
சைத்தியம் (Chaitya) என்பது பௌத்தர்களின் வழிபாட்டு மண்டபம் அல்லது பிரார்த்தனை கூடம் ஆகும். இதன் ஒரு முனையில் தூபி அமைந்திருக்கும். நவீன இந்தியக் கட்டடக்கலை சாத்திர நூல்களில், இது, சைத்தியக்கிரகம் எனும் கூட்டு வழிபாட்டு மண்டபம் அல்லது பிரார்த்தனை மண்டபம் எனப்படுகிறது.
இந்துக்கள் தாம் வழிபடுவதற்கென ஆலயத்தையும், அதனருகே துறவியர் தங்குவதற்கெனத் திருமடத்தினையும் அமைத்துக் கொள்வது இயல்பே; அது போல, புத்த சமயத்தில், சைத்தியமும் விகாரையும் அருகருகே அமைந்திருந்தன. முன்பொரு காலத்தில் சைத்தியங்கள் பெரும்பாலும் குகைக்கோயில்களாக இருந்தன. பிறகு, படிநிலை வளர்ச்சியில் சைத்தியங்கள் நீண்ட மண்டபங்களையும், மண்டபங்களுடன் மண்டபக் கடைசியில் தூபியையும் இணைத்துக் கொண்டன. சைத்தியத்தில் இருவகைகள் உள்ளன. அவை,
1. நீண்ட சதுர முன்மண்டபம்
2. அரை வட்டவடிவப் பிற்பகுதி
பண்டைக் காலத்தில் அரசர் அல்லது அறவோர் இறந்த பின், அவருடைய அஸ்திகளின் மீது மண்ணைக் குவிப்பது வழக்கம். அந்தக் குவியல் வடமொழியில் சைத்தியம் எனப்படும். பின்னர் இவ்வழக்கம் பௌத்தர்களிடமும் ஜைனர்களிடமும் மிகுதியாக வழங்கி வந்தது. மண்குவியலுக்குப் பதிலாகக் கல்லால் அல்லது செங்கல்லால் கும்மட்டம் போன்ற கட்டடம் எழுப்பப்பட்டது.
சைத்தியம் என்பது ஒரு மண்டபத்தினுள் புனிதப் பொருள் மீதுள்ள கட்டடத்தையும், ஸ்தூபம் என்பது திறந்த வெளியிலுள்ள கோபுரத்தையும் குறிக்கலாயின. சைத்தியத்தினுள் தங்கம், வெள்ளி போன்ற விலையுயர்ந்த பொருளால் செய்த பேழையில் இறந்தவர்களின் அஸ்தி, பல், நகம் போன்றவற்றை வைப்பர். பிற்காலத்தில் இப்பேழையில்லாமலும் சைத்தியங்கள் கட்டப்பட்டன.
பௌத்த பிக்குகள் அதிக அளவில் ஒன்றாகக் கூடித் தங்கிப் புத்தரை வழிபாடு செய்யவும், தியானம் செய்வதற்காக சைத்தியங்கள் அமைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
சைத்தியத்தில், 1. வாசல்பகுதி, 2. நீள் சதுர மண்டப்ப்பகுதி, 3. மூலப்பகுதி என்று பொதுவாக மூன்று பகுதிகள் காணப்படும். மூலப்பகுதி துறவிகளின் வழிபாட்டு இடமாக இருந்தது. நீள் மண்டபப்பகுதி பொதுமக்கள் ஒன்று கூடும் இடமாக காணப்படுகின்றது. தொடக்கத்தில், சாதாரணமாக அமைக்கப்பட்ட சைத்தியங்கள் அதன் வளர்ச்சிக் கட்டங்களில் பல்வேறு கலை நுட்பங்களையும் செதுக்கல் வேலைப்பாடுகளையும் கலையம்சம் பொருந்திய தூண் அமைப்புக்களையும் தன்னகத்தே கொண்டு வளர்ச்சியடைந்தன.
அசோகர் காலத்திய விராட் நகரில் அமைந்த சைத்தியங்கள், குகைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட குடைவரை சைத்திய மண்டபங்கள் பல தூபிகளுடன் அமைக்கப்பட்டன. கி.மு முதலாம் நூற்றாண்டில் பஜா குகைகளில் அமைக்கப்பட்ட மௌரியக் கட்டிடக் கலை நயத்தில் கட்டப்பட்ட பல தளங்களுடன் கூடிய குடைவரை சைத்தியங்களில் மரக்கதவுகள், சன்னல்கள், பால்கனிகள் மற்றும் ஆண், பெண்களின் சிற்பங்களுடன் நிறுவப்பட்டுள்ளன. சைத்தியத்தின் நடுவில் கௌதம புத்தரின் சிலை நிறுவப்பட்டுள்ளது.
சைத்தியத்தின் ஆரம்பக்கட்ட வளர்ச்சியினை லோமறசி குடைவரையிலும், அதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட வளர்ச்சியினை கோபி, கார்ளி, பாஜா, அஐந்தா, எல்லோரா போன்ற குடைவரைகளிலும் காணக்கூடியதாக உள்ளது. பாஜா குகைகள், கர்லா குகைகள், எல்லோரா குகைகள், அஜந்தா குகைகள், உதயகிரி, கந்தகிரி குகைகள், லலித்கிரி, உதயகிரி குகைகள், அவுரங்காபாத் குகைகள் மற்றும் பாண்டவர் குகைகளில் உள்ள பௌத்தக் குடைவரை சைத்தியங்கள் புகழ் பெற்றவை.
குறிப்பாக அவுரங்காபாத் குகைகளில் பல தூண்களுடன் செவ்வக வடிவில் சைத்தியங்கள் நிறுவப்பட்டுள்ளன. இதன் உட்சுவர்கள் நன்கு பொலிவூட்டப்பட்டுள்ளது. இதன் அனைத்துத் தூண்களின் மேல் போதிகை சிற்பங்களுடனும், தூணின் அடியில் கால்கள் மடித்து அமர்ந்த நிலையில் யானையின் சிற்பங்களுடனும் கூடியது. சைத்திய மண்டபத்தின் கூரை அழகிய குடை வடிவில் அமைந்துள்ளது. இச்சைத்தியங்கள் 40 மீட்டர் நீளத்துடனும், 15 அகலத்துடனும், 15 மீட்டர் உயரத்துடனும் அமைக்கப்பட்டுள்ளது.