
ஒரு தீபாவளி தினத்தன்று தோன்றி இன்னொரு தீபாவளி தினத்தில் சந்நியாசம் ஏற்று இன்னும் ஒரு தீபாவளி தினத்தில் ஜல சமாதி எய்திய அபூர்வ வேதாந்த மகான் ஸ்வாமி ராமதீர்த்தர்.
இவர் வாழ்க்கை முழுவதும் ஏராளமான அபூர்வ சம்பவங்கள் நிறைந்துள்ளன. இவரது உபதேச மொழிகள் தனித்தன்மை வாய்ந்தவை.
லாகூரில் அரசுக் கல்லூரியில் கணிதத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற அவர், ஃபோர்மன் கிறிஸ்துவக் கல்லூரியில் கணிதப் பேராசிரியர் ஆனார். ஆதலால், இவரது உபதேசங்களில் கணிதம் ஆங்காங்கே மின்னி தன் இறைத்தன்மையைக் காட்டும்.
ஸ்வாமி விவேகானந்தரால் உத்வேகம் பெற்று இவரும் அமெரிக்கா சென்று அந்த நாட்டையே பிரமிக்க வைத்தார்.
இவரது உபதேச உரைகள் 'இன் வுட்ஸ் ஆஃப் காட் ரியலைசேஷன்' (IN WOODS OF GOD REALISATION) என்று எட்டுத் தொகுதிகளாக வெளியிடப்பட்டுள்ளன. இதை ஆழ்ந்து படிப்பவர்கள் வேதாந்தத்தை நன்கு அறிந்து கொள்ள முடியும்.
இவரது வாழ்க்கைத் துளிகள் சில இதோ:
ஸ்வாமி விவேகானந்தர் 1897ம் ஆண்டு லாகூருக்குச் சென்று ஒரு வாரம் அங்கு தங்கி இருந்தார். அவரது சொற்பொழிவுகள் லாகூரையே கவர்ந்தன. ஸ்வாமி ராமதீர்த்தர் அவரைத் தனது இல்லத்திற்கு அழைத்தார். ஸ்வாமிஜி அவரது இல்லத்தில் இருந்த புத்தகங்களைக் கண்டு ஆனந்தம் கொண்டு அதைப் படிக்கலானார்.
அவரது அற்புதமான உரைகளைக் கேட்ட தீர்த்த ராம், - (ஆம், அது தான் அவரது இயற்பெயர், சந்நியாசம் ஏற்ற பின்னர் அவர் ஸ்வாமி ராமதீர்த்தர் என்று அறியப்படலானார்) - ஹிமாலய மலைக் காடுகளின் உள்ளே சென்று தியானம் செய்யலானார்.
பின்னர் சந்நியாசம் ஏற்றார். அது ஒரு தீபாவளி தினம். குடும்பத்தை விட்டுப் பிரிந்த அவர் 1902ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ம் தேதி கப்பலில் ஜப்பானுக்குப் பயணமானார். அங்கு நடந்த ஹிந்து மத மாநாட்டில் கலந்து கொண்டார். டோக்கியோ கல்லூரியில் வெற்றிக்கான வழி என்ற அவரது உரை அனைவரையும் கவர்ந்தது.
பின்னர் விவேகானந்தர் வழியில் அவர் அமெரிக்காவுக்குப் பயணமானார். கப்பலில் பார்த்தவர் மீதெல்லாம் அவர் அன்பு மழை பொழிந்தார்.
அவர் சான்பிரான்ஸிஸ்கோ அடைந்த போது அவரையே கவனித்து வந்த ஒரு சக பயணி அவரிடம் வந்தார். அவர் ஒரு அமெரிக்கர்.
“சார்! உங்கள் பயண லக்கேஜ் எங்கே?" என்று அவர் கேட்டார்.
“நான் எப்போதுமே லக்கேஜ் கொண்டு செல்வதில்லை” என்றார் ஸ்வாமி ராமதீர்த்தர். உண்மையும் அது தான்.
ஆச்சரியம் அடைந்த அந்த அமெரிக்கர், “அப்படியானால் உங்கள் பணத்தை எல்லாம் எங்கே வைப்பீர்கள்?” என்று கேட்டார்.
“நான் பணமே வைத்திருப்பதில்லை” – இப்படி பதில் வந்தது.
“அப்படியானால் எப்படி நீங்கள் வாழ்கிறீர்கள்?”
“நான் எல்லோர் மீதும் அன்பு செலுத்தி வாழ்ந்து வருகிறேன். எனக்கு தாகம் எடுக்கும் போது எனக்குத் தண்ணீர் தர எப்போதுமே ஒருவர் தயாராக் இருக்கிறார். எனக்குப் பசிக்கும் போதெல்லாம் ரொட்டி தர ஒருவர் தயாராக இருக்கிறார்”.
“அப்படியானால் அமெரிக்காவில் உங்களுக்கு நண்பர்கள் யாரேனும் இருக்கிறார்களா?”
“ஆஹா! இருக்கிறாரே! எனக்கு ஒரு அமெரிக்கரைத் தெரியும். அது நீங்கள் தான்!” இப்படிச் சொல்லியவாறே அவரது தோளைத் தொட்டார் ராமதீர்த்தர்.
அந்த அமெரிக்கர் அயர்ந்து போனார். அந்தக் கணமே அவரது தொண்டரானார்.
அவர் பின்னால் எழுதினார் இப்படி: ”இமயமலையிலிருந்து வந்த விளக்கு அவர். அது அவரை எரிக்காது. இரும்பு அவரை வெட்டாது. அவரது கண்களிலிருந்து அன்பு வெள்ளம் பெருகும். அவர் எங்கு இருக்கிறாரோ அங்கு புது வாழ்வைத் தரும்.”
சென்ற இடமெல்லாம் உற்சாக வரவேற்பைப் பெற்ற ஸ்வாமி ராமதீர்த்தர் வேதாந்தத்தை நன்கு விளக்கினார்.
அவருடன் நாத்திகம் பேச வந்த பெண்மணி அவரைப் பார்த்த மாத்திரத்தில் மாறி ஆத்திகரானார்.
அமெரிக்காவில் உள்ள 14444 அடி உயரமுள்ள சாஸ்தா மலையில் அவர் தங்கி இருந்த போது உழைத்துத் தான் சாப்பிடுவேன் என்றார்.
அங்கு மரங்களை வெட்டி அதில் பெற்ற வருமானத்தைக் கொண்டு வாழ்ந்து வந்தார்; பிறரை அதிசயிக்க வைத்தார்.
1873ம் ஆண்டு அக்டோபர் மாதம் 22ம் தேதியன்று தீபாவளியன்று அவர் பிறந்தார்.
1906ம் ஆண்டு அக்டோபர் மாதம் 17ம் நாள் தீபாவளி வந்தது.
கங்கை ஆற்றிலே குளிக்கக் கிளம்பினார் அவர்.
குளிக்கச் செல்லும் முன்னர் ஒரு துண்டுச் சீட்டில் இப்படி எழுதி வைத்தார்:
“ஓ! மரணமே! நிச்சயமாக இந்த உடலைச் சிதற விடு. எனக்குப் பயன்படுத்த ஏராளமான உடல்கள் உள்ளன! அந்த சந்திர ஒளிக்கற்றையின் வெள்ளி இழைகளை நான் அணிந்து கொள்வேன். நான் தெய்வீக இசைவாணனாக மலை ஓடைகளிலும் நீரோடைகளிலும் அலைந்து திரிவேன்.”
கங்கையில் இறங்கிய அவர் ஆழத்தில் சென்று அமிழ்ந்தார். ஜல சமாதி எய்தினார். வாழ்க்கை முழுவதும் வேதாந்தத்தைப் பரப்பிய அவரது உரைகளைப் படிப்பது ஒருவரது பாக்கியவசத்தினால் தான் என்று உறுதியாகச் சொல்ல முடியும்!