

புத்தரின் வாழ்க்கையில் அவரது அணுக்கத் தொண்டராக அணுவளவும் பிசகாது அவரது உபதேசத்தின் படி வாழ்ந்தவர் ஆனந்தர்.
அவரது வாழ்க்கை ஒரு பெரிய கலைக்களஞ்சியம் அளவுக்கு விரிவானது; சுவையான சம்பவங்களைக் கொண்டது.
ஆனந்தரைப் படித்தால், புரிந்து கொண்டால் புத்தரை நன்கு புரிந்து கொள்ளலாம்.
புத்தருக்கு அன்றாட கைங்கரியம் செய்ய நாகஸாமளா, நாகிதா, உபவாணா, சுனக்கத்தா, சுந்தா, சாகதா, ராதா, மெஹியா உள்ளிட்ட பலர் இருந்தனர். இவர்கள் அனைவரும் புத்தர் ஞானம் பெற்ற பிறகு இருபது ஆண்டுகள் சேவை செய்து வந்தனர்.
ஆனால் இவர்களின் சேவையில் புத்தர் பரிபூரண திருப்தி அடைந்ததாகத் தெரியவில்லை.
ஆனால் ஆனந்தர் தன் மனம், மெய், மொழி, செயல் ஆகிய எல்லாவற்றையும் புத்தருக்கே அர்ப்பணித்து அவரின் அபிமானத்தைப் பெற்றார்.
ஒரு முறை புத்தரும் நாகஸாமளரும் ஒரு சாலை வழியே சென்று கொண்டிருந்தனர்.
ஒரு கட்டத்தில் சாலை இரண்டாகப் பிரிந்தது.
புத்தர் ஒரு வழியைச் சுட்டிக் காட்ட நாகஸாமளர் இன்னொரு வழியைச் சுட்டிக் காட்டினார். புத்தர் வேண்டாம் என்று தடுத்த போதும் பிடிவாதமாக அந்த வழியில் தான் போகவேண்டும் என்றார் நாகஸாமளர்.
தனது திருவோட்டையும் ஆடையையும் புத்தரின் காலடியில் வைத்த அவர், “ஐயனே! இதோ திருவோட்டையும் ஆடையையும் உங்கள் காலடியில் வைத்து விட்டேன்.” என்று கூறி விட்டு தான் தேர்ந்தெடுத்த பாதை வழியே செல்லலானார்.
ஆனால் சிறிது தூரத்திலேயே அங்குள்ள வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள் அவரைத் தாக்கித் துன்புறுத்தினர்.
உடனே அவர் ஓடோடி வந்து புத்தரைச் சரணடைந்தார். புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார்.
அவரது சேவை பின்னர் நிறுத்தப்பட்டது.
புத்தரின் சீடரான நாகிதாவுக்கு நகர வாழ்க்கை மிகவும் பிடித்திருந்தது. புத்தர் அனைத்தையும் விட்டு விட்டு காட்டில் வசிக்க வேண்டுமென்று உபதேசித்தார்.
ஆனால் நாகிதாவோ நகரத்தில் ஆடம்பர வாழ்க்கையில் ஐக்கியமானார்.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
உபவாணர் ஒரு சமயம் புத்தருக்கு ஏற்பட்ட தசைப்பிடிப்பில் அவருக்கு சேவை செய்ய முன் வந்த போது வெந்நீரையும் மருந்துகளையும் தயார் செய்து ஒத்தடம் கொடுக்க ஆரம்பித்தார். ஆனால் புத்தரின் சமிக்ஞைகளை அவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
சுனக்கத்தா வைசாலி நகர இளவரசர். அவர் புத்தருக்கு சேவை செய்ய முன் வந்தார். ஆனால் அவர் புத்தரின் உபதேசங்களை விட்டு விட்டு கோரகத்தீய சம்பிரதாயத்தில் பற்று கொண்டார்.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
சுந்தா ஒரு இளைஞர். புத்தர் ஒரு சமயம் இரு அற்புதங்களை நிகழ்த்த முன் வந்த போது அவரை முந்தி தானே அவற்றை நிகழ்த்துவதாகச் சொன்னார். ஆனால் அவரால் முடியவில்லை. ஆகவே அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
சாகதா தினசரி பிட்சைக்காக நகருக்குச் செல்வது வழக்கம். அங்கு ஒரு வீட்டில் அவருக்கு விதவிதமான அமுது படைத்து கூடவே குடிக்கவும் பானம் தந்தனர். அதைக் குடித்த அவர் சுய நினைவை இழந்து ஆடிக் கொண்டே புத்தர் இருந்த விஹாரத்தின் வாசலில் வந்து விழுந்தார். இதர துறவிகள் அவரைத் தூக்கி எடுத்து புத்தரின் பாதாரவிந்தங்களில் தலை இருக்குமாறு படுக்க வைத்தனர். ஆனால் அவரோ திரும்பி தன் கால்களை புத்தருக்கு எதிரே வைத்தார். மறுநாள் சுய நினைவு திரும்பவே தனது தவறை உணர்ந்த அவர் புத்தரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். புத்தரும் மன்னித்தார். ஆனால் மீண்டும் அதே தவறை அவர் செய்யவே அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
ஒன்றுமே தெரியாத ராதா புத்தருக்கு சேவை செய்தார்; சரி புத்தருக்கும் சேவை செய்தார். ஆனால் அவரோ ஒரு குடும்பஸ்தர்.
அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
மெஹியா குறுகிய காலமே புத்தருக்கு சேவை செய்தார். ஜந்துகாமர் என்பவரின் வீட்டிற்கு பிச்சைக்காக சென்ற அவர் திரும்பி வரும் போது ஒரு மாந்தோப்பின் வழியே வந்தார்.
அதன் அழகில் மயங்கிய அவர் கிமிகாலா நதியின் கரையில் இருந்த அந்த மாந்தோப்பிலேயே தியானம் செய்வேன் என்று கூறி புத்தரிடம் அனுமதி கேட்டார்.
இருமுறை அவரது வேண்டுகோளை நிராகரித்த புத்தர் மூன்றாம் முறை சரி என்று அனுமதி கொடுத்தார். மாந்தோப்பில் தியானம் செய்யச் சென்ற மெஹியா அங்கு கெட்ட எண்ணங்களால் பாதிக்கப்படவே மீண்டும் புத்தரிடம் ஓடோடி வந்தார். புத்தருக்குச் சேவை செய்யும் தகுதி அவருக்கு இல்லை என்பதால் அவரது சேவையும் நிறுத்தப்பட்டது.
ஆக இப்படி ஒவ்வொருவரும் ஒவ்வொரு காரணத்தால் சேவை செய்ய முடியாமல் போனது.
ஐம்பது வயதான போது ஒரு நாள் புத்தர் அனைத்து சீடர்களையும் அழைத்து, "வயதானதால் வரும் தளர்ச்சி எனக்கு வந்து விட்டது. எனது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய நல்ல ஒருவர் வேண்டும்” என்றார்.
ஒவ்வொருவராக முன் வந்த போது அவர்களை தகுந்த காரணம் சொல்லி நிராகரித்தார் புத்தர்.
இறுதியில் ஆனந்தர் முன் வந்தார். உடனே அவரை அணைத்து ஏற்றுக் கொண்டார் புத்தர்.
அந்தக் கணமே அவர் புத்தரின் உபதேசங்களில் ஐக்கியமானார்.
இறுதி வரை அவர் புத்தபிரானுடன் கூடவே இருந்தார். ஒரு கணமும் அவரை விட்டுப் பிரியவில்லை.
அதனால் புத்தரின் வாழ்க்கையோடு அவரது வாழ்க்கையும் ஒன்றி விட்டது.
ஆகவே ஆனந்தரைப் புரிந்து கொண்டால் புத்தரை நன்கு புரிந்து கொள்ளலாம்.