

“என்னங்க அநியாயம் இது. நானும் எவ்வளவோ உழைத்துத்தான் பார்க்கிறேன். அதற்கான பலன் மட்டும் கண்ணுக்குப் புலப்படுவேனா என்று கண்ணாமூச்சி ஆடுகிறதே. இதற்கு முடிவே இல்லையா?” என்று இரண்டு ஆண்டுகளாகப் புலம்பினீர்கள்தானே? இதே சிரமம் முற்றிப்புள்ளி வைத்துக்கொள்ளும் புத்தாண்டு துவங்கிவிட்டது. சந்தோஷம்தானே…. எங்கே? சிரியுங்கள் பார்ப்போம்…
அலுவலகத்தில் உங்கள் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டீர்களே? பாராட்டுகள். ஆக.. இதுவரை எதிர்பார்த்தச் சலுகைகள் இப்போது கிடைக்கப் போகின்றன பாருங்களேன். வருட ஆரம்பத்திலேயே வாழ்க்கை களை கட்டிவிடும் என்பது நற்செய்தி. சிலருக்கு இட மாறுதலுக்கான உத்தரவு வரக்கூடும். உங்களில் சிலரை அலுவலகப்பணி காரணமாக வெளிநாட்டுக்கு அனுப்புவார்கள். சென்று வென்று வாருங்கள்.
வியாபாரத்தில் எதிர்பார்க்கும் லாபத்தைவிடச் சற்றுக் குறைவாகக் கிடைத்தாலும் நஷ்டம் இருக்காது. குழப்புகிறேனா…? வியாபாரம் அபிவிருத்தி அடைய கூடுதலான முயற்சியும் உழைப்பும் தேவை. அதை நீங்கள் நல்லமுறையில் செய்வீர்கள். புதிய வாகனம் வாங்கும் யோகமும் உண்டாகும். அது, தனிப்பட்ட உபயோகத்துக்கு வாங்கி மனைவி, குழந்தைகளைச் சந்தோஷமாக மால்களுக்குக் கூட்டிச் செல்லவும் இருக்கலாம். வியாபார நிமித்தம் பயன்படுத்தி லாபம் சம்பாதிக்கவும் இருக்கலாம்.
ஆக, ஏதேனும் ஒரு வகையில் லாபம்/ மகிழ்ச்சி உத்தரவாதம்தான். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகளும் ஏற்படக்கூடும். பலர் காத்திருக்கும் விஷயம் ஒன்றில் உங்களுக்குத் திடீர் முன்னுரிமை கிடைத்து அயரவைக்கும். தெய்வபக்தியும் ஆன்மிகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். தந்தை வழியில் எதிர்பார்த்த விஷயம் ஒன்று நல்லபடியாக முடியும். பல ஆண்டுகளாகச் சோர்வடையச் செய்துகொண்டிருந்த வழக்கு ஒன்று “அப்பாடா. முடிந்ததப்பா” என்று நீங்கள் சந்தோஷப் பெருமூச்சை வெளிப்படுத்தும்படி முடிவுக்கு வரும்.
பொன், பொருள் சேர்க்கைக்கு வாய்ப்பு உண்டாகும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் எதிர்பாராத ஆதாயம் கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பார்த்த விஷயம் சாதகமாக முடியும். வம்பு, வழக்கு, சண்டை என்று ஏதுமில்லாமல் கவனமாக இருப்பீர்கள் என்றாலும் நீங்களாக முன்வந்து வழக்குப் போடவேண்டாம். கோர்ட்படி கட்டுப்படி ஆகாது.
வருடத்தின் முதல் பாதியில் நீங்கள் என்ன பேசினாலும் அதனால் நன்மை ஏற்படும். வருடத்தின் இரண்டாம் பாதியில் புதிய உத்யோகம் கிடைக்கலாம். அல்லது இருக்கும் வேலையில் பதவி உயர்வு கிடைத்து, உங்களை உயர்த்தலாம். நீங்கள் முனைந்து முயன்றால் மட்டுமே வேறு வேலை கிடைக்கும் என்பதை மட்டும் நினைவில்கொள்ளுங்கள்.
நன்மையும் லாபமும் சற்று நிதானப்போக்கில்தான் நிகழும். அதனால் என்ன? நிகழுமே!
மொத்தத்தில் கலகல வருடம்.
மற்ற ராசிபலன்களை படிக்க Click Here