

கார்த்திகை தீபத்திற்கு அடுத்தநாள் (மூன்றாம் நாள்) வீட்டில் தீபம் ஏற்றுவது மிகவும் எளிமையான, ஆனால் மிகுந்த மங்களம் தரும் வழிபாட்டு முறையாகும். முதல் இரண்டு நாட்களில் ஏற்றிய அகல் விளக்குகளைச் சுத்தம் செய்து, மாலை வேளையில் மீண்டும் தீபமேற்றி வழிபடுவதே இதன் முக்கிய நடைமுறையாகும்.
அப்படி மூன்றாம் நாள் ஏற்றப்படும் தீபத்தின் முக்கிய சிறப்புகள் மற்றும் வழிபாட்டு முறை , எந்தெந்த காரணங்களால் மூன்றாவது நாளில் விளக்கேற்றுவது அவசியம் என்பதைப் பற்றி இப்பதிவில் காண்போம்
மூன்றாம் நாள் தீபத்தின் முக்கியச் சிறப்புகள்: கார்த்திகை மாதம் முழுவதும் தொடர்ந்து விளக்கேற்ற இயலாதவர்கள், குறைந்தபட்சம் பரணி, கார்த்திகை மற்றும் அதற்கு அடுத்த நாள் எனத் தொடர்ந்து மூன்று நாட்கள் வீட்டில் தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறப்பானதாகப் போற்றப்படுகிறது. முதல் இரண்டு நாட்களில் தொடங்கிய ஒளி வழிபாட்டைத் தொடர்ந்து மூன்றாம் நாளும் விளக்கேற்றுவது அந்தத் திருநாளின் அருள் முழுமையாக வீட்டில் தங்கியிருக்கச் செய்யும் நம்பிக்கையைக் கொண்டுள்ளது.
மங்களமும் செல்வச் செழிப்பும் நிலைத்திருத்தல்: கார்த்திகைத் திருநாளில் ஏற்றப்பட்ட தீபங்களின் ஒளி தொடர்ச்சியாக மூன்றாம் நாளும் வீட்டில் பிரகாசிக்கும் போது, மகாலட்சுமியின் அருளும் மங்கலமும் இல்லத்தில் நிலைத்திருக்கும் என்றும், எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி அமைதி பெருகும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.
விரத நிறைவு மற்றும் நிவேதனப் பகிர்வு: முதல் இரண்டு நாட்களில் விரதம் இருந்தவர்கள் அல்லது சிறப்பு வழிபாடு செய்தவர்கள், மூன்றாம் நாளிலும் இறைவனுக்கு விளக்கேற்றி, நைவேத்தியம் படைத்து, உறவினர்கள் மற்றும் அயல் வீட்டாருடன் இனிப்புகளையும், பிரசாதங்களையும் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சியையும் ஒற்றுமையையும் வளர்க்கிறது.
ஆலயத் திருவிழாக்களின் தொடர்ச்சி: பல சிவாலயங்கள் மற்றும் முருகன் கோயில்களில் கார்த்திகைத் திருவிழாவை ஒட்டி நடைபெறும் சிறப்பு வழிபாடுகள், தெப்பம் அல்லது உற்சவ நிகழ்வுகளின் தொடர்ச்சியாகவும் மூன்றாம் நாள் தீப வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது.
தீபம் ஏற்ற உகந்த நேரம்: மாலை வேளை (பிரதோஷ / சந்தியா காலம்): சூரியன் மறையும் நேரமான மாலை 5:45 மணி முதல் 7:00 மணிக்குள் தீபம் ஏற்றுவது மிகவும் சிறப்பானது.
முன் தயாரிப்புகள்: முதல் இரண்டு நாட்களில் ஏற்றிய மண் அகல் விளக்குகளில் உள்ள பழைய திரி மற்றும் எண்ணெய் பிசுக்கைத் துடைத்துச் சுத்தம் செய்து அதிக எண்ணிக்கை இல்லாவிட்டாலும், குறைந்தபட்சம் 5, 9, 11 என்று ஏற்றுவது வழக்கம். அதற்கு மேல் தேவை என்றால் 27 என்ற ஒற்றைப்படை எண்ணிக்கையில் விளக்குகளைத் தயார் செய்து ஏற்றுவதும் உண்டு.
மஞ்சள், குங்குமம் இடுதல்: சுத்தம் செய்த அகல் விளக்குகளில் சந்தனம் மற்றும் குங்குமப் பொட்டு வைத்து மங்களகரமாக அலங்கரிக்கவும்.
திரி மற்றும் எண்ணெய்: நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி, பஞ்சுத் திரி இட்டு தயார் செய்யவும். குறிப்பாக கருப்புத் திரியைத் தவிர்த்து, வெள்ளை அல்லது மஞ்சள் நிறப் பஞ்சுத்திரியைப் பயன்படுத்துவது நல்லது.
வீட்டில் தீபம் ஏற்றும் வரிசை முறை:
பூஜை அறையில் முதல் விளக்கு:
முதலில் பூஜை அறையில் உள்ள காமாட்சி விளக்கு அல்லது குத்துவிளக்கை ஏற்றி, இறைவனை வணங்க வேண்டும். பின்னர் பூஜை அறையின் இருபுறமும் அகல்விளக்குகளை ஏற்றவும்.
வாசல் மற்றும் நிலைப்படி:
பூஜை அறையில் ஏற்றிய தீபத்திலிருந்து ஒரு விளக்கை எடுத்து வந்து, வீட்டின் தலைவாசல் நிலைப்படியின் இருபுறமும் வைக்கவும்.
துளசி மாடம் மற்றும் முற்றம்:
வீட்டில் துளசி மாடம் இருந்தால், அதன் முன் ஒரு அகல் விளக்கேற்றி வைக்க வேண்டும்.
சமையலறை மற்றும் பால்கனி:
அன்னபூரணி வாசம் செய்யும் இடமான சமையலறையில் ஒரு சிறிய விளக்கையும், வீட்டின் ஜன்னல்கள், பால்கனி மற்றும் மாடிப் படிகளிலும் வரிசையாக விளக்குகளை ஏற்றி வைக்கலாம்.
நைவேத்தியம் மற்றும் வழிபாடு:
விளக்குகளை ஏற்றிய பின், வீட்டில் இருக்கும் பால், கற்கண்டு, பழங்கள், வெற்றிலை-பாக்கு அல்லது முதல் நாள் செய்து டப்பாவில் அடைத்து பூஜைக்கு வைக்காத, புழங்காத அப்பம், பொரி உருண்டை ஆகியவற்றை இறைவனுக்கு நைவேத்தியமாகப் படைக்கலாம்.
விளக்குகள் தானாக மலையேறும் வரை எரியவிடுவது நல்லது. வாயால் ஊதி மலையேற்றுவதை தவிர்க்கவேண்டும். அவசியம் ஏற்பட்டால் பூவால் அல்லது சிறிய கரண்டியால் திரியை உள்ளே தள்ளி மலையேற்றலாம்.
கிராமியப் பண்பாடு:
கிராமத்து வழக்கம் என்னவென்றால் அண்ணாமலையார் தீபத்தன்று முக்கியமான எல்லா இடங்களிலும் (கிணற்றடி ,கோடி, குப்பை, தோட்டம், மிகவும் கவனமாக தொழுவத்தில் இருக்கும் சிறப்பு மாடம்) தீபம் ஏற்றி வழிபடுவது வழக்கம். அப்படியும் எங்கேயாவது விடுபட்டிருந்தால் மூன்றாவது நாளில் அந்த இடங்களில் தீபம் ஏற்றி வழிபடுவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். அப்படி வழிபடுவதால் மூன்று நாளில் தீபம் ஏற்றிய நிறைவு கிடைக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
மேலும் கார்த்திகை தீபத்தன்று புது மண் சட்டியில் களி செய்து படைப்பது வழக்கம். அதற்கு காரணம் கேட்டால் இப்படி படைப்பதால் உணவுப் பொருட்களில் பூச்சி பொட்டு ஒட்டாது. சாப்பாட்டில் தவறியும் பூச்சிகள் விழாது என்று கூறுவார்கள்.
ஆம், அப்பொழுதெல்லாம் கூரை மற்றும் நாட்டு ஓடு போட்ட வீடுகள்தான் அதிகம். அதிலும் கார்த்திகை மாதம் மழைக்காலம் என்பதால் பூச்சிகள் கூரைகளில் தங்குவதற்கு ஏதுவாக இருக்கும். மின்சார பயன்பாடும் இல்லாமல் விளக்கு வெளிச்சங்களில்தான் சாப்பிட்டு வந்தார்கள். அப்பொழுது விளக்கு பூச்சிகள், சாப்பிடும் பொழுது உணவில் விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம். அப்பொழுது ஏற்பட்ட பழக்கம்தான் இது.
அடுத்ததாக தீபாவளிக்கு அதிரச மாவு செய்யும்பொழுது அதிகமாக செய்து வைத்திருந்து, அந்த மாவை இந்த மூன்றாவது நாளில் பயன்படுத்தி அதிரசங்களை தயாரித்து உறவு முறைகளுக்கு தாம்பூலத்தோடு கொடுப்பதும், உள்ளூரில் இருக்கும் பிறந்த பெண்களுக்கு பணம் வைத்தும் கார்த்திகை சீராக கொடுப்பது வழக்கம்.
அதிரசம் செய்ய முடியாதவர்கள் பச்சரிசி பாசிப்பயிறு சேர்த்து பணியாரம் செய்தும் கொடுப்பதுண்டு. (புதுமண தம்பதியர்களுக்கு கார்த்திகை முதல் நாளே கார்த்திகை அழைப்பு நடைபெற்று விடும்).ஆதலால் மூன்றாவது நாளும் அவர்களுக்கு அதிகமாக வேலை இருக்கும். அதை மிகவும் உற்சாகத்துடன் செய்வார்கள்.
ஆமாம்! ஆளும் பேருமாக செய்யும்பொழுது எந்தப் பண்டிகையிலும் உற்சாகம் கூடுவது இயல்புதானே! இப்படி கோலாகலமாக தீபத்திருநாள் நிறைவு பெறுவது சிறப்பு.