புதுவை வில்லியனூரில் உள்ள ‘பெரிய கோவில்’ தெரியுமா? கோகிலாம்பிகை உடனுறை காமேஷ்வரர் ஆலயம் போவோமா?

Sri Kokilambigai Vudanurai Sri Kameeswarar Temple
Sri Kokilambigai Vudanurai Sri Kameeswarar Temple

கோவில்களில் தீப ஆரத்தியின் போது “ராஜாதி ராஜாயப் ப்ரஸஹ்ய ஸாஹினே..” என்று ஒரு ஸ்லோகத்தைக் கூறியபடியே கற்பூர ஆரத்தி எடுப்பார் குருக்கள். கவனித்திருக்கிறீர்களா? அந்த ஸ்லோகத்தில் இடையில் “காமேஷ்வரோ வைஷ்ரவனோ ததாது” என்று வரும்.

மிக முக்கியமான இந்த ஸ்லோகத்தில் வரும் ஒரே சிவரூபப் பெயர் “காமேஷ்வரன்” என்பதிலிருந்து இதன் முக்கியத்துவத்தினைப் புரிந்து கொள்ளலாம். இப்பேர்பட்ட காமேஷ்வரர் கோகிலாம்பிகையோடு உடனுறைந்து அருள் பாலிக்கிறார், புச்சேரியில் உள்ள வில்லியனூர் எனும் திருத்தலத்தில்.

புராணம்:

வில்வநல்லூர் என்று அக்காலத்தில் அழைக்கப்பட்டு வந்த வில்லியனூர் புதுவையில் இருந்து விழுப்புரம் செல்லும் சாலையில் உள்ள ஒரு பகுதியாகும். பெருமாளுக்கும் பிரம்மனுக்கும் தங்களுள் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்த போது, சிவபெருமானின் அடியையும் முடியையும் யார் முதலில் தரிசிக்கிறார்களோ அவரே உயர்ந்தவர் என்ற கட்டத்தில் அந்தப் போட்டி வந்த நின்ற போது, அடியையும் முடியையும் தரிசித்து விட்டதாக பிரம்மா பொய்யுரைத்தார். அதற்குத் தாழம்பூ சாட்சி சொன்னது. இந்த குற்றத்துக்காக தாழம்பூ பூஜைக்குரிய பூக்களில் இருந்து நீக்கப்பட்டது. பிரம்மனுக்கும் சாபம் ஏற்பட்டது. அதனால் வருந்திய பிரம்ம தேவர் சிவப்பிரானிடம் சென்று சாபம் நீங்க வழி கூறுமாறு வேண்டினார். தொண்டை நாட்டில் முத்தாறு நதிக்கரையில் வில்வ வனம் அமைத்து சிவ பூஜை செய்தால் சாபம் நீங்கும் என்ற மார்க்கத்தை சிவப்பிரானே கூற, பிரம்மதேவரும் அதன்படியே இந்த இடத்தைத் தேர்வுசெய்து வில்வ வனத்தினை உண்டாக்கி சிவபிரானைத் தன் கரங்களால் பிரதிஷ்டை செய்து பிரம்ம தீர்த்தமொன்றையும் உருவாக்கி வழிபட்டு தன் சாபத்திலிருந்து விடுபட்டார். 

சோழனின் சாப விமோசனம்:

வில்வ வனமாகத் திகழ்ந்த இந்தப் பகுதி வில்லியனூராக ஆனது சோழ மன்னன் தர்மபாலன் என்பவனால் தான். தர்மபால சோழன் முன்வினைப் பயனால் வெண்குஷ்டம் வந்து அவதிப்பட்டான். பிரம்மதேவர் ஏற்படுத்திய இந்த பிரம்ம தீர்த்தத்தில் நீராடி, அவர் வணங்கிய இந்த காமேஸ்வரனை வழிபட்டால் நோயிலிருந்து விடுபடலாம் என்று அறிந்த தர்மபாலசோழன் இந்த வில்வ வனத்திற்கு வந்து வழிபட்டு நோயிலிருந்து விடுபடவும் செய்தான். வில்வ வனமாக இருந்த இப்பகுதியை வில்லியனூராக மாற்றினவன் அவனே. இங்கே அழகிய ஒரு நகரை உருவாக்கி காமேஸ்வரருக்கு அழகான இக்கோவிலையும் அவன் எடுப்பித்தான்.

கல்வெட்டுச் செய்தி:

12ஆம் நூற்றாண்டில் இக்கோவில் கட்டப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இடைக்கால சோழர்கள், விஜய நகர அரசர்கள் இக்கோவிலை விரிவுபடுத்தி இருக்கலாம் என்கிறார்கள். பதினாறாம் நூற்றாண்டில் நாராயண சம்புவராயர் என்பவர் இக்கோவிலுக்கு 850 ஏக்கர் நிலப்பகுதியைத்  தானமாக வழங்கி இருப்பதாகக் கல்வெட்டில் உள்ளது. இக்கோவில் தற்போது இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.

இதையும் படியுங்கள்:
அதிசயங்கள் பல நிறைந்த பாதாள புவனேஸ்வர் கோயில்!
Sri Kokilambigai Vudanurai Sri Kameeswarar Temple

கோவிலுக்குள் செல்லலாமா..

ராஜகோபுரம் தாண்டி உள்ளே நுழைந்ததும் இடப்பக்கத்தில் பிள்ளையாரையும் வலப்பக்கத்தில் ஆறுமுகத்தோடமைந்த முருகப்பெருமானையும் தரிசித்து விட்டு நிலைக்கதவைத் தாண்டி உள்ளே நுழைந்தால்  இடப்பக்கத்தில் நந்திகேஸ்வரரும் அவரது மனைவியான சுயசாம்பிகையும் மனித உருவில் தம்பதியராகக் காட்சி கொடுத்து நம்மை வரவேற்பது வேற எந்த சிவாலயங்களிலும் காணக் கிடைக்காத ஒன்றாகும். 

தொடர்ந்து உள்ளே நடந்தால் அழகிய சிற்ப வேலைபாடுகளால் ஆன பல தூண்கள் தாங்கும் அர்த்த மண்டபத்துக்குள் நுழைவோம். இடப்பக்கத்தில் சரஸ்வதி தேவியும் விநாயகரும் வலப்பக்கத்தில் முருகப்பெருமானும் கஜலக்ஷ்மியும் ஐயப்பரும் அருள் பாலிக்கிறார்கள். அவர்களை வணங்கி விட்டு தொடர்ந்து உள்ளே நுழைந்தால் கோவிலின் மகா மண்டபத்திற்குள் பிரவேசிப்போம். பலி பீடத்தையும் கொடி மரத்தையும் வணங்கி இடப்புறமாக வளைந்து தான் காமேஸ்வரரின் சன்னதிக்கு நாம் போக வேண்டியது இருக்கும். 

பிரம்மரின் சாபம் போக்கிய திருக்காமீஸ்வரர் சுயம்புலிங்கமாக இக்கோவிலின் கருவறையில் வீற்றிருக்கிறார். இவருக்கு மற்றொரு சிறப்பு, சமயக் குரவர்களாகிய நால்வருமே இவரைப் பாட்டில் வைத்துப் போற்றி இருக்கிறார்கள் என்பதாகும். இந்த இறைவன் மேல் அப்பரும் சுந்தரரும் சம்பந்தமும் மாணிக்கவாசதரும் ஆளுக்கொரு பாடல் புனைந்திருக்கிறார்கள். 

அந்தத் தேவாரப் பாடல்களை ஆண்டவன் முன் மனம் உருகிப் பாடிவிட்டு சுயம்புலிங்கத் திருமேனியாக வீற்றிருக்கும் திருக்காமீஸ்வரரிடம் நம் பிரார்த்தனைகளை வைத்து விட்டு வெளியேறி பிரகாரத்திற்குள் நேராக வந்தோமானால் அம்பாள் கோகிலாாம்பிகைக்கான கொடி மரத்தை தரிசிக்கலாம்.

கொடி மரத்தின் பின்னால் சமயக்குரவர் நால்வரின் திருமேனிகளும் உள்ளன. தொடர்ந்து 63 நாயன்மார்களின் திருமேனிகளும் வரிசையாக அமைந்திருக்கின்றன. அவர்களுக்கு மேலே சுவற்றில் “தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன்” எனக்கு துவங்கும் திருத்தொண்டத்தொகையின் அனைத்து பாடல்களும் தகட்டில் வடிக்கப்பட்டு பொருத்தப்பட்டுள்ளன.

அந்தப் பாக்களைத் தொடர்ந்து படித்துக் கொண்டே மெல்ல நகர்ந்தால் “ஆரூரில் அம்மானுக் கன்பரா வாரே” என்று முடியும் இடத்தில் வலம்புரி விநாயகர் அருள்பாலிக்கிறார். நாயன்மார்களுக்கு எதிர் புறத்தில் தட்சிணாமூர்த்தியும் நர்த்தன விநாயகரும் காட்சி தருகிறார்கள். 

வலம்புரி விநாயகரை தரிசித்து விட்டுப் பிரகாரத்தில் தொடர்ந்து நடந்தால் ஏழடி உயரத்தில் வள்ளி தேவசேனா சமேத முத்துக்குமாரசுவாமி கம்பீரமாக காட்சி தருகிறார். 

“முருகனின் மறு பெயர் அழகு அவன் முறுவலில் மயங்து உலகு” என்ற வரிகளுக்கு உதாரணமாக காட்சி தரும் இந்த முருகப்பெருமான் திருமேனியைக் கண்டால், கால்களை நகர்த்துவது கடினம் தான்.

இதையும் படியுங்கள்:
தெலங்கானாவின் கலாச்சாரத் திருவிழா போனாலு!
Sri Kokilambigai Vudanurai Sri Kameeswarar Temple

முத்துக்குமார சுவாமிக்குப் பின்னால் கோவிலின் அனைத்து உற்சவ மூர்த்திகளின் விக்கிரகங்களும் பாதுகாக்கப்படுகின்றன. முத்துக்குமாரசுவாமிக்கு எதிர்ப்புறத்தில் பெருமாளின் திருமேனி இருப்பது இக்கோவியின் மற்றொரு சிறப்பாகும். அதாவது பெருமாள் இருப்பது சரியாக சிவபிரானுக்கு பின்புறத்தில் ஆகும். முருகனையும் பெருமாளையும் தரிசித்து விட்டு மேலே நடந்தால் இடப்பக்க மூலையில் வருண லிங்கம் அமைக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து நடந்தால் அது ஆறுமுகன் சன்னதியின் பிரதட்சணமாகிவிடும். மிகவும் அழகான மயில் சிற்பம் பார்க்கும் திசையில் நாமும் பார்த்தால் அங்கே இருப்பது ஆறுமுகரும் அவரின் இரு மனைவிகளும். 

ஆறுமுகர் சன்னதியின் இடப்புறத்தில் சகஸ்ர லிங்கம் எனப்படும் ஆயிரம் குட்டி குட்டி லிங்கங்களாலான சிவபிரானை தரிசிக்கலாம். வலப்புறம் காசி விஸ்வநாதர் அருள்பாலிக்கிறார். இந்த ஆறுமுகப் பெருமானின் சந்நதிக்குள்ளே ஒரு சுரங்கப்பாதை உள்ளது.‌ செஞ்சி மலைக்கோட்டையில் இருந்து இணையும் இந்த சுரங்கப் பாதை வழியாக ராஜா தேசிங்கு காமீஸ்வரரை வந்து தரிசித்ததாக சொல்லப்படுகிறது.

ஆறுமுகர் சந்நதியில் இருந்து படிகள் வழி இறங்கினால் சண்டிகேஸ்வரருக்கு இறைவனும் இறைவியும் ஈஸ்வரப்பட்டம் கட்டும் அபூர்வ சிற்பத்தைக் காணலாம். இது சண்டிகேஸ்வரர் சந்நதியின் பின்புறமாகும். துர்கையை வணங்கி சண்டிகேஸ்வரரிடம் வருகையைப் பதிவு செய்துவிட்டுத் தொடர்ந்து நடந்தால் இடக்கைபுறத்தில் ஆடலரசர் சந்நதி இருக்கிறது. நால்வர் தேவார புத்தகங்களும் மற்ற சில திருமுறைகளும் இங்கே வைக்கப்பட்டிருப்பதைக் கவனிக்கலாம்.

நடராஜர் சந்நதி முடிந்ததும் இடப்புறம் வளையும் சந்தில் பிரதக்ஷிணமாக நடந்து சண்டிகேஸ்வரி அனுமதியோடு முன்பக்கம் வந்தால் ஆறடி உயரத்தில் அழகோவியமாய் அருள்பாலிக்கிறாள் கோகிலாம்பிகை அம்பாள். பிரும்ம தீர்த்தத்தில் கிடைத்த இவளை காண ஆயிரம் கண்களும் போதாது. பள்ளியறை தாண்டி ஈசான்ய லிங்கம், நாகர் திருமேனிகள் மற்றும் சந்திரர் சூரியர் திருமேனிகள் அருள்பாலிக்கின்றன.

இதையும் படியுங்கள்:
தினந்தோறும் வளரும் சிவலிங்கம் எங்கே இருக்கு தெரியுமா?
Sri Kokilambigai Vudanurai Sri Kameeswarar Temple

அம்பாளுக்கு எதிராக ஒரு நந்தி இருப்பது இயல்பு. இக்கோவிலில் அம்பாள் சந்நிதிக்கு முன்னால் வழக்கமான நந்தியோடு மற்றொரு குட்டி நந்தியும் இருப்பதைக் காணலாம். இந்தக் குட்டி நந்தி தான் சிறப்புவாய்ந்த “பிரசவ நந்தி”. கர்ப்பிணி பெண்கள் அம்பாளுக்கு அபிஷேகம் செய்து இந்தப் பிரசவ நந்தியைத் தென்புறமாகத் திருப்பி வைத்து வேண்டிக்கொண்டால் சுகப்பிரசவம் ஆகும் என்பது நம்பிக்கை. 

அப்படி சுகப்பிரசவம் ஆனதும் மீண்டும் அம்பாளை வணங்கிவிட்டு இப்பிரசவ நந்தியை அம்பாளைப் பார்க்கத் திருப்பி வைத்துவிடுவது இங்கே வழக்கமான பிரார்த்தனை ஆக உள்ளது. பிரசவநந்தியோடு ஒரு சுற்று நிறைவடைந்து துவங்கிய இடமான ஈஸ்வரரின் கொடிமரத்தில் வந்து சேர்ந்துவிடுவோம். தரையில் ஆண்களும் பெண்களும் எப்படி எத்திசை நோக்கி நமஸ்காரம் செய்ய வேண்டும் என்று சிற்பமாகவே வடித்து‌ வைத்திருப்பது இக்கோவிலின்‌‌ மற்றொரு சிறப்பாகும்.

நமஸ்கரித்துவிட்டுக் கொஞ்சநேரம் அமர்ந்துவிட்டு மீண்டும் அர்த்த மண்டபத்தை அடைந்தால் வெளியேறும் வழியில் இடப்புறம் நவகிரகங்களும் பைரவரும் காட்சிதருகிறார்கள். பைரவருக்குப் பக்கத்துத் தூணில் ஆஞ்சநேயரும் இருக்கிறார். இக்கோவிலின் சோழர்காலத் தூண்கள் ஒவ்வொன்றும் சிற்பக்கலையின் சான்றுகளாகத் திகழ்கின்றன. அர்தமண்டபம் தாண்டி வெளிப் பிரகாரத்தில் கோ சாலை உள்ளது. பறவைகளின் கிளாங் கிளாங் சப்தத்துக்குச் செவிகொடுத்தபடி தொடர்ந்து சுற்றி வந்தால் கோவிலின்‌ வலப்புறத்தில் பிரும்ம தீர்த்தம்‌உள்ளது.

அழகாகப் பராமரிக்கப்பட்டு வரும் இந்த தீர்த்தத்தில் மீன்களும் வாத்துகளும் உலவுவதை மேடைகளில் அமர்ந்தபடி ரசிக்கலாம். இந்த இடத்தில் இருந்து கோவிலின் வெளித்தோற்றம் ‌நன்றாகப் புலப்படும். கலையரங்கம் ஒன்றும் 48 கால் மண்டபம்‌ ஒன்றும் குளத்தைச்சுற்றி அமைந்துள்ளது. கோவிலின் வடகிழக்கு மூலையில் நவக்கிரகங்களுக்கும் தனித்தனி சந்நதிகள் அமைந்துள்ளன. குளக்காற்றை ரசித்துவிட்டு வெளியேற நடக்கும் வழியில் உள்ளது இக்கோவிலின் தலவிருட்சமான வில்வமரம். பங்குனி 9,10,11 ஆகிய தேதிகளில் சரியாக மூலவரான திருக்காமீஸ்வரர் மேல் சூரியக்கிரணங்கள் விழுகின்றன. இக்கோவிலுக்கு 9 நிலைகள் கொண்ட ராஜ கோபுரமும் மற்ற‌ மூன்று கோபுரங்களும் உள்ளன. மூன்று அழகிய தேர்களும் உள்ளன.‌ தேர்த்திருவிழா, ஆடிப்பூரம் என்று விழாக்கள் கோலாகலமாக நடைபெற்றுவருகின்றன.

தஞ்சை‌ கோவிலை ‘பெரிய கோவில்’ என்று குறிப்பதைப் போல் புதுவை வாழ் மக்கள் இந்த வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலைத்தான் பெரிய கோவில் என்று அழைக்கிறார்கள்.

தீராத நோய்களையும் சாபங்களையும் பிரச்சினைகளையும் தீர்த்து வைக்கும் இந்த திருக்காமீஸ்வரையும் கோகிலாம்பிகையையும் கண்டிப்பாய் ஒருமுறை தரிசித்துவிடத் தவறாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com