

தாராபுரம் நகரில் அமைந்திருக்கும் பழமையான கோவில் காடு ஹனுமந்தராய சுவாமி கோவிலாகும். திருப்பூர் மாவட்டத்தில் இது உள்ளது. கிஷ்கிந்தை ராஜ்ஜியத்தில் சுக்ரீவனின் மதியூகி அமைச்சராக விளங்கிய அனுமன் ராமரை தரிசனம் செய்தபிறகு ஆஞ்சனேயர் ஆகப் பெயர்கொண்டு அனைவராலும் கண்கண்ட தெய்வமாகப் போற்றப்படுகிறார் இவர்.
விண்ணுலகையும், மண்ணுலகையும் இணைக்கும் பிரம்மாண்ட வடிவம் எடுத்து தன் ஆற்றலை நிரூபித்தவர். கொடிய அரக்கர்களையும் தீவினை புரிபவரையும் அழிக்கக்கூடியவர் என்றாலும் முனிவர்கள் ரிஷிகள் போற்றும் வகையில் பிரிவையும் எளிமையையும் கொண்டவர்.
கொங்கு வளநாட்டில் விராட மன்னர்கள் ஆட்சிபுரிந்த தலமானது தாராபுரம். புராண வரலாற்றில் இடம்பெற்ற இடம். பஞ்சபாண்டவர்கள் பன்னிரண்டு ஆண்டுகள் வனவாசம் முடிந்து ஒரு வருடம் அஞ்சாத வாசம் மேற்கொண்டபோது யாருக்கும் தெரியாமல் மாறுவேடம் பூண்டு வாழ்வதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்தான் இன்றைய தாராபுரம்.
இது வயல்களால் சூழப்பட்டது. சோலைகள், நந்தவனங்கள் சூழ்ந்திருக்க வற்றாத நதியான அமராவதி இங்கு பெருக்கெடுத்து ஓடுகிறது. பஞ்ச பாண்டவர்கள் மாறுவேடம் பூண்டு தங்கள் உடமைகளையும் ஆயுதங்களையும் தில்லாபுரியம்மன் ஆலயத்தில் ஒளித்து வைத்திருந்தார்கள் பஞ்சபாண்டவர்கள்.
இத்தகைய புராண பிரசித்தி பெற்ற இடத்தில்தான் மாதவ சம்பிரதாயத்தில் வந்த வியாசராஜரா பாரத தேசம் முழுவதுமாக 732இடங்களில் அனுமனை பிரதிஷ்டை செய்தார். அந்த வகையில் இத்தலம் 89வது மூர்த்தங்களாக விளங்குகிறது இந்த காடு ஹனுமந்தசுவாமி கோவில். இது காட்டுப் பகுதியாக இருந்ததால் இந்த ஆஞ்சனேயர் காடு ஹனுமந்தராயர் என்று போற்றப்பட்டார்.
1810ம் ஆண்டில் கோவை கலெக்டராக விளங்கிய டீலர் துரை என்பவருக்கு ராஜபிளவை என்ற நோய் ஏற்பட்டது. அவரைச் சுற்றியிருந்தவர்கள் ஆஞ்சநேயரின் பராக்கிரமத்தைக்கூற அவர் அனுமந்தசுவாமியை தர்சனம் செய்த பிறகு நோய் நீங்கியது.
அவர் அதற்கு நன்றிக்கடனாக தன் சொந்த செலவில் அனுமனுக்கு கர்ப்பக் கிரகத்தைப் கட்டிக்கொடுத்தாராம். திருப்பதி வெங்கடாசலபதியைப் போன்று ஏழு அடி நீளம் இரண்டடி அகலம் கொண்டு பிரம்மாண்டமாக இவர் காணப்படுகிறார். இவரது பாதங்கள் வடக்கு நோக்கி அமைந்துள்ளன. இடுப்பில் மணிசலங்கைகள் கட்டப்பட்டுள்ளன. இடுப்புப் பட்டையில் கத்தி சொருகப்பட்டிருக்கிறது.
இடுப்பில் வியாசராஜரின் முத்திரையான யாளி காணப்படுகிறது. வலது கை அபயம் காட்டி அருள்கிறது. இடது கையில் சௌகந்தி மலர் ஏந்தியிருக்கிறார். கழுத்தில் சுதர்சன சாளக்கிராம மாலைகள் அணி செய்கின்றன. திருமுகம் வடகிழக்கு திசைநோக்க அருள்பாலிக்கிறார். கிரீடத்தில் பின்புறத்தில் பட்டாகத்தி என்றும் உள்ளது. தலைக்கு அருகே வலதுபுறம் சக்கரமும் இடதுபுறம் சங்கும் உள்ளன.
ஆஞ்சநேயருக்கு இடதுபுறத்தில் ராமர் சன்னதி உள்ளது. சீதாதேவி ஆஞ்சனேயர் சகிதமாக காட்சி தருகிறார். ராமருக்கு அர்ச்சனை செய்த பின் ஆஞ்சநேயருக்கு செய்யப்படுகிறது. துங்கபத்ரர நதிக்கரையில் மந்திராலயம் என்ற இடத்திலிருந்து புனித மண் கொண்டு வந்து இந்த ராமர் சன்னதியை அமைத்திருக்கிறார்கள்.
இங்குள்ள அரசமரம் 250வருடங்களாக உள்ளது. நரசிம்ம தீர்த்த குளமும் உள்ளது. நரசிம்ம சுவாமியும் இங்கு அருள் பாலிக்கிறார். காடு ஹனுமந்தராய சுவாமியை வழிபட்டால் அனைத்து கஷ்டமும் தீரும் என்று நம்பப்படுகிறது.
இந்த பதிவை வாசிப்பதன் மூலம் தாராபுரம் காடு ஹனுமந்தராய சுவாமி கோவிலின் ஆன்மீக மகிமைகளையும், நோய்களைத் தீர்க்கும் அனுமனின் அருளையும் உணர்ந்து, உங்கள் வாழ்வில் சந்திக்கும் தடைகளையும் கஷ்டங்களையும் நீக்குவதற்கான தெளிவையும் நன்மைகளையும் பெறுவீர்கள்.