
சிவபெருமானிடம் வரம் பெற்ற சலந்தரன் என்ற அரக்கன், இந்திரனை வென்று தேவலோகத்தைக் கைப்பற்றினான். திருமாலையும் வென்று பின், கயிலாயம் சென்று சிவபெருமானிடம் தகராறு செய்தான்.
ஈசன் தன் கால் விரலால் ஒரு சக்கரத்தை வரைந்து, அதை எடுத்து திறமையை நிரூபிக்குமாறு சலந்தரனிடம் கூறினார். சலந்தரன் நிலத்தோடு அந்தச் சக்கரத்தைப் பெயர்த்து எடுக்க, ஆதி அந்தம் இல்லாத ஈசன் அதை சக்ராயுதமாக மாற்றி சலந்தரனைக் கொன்றார்.
ஆற்றல் பொருந்திய இந்த சக்ராயுதத்தை சிவனிடமிருந்து பெறுவதற்காக, மகாவிஷ்ணு திருமாற்பேறு, திருப்பைஞ்ஞீலி ஆகிய இடங்களில் சிவனை வணங்கிப் பூஜித்துவிட்டு திருவீழிமிழலை வந்தார்.
திருவீழி நாதேஸ்வரரை தினமும் ஆயிரம் தாமரை மலர்களால் அர்ச்சித்து வழிபட எண்ணினார் திருமால். அதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டு ஒவ்வொரு நாளும் அர்ச்சனை செய்கிறார். திருமாலின் பக்தியையும் சிவபூஜையையும் உலகறியச் செய்யவேண்டும் என்று நினைத்த விநாயகப் பெருமான், ஒரு நாள் ஒரே ஒரு தாமரை மலரை எடுத்து ஒளித்து வைக்கிறார்.
பூஜையில் கவனமாக இருந்த மகாவிஷ்ணு இதைக் கவனிக்கவில்லை. பூஜை முடியும் நேரத்தில் ஒரு தாமரை மலர் குறைவதைக் கண்டார். வேறு தாமரை மலரைத் தேடிப் பறித்து வந்து பூஜையை முடிப்பதற்குள் தாமதமாகிவிடும் என்பதால், சட்டென்று தாமரை மலர் போன்ற தன் கண் மலரையே எடுத்து ஈசனுக்கு அர்ப்பணித்து பூஜையை நிறைவு செய்தார் கமலக்கண்ணன்.
மனம் குளிர்ந்த சிவபெருமான் அவருக்குக் காட்சியளித்து சக்ராயுதத்தை வழங்கினார். இதனால் சிறப்பு வாய்ந்த தலமான திருவீழிமிழலையில் அருள்பாலிக்கும் சிவபெருமானுக்கு நேத்ரார்ப்பணேஸ்வரர் என்ற பெயரும் ஏற்பட்டது.
இப்போதும், இத்தலத்து உற்சவ மூர்த்தியான கல்யாணசுந்தரரின் வலது பாதத்தின் மேலே மகாவிஷ்ணு அர்ச்சனை செய்த கண் மலரும், அதற்குக் கீழே சக்கரமும் இருப்பதைக் காணலாம்.
இந்த நிகழ்வை திருநாவுக்கரசர் தனது பதிகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
“நீற்றினை நிறையப் பூசி, நித்தல் ஆயிரம் பூக்கொண்டு
ஏற்றுழி ஒருநாள் ஒன்று குறையக் கண் நிறைய இட்ட
ஆற்றலுக்கு ஆழி நல்கி, அவன் கொணர்ந்த இழிச்சம் கோயில்
வீற்றிருந்து அளிப்பர் வீழிமிழலையுள் விகிர்தனாரே”
அப்பர் மட்டுமா பாடியிருக்கிறார்? திருஞானசம்பந்தரையும் பதிகம் பாட வைத்துக் கேட்பதற்காகவே திருவீழிநாதேஸ்வரர் செய்த திருவிளையாடலையும் தெரிந்து கொண்டால், இத்தலத்தின் சிறப்பினை நன்கு உணரலாம்.
ஒரு சமயம் திருவீழிமிழலையில் கடுமையான பஞ்சம் நிலவியது. அந்த சமயத்தில் அப்பரும் சம்பந்தரும் அந்த ஊரில் இருக்கவே, அவர்களின் கனவில் தோன்றிய ஈசன், தினமும் கோயிலின் கிழக்கு மற்றும் மேற்கு பீடத்தில் ஒவ்வொரு பொற்காசுகளைத் தந்து அருள்வதாகச் சொன்னார். அவற்றைக் கொண்டு மக்களுக்கு உணவளிக்குமாறு கூறினார்.
அதன்படியே மறுநாள் முதல், கோயிலின் கிழக்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும், மேற்கு பலிபீடத்தில் ஒரு படிக்காசும் இருப்பதை இருவரும் காண்கிறார்கள். அதைக் கொண்டு மக்களுக்கு உணவளித்து வருகின்றனர்.
ஒரு கட்டத்தில், அப்பருக்கு நல்ல காசும், சம்பந்தருக்கு மாற்று குறைந்த காசும் இறைவன் கொடுத்தார். மாற்றுக் குறையாத நல்ல காசைக் கொண்டு நிறைய பொருள் பெற்று அப்பர் சிறப்பாகத் தொண்டாற்ற, சம்பந்தருக்கு மாற்று குறைந்த காசால் குறைவான பொருளே கிடைத்தது.
மனம் வருந்திய சம்பந்தர், இறைவனிடம் முறையிட்டு “வாசி தீரவே காசு நல்குவீர்,” என்று பதிகம் பாடினார். அதன் பிறகு அவருக்கும் நல்ல காசு கொடுத்து அருளினார் திருவீழிமிழலைநாதர். (சம்பந்தரைப் பாடவைத்துக் கேட்பதற்காகத்தானே இந்தத் திருவிளையாடலே..)
இப்போதும், கோயிலின் கிழக்கிலும் மேற்கிலும் இறைவன் படிக்காசு வைத்தருளிய பலிபீடங்களைக் காணலாம். சம்பந்தர் தங்கியிருந்த மடம் வடக்கு வீதியில் கீழ்க் கோடியிலும், அப்பர் தங்கியிருந்த மடம் வடக்கு வீதியின் மேற்குக் கோடியிலும் உள்ளன.