

வருடத்தின் ஏழாவது மாதமான ஐப்பசி பல ஆன்மீக சிறப்புகளைப் கொண்டுள்ளது. சூரியன் துலாம் ராசியில் சஞ்சரிக்கும் காலம். அதனால் இதற்கு துலா மாதம் எனப் பெயர். மேலும் இம் மாதத்தில் அஸ்வினி மாதம் எனப் பெயர் இருந்து அதுவே ஐப்பசி மாதமாயிற்று
ஐப்பசி மாதம் முழுவதும் துலா ஸ்நான காலம் என்றழைக்கப்படுகிறது. இந்த 30நாட்களும் புவியில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களும் , காவேரி நதியில் கலப்பதாய் ஐதீகம். எனவே ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவேரியில் நீராடி, க்ஷீரங்கம் ரங்கநாதரை தரிசித்து வழிபாடு செய்ய அனைத்து விதமான பாவங்களும் நீங்கும்.
இம் மாதத்தில் தேய்பிறையில் வரும் திரயோதசி கிழமை தனத் திரயோதசி ஆகும். இன்று விலை உயர்ந்த பொருட்களை வாங்குவது செல்வ செழிப்பை அதிகரிக்கும் என்பது நம்பிக்கை.
இதனால் பொன், பொருள், பணம் சேர்க்கை உண்டாகும். மேலும் தன்வந்திரியை பூஜித்து வழிபட்டால் அனைவரும் நோய் நீங்கி, ஆரோக்கியமாக வாழலாம்.
ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி நரக சதுர்த்தசி .அன்றைய தினம் தீபாவளி பண்டிகை.இந்த நாளன்று கிருஷ்ணர், நரகாசுரனை கொன்று மக்களை காத்தமைக்காக தீபாவளி கொண்டாடப் படுகிறது. அன்று காலை எண்ணெய் தேய்த்து குளித்து விட்டு கிருஷ்ணர் பூஜையும், லட்சுமி குபேர பூஜையும் செய்வது சிறப்பு. மஹாலட்சுமியின் அருளால் செல்வ வளம் பெருகும்.
தீபாவளிக்கு மறுதினம் கேதார கெளரி விரதம். அன்று அர்த்த நாரீஸ்வரரை வழிபடுவது சிறப்பு. குடும்பத்தில் ஒற்றுமை பெருகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் நீங்கி ஒற்றுமை ஓங்கும்.
இம்மாதத்தில் வளர்பிறை சஷ்டி, கந்த சஷ்டியாக கொண்டாடப்படுகிறது. ஒருவார காலம் முருகனை எண்ணி பாலும், பழமும் மட்டும் எடுத்துக் கொண்டு சிரத்தையாக விரதமிருப்பர். இன்றைய நாள் சூரனை முருகப் பெருமான் சம்ஹாரம் செய்த நாள். பல கோவில்களில் சூரசம்ஹாரம் நடக்கும். சூரசம்ஹாரம் முடிந்து முருகனின் திருமணக் கோலத்தை கண்டு வழிபட்டு பின் விரதம் முடிப்பர்.
இம்மாதத்தில் வரும் பவுர்ணமியன்று சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம் சிறப்பாக நடக்கும். லிங்கத்தை அன்னத்தால் அபிஷேகித்து காய்கறி மற்றும் பழங்களை கொண்டு அலங்கரித்து, அபிஷேகித்து படையல் நடக்கும். இந்த விழாவில் பங்கேற்று அன்னபிரசாதம் பெற வீட்டில் வறுமையே வராது.
ஐப்பசி மாதம் சதய நட்சத்திரத்தில் பிறந்த மாமன்னன் ராஜராஜ சோழனை சிறப்பிக்கும் வகையில் சதய விழா கொண்டாடப்படுகிறது.
வளர்பிறை ஏகாதசி இந்த மாத ஏகாதசி பாபாங்குசா எனப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து வழிபட வறுமை நீங்கும். பசி பிணி நீங்கி பாப விமோசனம் பெற இம்மாத ஏகாதசியன்று விரதமிருந்து வழிபட நன்று.
இந்த மாத தேய்பிறை ஏகாதசி இந்திரா ஏகாதசி என அழைக்கப்படுகிறது. இதனால் நம் பாவம் மட்டுமன்றி முன்னோர் பாவங்களும் நீங்கும்.
இவ்வாறு பல விரதங்கள் இந்த மாதத்தில் வந்து நம்மை செழிப்புறச் செய்து அருள் தருகின்றன.
இந்த வழிகாட்டியின் மூலம் ஐப்பசி மாதத்தில் கடைபிடிக்க வேண்டிய விரதங்கள், புண்ணிய தீர்த்த நீராடலின் மகத்துவம் மற்றும் ஆன்மீக வழிபாட்டு முறைகளைத் துல்லியமாக அறிந்து கொள்வதன் மூலம், உங்கள் வாழ்வில் உள்ள எதிர்மறை ஆற்றல்களையும் பாவங்களையும் நீக்கி, மன அமைதியையும் எல்லையற்ற செல்வ வளத்தையும் பெற்றிட முடியும்.