யமபயம் நீக்கும் நான்கு காலசம்ஹாரத் தலங்கள்! இனி யம பயம் ஏன்?

யமபயம் நீங்க தமிழகத்தில் உள்ள நான்கு காலசம்ஹாரத் தலங்கள்!
Temples
Temples
Published on

பயத்தில் அதிபயங்கரமான பயம் யம பயம்!

யமன் என்ற சொல்லைக் கேட்டாலே யார் தான் பயப்படாமல் இருக்க முடியும்?

ஊழி காலம் தொட்டு இன்று வரை யமன் பிடியில் அகப்படாமல் யாராலாவது இருக்க முடியுமா?

நான்கு பேருக்காக சிவபிரான் அருள் புரிந்து காலனை சம்ஹாரம் செய்த தலங்கள் நான்கு உள்ளன. அங்கு சென்று வழிபட்டால் யமபயம் நீங்கும். சஷ்டியப்தபூர்த்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட மங்கல நிகழ்ச்சிகளை அங்கு நடத்துவது பாரம்பரியப் பழக்கம்.

இதோ அந்த நான்கு தலங்களில் நிகழ்ந்த காலசம்ஹார சம்பவங்கள்:

திருக்கடையூர்:

மாயவரத்திலிருந்து 22 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள புகழ் பெற்ற இந்தத் தலம் பற்றி அனைவரும் அறிவர். மிருகண்டு மகரிஷிக்கு மார்க்கண்டேயன் என்னும் மகன் பிறந்தான்.

அவனுக்கு பதினாறு வயது தான் ஆயுள் காலம் என்பதை அறிந்த அவன் சிவனை வழிபட ஆரம்பித்தான். பதினாறாவது வயதில் ஆயுள் முடியும் காலத்தில் வந்த யமன் அவன் மீது பாசக்கயிறை வீச, சிவலிங்கத்தைக் கட்டிப்பிடித்தான் மார்கண்டேயன். அவன் மீது யமன் வீசிய பாசக் கயிறு சிவலிங்கத்தின் மீதும் விழுந்தது. கொண்டார் கோபம் சிவபிரான். தன் இடது காலால் எமனை எட்டி உதைத்து அவனை அழித்தார்.

இதையும் படியுங்கள்:
பாரோவின் சாபம்: கல்லறையின் நச்சு பூஞ்சை - புற்றுநோயை வீழ்த்தும் மர்ம ஆயுதம்!
Temples

திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் காலசம்ஹார சிற்பம் உள்ளது. இங்கு சித்திரை மாதம் மக நட்சத்திரத்தில் காலசம்ஹார உற்சவம் ஆண்டு தோறும் சிறப்பாக நடைபெறுகிறது.

திருவெண்காடு

மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழிக்கு அருகே 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவெண்காடு.

சுவேதாரண்ய க்ஷேத்திரம் என்று அழைக்கப்படும் இந்தத் திருத்தலம் ஆதி சிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது. சிவபிரானின் 108 தாண்டவ வடிவங்களில் 43வது வடிவமாகிய அகோரமூர்த்தி வடிவத்தில் அவர் இங்கு தரிசனம் தருகிறார்.

இந்தத் தலத்தைப் பற்றி வால்மீகி ராமாயணத்தில் ஆரண்ய காண்டத்தில் ஒரு ஸ்லோகம் உள்ளது.

"சபபாத கரோபூமன் தஹ்யமான சராக்னி நருத்ரேநேவ வினிர்தக்த ஸ்வேதாரண்யே யதாந்தகஹா" இதன் பொருள்: யமனை சுவேதாரண்ய க்ஷேத்திரத்தில் சுவேதாரண்யர் வதம் செய்ததைப் போல ராமர் கரதூஷணை வதம் செய்தார்.

சுவேத மஹரிஷியின் இருபத்தோராவது வயதில் அவருக்காகவும் சுவேத ராஜாவுக்காகவும் இரு முறை கால சம்ஹாரம் நடைபெற்றது. இதைப் பற்றி கூர்ம புராணத்தில் ‘சுவேதன் கூற்றினைக் கடந்த அத்தியாயம் ‘என்ற அத்தியாயத்தில் விரிவாகக் காணலாம்.

திருவீழிமலை

இந்தத் திருத்தலம் கும்பகோணத்திலிருந்து கிழக்கே 20 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

பிரசித்தி பெற்ற இந்தத் தலத்தில் தான் சிவபிரான் கடும் பஞ்சம் நிலவிய காலத்தில் ஞானசம்பந்தருக்கும் திருநாவுக்கரசருக்கும் படிக்காசு கொடுத்து அருளினார். அதை வைத்து அவர்கள் பஞ்சம் நீங்க வகை செய்து அருளினர்.

இத்தலத்தில் சிவபிரான் சுவேதகேது என்னும் ராஜரிஷிக்காக அவரது பத்தொன்பதாவது வயதில் எமனைக் காலால் எட்டி உதைத்து சுவேதகேதுவை சிரஞ்சீவியாக வாழ அருள் புரிந்தார். எமபயம் நீக்கும் தலம் என்பதால் பக்தர்களின் சஷ்டியப்த பூர்த்தி, சதாபிஷேகம் உள்ளிட்ட விழாக்கள் இங்கு இன்றும் சிறப்பாக நடைபெறுகின்றன.

திருவையாறு

தஞ்சாவூரிலிருந்து 14 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது திருவையாறு.

புகழ் பெற்ற இந்தத் திருத்தலத்தில் ஔத்தாலக மஹரிஷிக்காக சிவபிரான் எமனை கால சம்ஹாரம் செய்தார்.

த்வாரபாலகர்களின் மேல் பாலுள்ள சங்க நிதியைக் கொண்டு யமனை சம்ஹாரம் செய்து அவனை யமலோகத்தில் விழும்படி செய்தார்.

ஔத்தாலகர் பற்றி மஹாபாரதத்தில் சல்ய பர்வத்தில் கதாயுத்த பர்வத்தில் காணலாம். கோசலத்தின் வடபாகத்தில் இவர் ஒரு வேள்வியைச் செய்த போது சரஸ்வதியை நினைக்க சரஸ்வதி ஆறாக அங்கு வந்தாள்.

இதையும் படியுங்கள்:
'செல்போன்' குறித்து வைரலாகும் 'சமந்தா'வின் பதிவு: ஆதரவு தெரிவித்த பிரபலங்கள்...
Temples

சிவபிரானின் திருநாமங்கள்

சிவபிரானுக்கு காலாந்தகர், காலாரி, காலசம்ஹார மூர்த்தி, காலகாலன், அந்தகனுக்கு அந்தகன், கூற்றினை உதைத்தர் என்று பல பெயர்கள் உண்டு.

அதற்குக் காரணமான மேற்கண்ட நான்கு தலங்களில் நாம் சிவ வழிபாடு செய்தால் யம பயம் நீங்கும் என்பது அறுதியிட்ட உறுதி!

யமாய நம: யம பயம் போக்கும் சிவாய நம:!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com