Pournami Shiva PoojaImage credit: Gemini

வழிபாட்டின் பலன்கள்:

உணவுப் பஞ்சம் நீங்கும். அமுது படைக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் இந்த நாளில் வழிபாடு செய்வதால் நாட்டில் பஞ்சம் நீங்கி விவசாயம் செழிக்கும். வீட்டில் வளம் பெருகும். இந்த நாளில் விரதம் இருந்தோ அல்லது கோயிலுக்குச் சென்றோ சிவனை வழிபடுவதால் குடும்பத்தில் வறுமை நீங்கி, எப்போதும் அன்னத்திற்கு குறைவில்லாத நிலை ஏற்படும். மன அமைதியும் ஆரோக்கியமும் கூடும்.

நிலவு பூமிக்கு மிக அருகில் வரும் இந்நாளில் சந்திரனின் காரகத்துவம் பெற்ற அரிசியால் ஈசனை வழிபட, ஜாதகத்தில் உள்ள சந்திர தோஷங்கள் நீங்கி மன அமைதியும் சிறந்த நினைவாற்றலும் கிடைக்கும்.

அன்னாபிஷேகம் நடைபெறும் சிறப்புத் தலங்கள்:

அன்று எல்லாக் கோவில்களிலும் சிறப்பாக அன்னாபிஷேகம் நடைபெறும். குறிப்பாக தமிழகத்தில் தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோவில் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் உள்ள பிரம்மாண்டமான சிவலிங்கங்களுக்கு நூற்றுக்கணக்கான மூட்டை அரிசியைக்கொண்டு செய்யப்படும் அன்னாபிஷேகம் உலகப் புகழ்பெற்ற தாகும்.

இதையும் படியுங்கள்:
செய்வினை கோளாறு கண்டறிவது எப்படி? குலதெய்வ கட்டு உடைக்கும் ஆன்மீக ரகசியங்கள்!
அன்னாபிஷேகம் 2026 - Aippasi Pournami Shiva Pooja

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலிலும், சிதம்பரம் நடராஜர் கோவிலிலும் அன்னாபிஷேகம் செய்யப்பட்டு காய்கறிகளால் அலங்காரம் செய்யப்படும். திருவாரூரில் உள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோவிலில் ஐப்பசி பௌர்ணமியில் மட்டுமின்றி, மாதந்தோறும் அமாவாசை நாளில் அன்னாபிஷேகம் நடைபெறுவது இத்தலத்தினுடைய தனிச்சிறப்பாகும்.

logo
Kalki Online
kalkionline.com