

வாழ்க்கையில் அனைவருக்கும் மனப்பாடம் செய்ய மிகவும் பிடித்தமானது கந்த சஷ்டி கவசம் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஆன்மீகம் நிறைந்த அதில் உள்ள வரிகள் எதுகை மோனையுடன் எளிமையாக எழுதப்பட்டிருப்பதுதான் முக்கியமான காரணம். அடுத்ததாக ஒவ்வொரு உறுப்பையும் காக்க வேண்டும் என்று கூறப்பட்டிருப்பது அனைவருக்கும் மிகவும் பயனுள்ள கருத்தாகும். இதனால் இதை படிப்பவர்கள் அதிகம் என்றால் மிகையாகாது.
நாம் முருகப்பெருமானின் அருளை முழுமையாகப் பெறவும், வாழ்க்கையில் வரும் தடைகள், பயம் மற்றும் தீவினைகள் நீங்கவும் உலகப் புகழ்பெற்ற 'கந்த சஷ்டி கவசம்' மிகச் சிறந்த பாதுகாப்புத் கவசமாகும். இதனைத் தூய்மையான முறையில், பொருளுடன் பாராயணம் செய்து வந்தால் பல்வேறு விதமான நன்மைகளை அடையலாம். அவற்றை பாராயணம் செய்வதற்கான முறைகள் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.
சஷ்டி கவசம் பாராயண முறை
கந்த சஷ்டி கவசத்தை முறைப்படி பாராயணம் செய்வதற்கு எளிய வழிமுறைகளை பின்பற்றினால் பாராயணம் செய்வதும் எளிது. அதன் பொருள் விளங்குவதும் எளிதாக இருக்கும். அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய பாராயணம் முறை முதலாவதாக,
கால நேரம்: தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்த வேளையிலோ (4:00 AM - 6:00 AM) அல்லது மாலை வேளையிலோ பாராயணம் செய்வது மிகவும் சிறந்தது. செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி திதிகளில் பாராயணம் செய்வது கூடுதல் பலன் தரும்.
படித்து பாராயணம் செய்ய ஆரம்பித்தவுடன் எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ அப்பொழுதெல்லாம் அந்த வரிகளை சொல்லிச் சொல்லி பார்க்க வேண்டும். அப்பொழுதுதான் மனதில் நன்றாகப் பதியும். குறிப்பாக அதிகாலையில் எழுந்து ஒரு முறை புத்தகத்தைப் பார்த்து நன்றாக படித்துவிட்டு, பிறகு சொல்லிப் பார்த்தால் இன்னும் நன்றாக மனதில் பதியும்.
தூய்மை: முதன்முதலாக பாராயணம் ஆரம்பிக்கும் பொழுது குளித்து முடித்து, சுத்தமான ஆடைகளை அணிந்து, பூஜை அறையில் முருகனின் படம் அல்லது விளக்குக்கு முன்பு அமர்ந்து பாராயணம் செய்ய வேண்டும் .முதலில் விநாயகர் வணக்கம் (மூல மந்திரம் அல்லது தோத்திரம்) சொல்லிவிட்டு, முருகப்பெருமானுக்கு தீபம் மற்றும் ஊதுபத்தி காட்டி மனதார வேண்டிக் கொண்டு ஆரம்பிப்பது மனதை ஒருநிலைப்படுத்தும் செயலாகும். இது தியானம் செய்வதற்கு ஒப்பாகும்.
பின்னர் கவசத்தைத் தொடங்கும் முன் "ஓம் சரவணபவ" அல்லது "ஓம் முருகா" மந்திரத்தை மூன்று முறை மனதிற்குள் சொல்லி அமைதிப்படுத்திக்கொள்ள வேண்டும். மனம் நிதானத்திற்கு வந்தவுடன் அவசரமாக வாசிக்காமல், ஒவ்வொரு வரியும் என்ன அர்த்தம் என்பதை மனத்தில் நினைத்து, நிதானமாகப் பக்திப் பூர்வமாகப் பாராயணம் செய்யவேண்டும்.
கந்த சஷ்டி கவசத்தில் 'காப்பு' பகுதியிலிருந்து தொடங்கி, இறுதியில் உள்ள 'நூல் பயன்' வரை முழுமையாகப் பாராயணம் செய்யவேண்டும். பாராயணத்தை நன்றாக செய்வதற்கு அதன் ஒவ்வொரு பொருளையும் முழுமையாக உணர்ந்து மனப்பாடம் செய்ய வேண்டும். அப்படி செய்யும் பொழுது எப்பொழுது எழுப்பிக் கேட்டாலும் அந்த வரிகளும் பொருளும் மறக்காமல் இருக்கும்.
கந்த சஷ்டி கவசத்தின் முக்கியப் பொருள்கள்:
பாலவராய கவிராயரால் இயற்றப்பட்ட இக்கவசம், மனிதனின் ஒவ்வொரு உறுப்பையும் இறைவனின் பேரருள் காக்க வேண்டும் என்று பிரார்த்திக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. 'காக்க காக்க கனகவேல் காக்க 'என்று ஆரம்பித்து அந்த செய்யுள் முழுவதும் எதுகை மோனையுடன் அமைய பெற்றுள்ளதால் மனப்பாடம் செய்வதும் அதன் பொருளை உணர்ந்து மனதில் நிலைநிறுத்திக் கொள்வதும் மிகவும் எளிமையாக இருக்கும் .
மேலும் கந்த சஷ்டி கவசத்தில் கூறப்பட்டுள்ள முருகனின் வெவ்வேறு வடிவங்களும் பெயர்களும் (வேல், மயில், சேவற்கொடி, ஆறுமுகன்) நம் உடல் உறுப்புகளான தலை, நெற்றி, கண்கள், நாசி, மார்பு, தோள், வயிறு, கால்கள் என அனைத்தையும் எதிரிகளிடமிருந்தும், பிணிகளிடமிருந்தும் எப்படிப் பாதுகாக்கின்றன என்பதை இது விவரிக்கிறது.
அந்த விவரத்தை படிக்கும் பொழுதே நம் எண்ணத்தை அந்தந்த உறுப்புகளின் மீது பதிய வைத்து படித்தால் சற்றென்று மனதிற்குள் பதியும். அப்படி படித்தவைகள் மறந்து போனால் எந்த இடத்தில் எப்படி அமர்ந்து படித்தோம் என்பதை நினைவில் கொண்டு வந்தால் தடைபடாமல் வார்த்தைகள் வந்து விழும்.
பயம் போக்குதல்:
வல்ல பூதம் வலாட்டிகப் பேய்கள் அல்லற் படுத்தும் அடங்கா முனியும் என் பெயர் சொல்லவும் இடி விழுந்து ஓடிட.."என்று மனிதர்களைத் தாக்கக்கூடிய அல்லது பயமுறுத்தக்கூடிய வலிமை வாய்ந்த கொடிய பூதங்களும், பிடிவாதமான மற்றும் தீமை செய்யக்கூடிய முரட்டுப் பேய்களும்,மனிதர்களைத் துன்புறுத்தித் தொல்லை தரும் கட்டுப்படுத்த முடியாத முனி பிசாசுகளும்,செய்வினை, பகைகள், விலங்குகளின் தொல்லைகள் என்னை அணுகாமல் முருகனின் வேல் காக்க வேண்டும்" என்று சரணடையும் பக்தியின் வெளிப்பாடே கவசமாகும். இப்படி வேண்டுவதை கூறுவது தான் கந்த சஷ்டி கவசத்தின் முக்கியமான பொருளாகும்.
இறைவனின் கருணை:
இப்படி மனமுருக வேண்டுவதால் முருகப்பெருமான் தனது ஞானவேலைக் கொண்டு பக்தர்களை எம பயத்திலிருந்தும், தீய சக்திகளிலிருந்தும் காப்பாற்றி நல்வாழ்வு தருவார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையை இது வழங்குகிறது. இதைத்தான் இறைவனின் கருணை என்கிறோம்.
பாராயண நன்மைகள்:
இப்படி கந்த சஷ்டி கவசத்தின் ஒவ்வொரு வார்த்தையின் பொருளையும் உணர்ந்து பாராயணம் செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பதை ஒவ்வொருவர் மனமும் எடை போடுவது இயல்புதானே!
அப்படி கிடைப்பதுதான் மனஉறுதி மற்றும் தைரியம்: பயந்த சுபாவம் உள்ளவர்கள் தினமும் இதைப் பாராயணம் செய்து வர, மனதில் வீரம் மற்றும் ஆன்மீகச் சக்தி பெருகும். உடல் மற்றும் மன ரீதியான தொல்லைகள் நீங்கி, நல்வாழ்வு மற்றும் நீண்ட ஆயுள் கிடைக்கும்.வீட்டில் நேர்மறை ஆற்றல் (Positive Energy) அதிகரித்து, அமைதியும் சுபீட்சமும் நிலவும்.
மனது எப்பொழுதெல்லாம் சஞ்சலப்படுகிறதோ அதுபோன்ற சமயங்களில், மருத்துவரிடம் செல்லும் பொழுது,ஏதாவது நேர்முகத் தேர்வுக்கு செல்லும் பொழுது என்று மனதில் ஒரு தைரியத்தையும் தன்னம்பிக்கையும் வரவழைப்பதற்கு கந்த சஷ்டி கவசத்தை ஒரு நல்ல காப்பாக பயன்படுத்தி நன்மை அடையலாம்.
அது மட்டுமின்றி விசேஷமான இடங்களுக்குச் செல்லும் பொழுதும், யாருக்காவது பரிசு பொருட்களை கொடுக்கும் பொழுதும், திருமணங்களில் மணமக்களை வாழ்த்துவதற்கும் கந்த சஷ்டி கவச வரிகளை (வாழ்க வாழ்க வாழ்க சீரடியார் எல்லாம்) என்று வாழ்த்தி அவர்களுக்கு அன்பை வெளிப்படுத்தலாம். இதனால் இறைவன் அருள் அனைவருக்கும் கிடைக்கும்.
இப்படி இந்த சக்தி மிகுந்த ஆன்மீகம் நிறைந்த கந்த சஷ்டி கவச வரிகளை பாராயணம் செய்வதால் ஆன்மிகம் தழைக்கும். அன்பு பெருகும். அமைதியும் மனதைரியமும் நிலைபெறும் என்பது உறுதி.