கையில் வாள் இல்லை, பிரம்மாண்ட குதிரை இல்லை! கீழப்பெருமழையின் விசித்திர ஐயனார் சாமி!

Aiyanar temple - ஐயனார் சாமி
Aiyanar temple - ஐயனார் சாமிAI Image
Updated on

கதைக்கலாம் கலக்கலாம் வாங்க… கல்கி ஆன்லைன் வழங்கும் எழுத்து மேடையில் “எங்க ஊர் சாமி எனும் தலைப்பில் உங்க ஊர் சாமியின் மகிமையை சொல்லுங்க’’ன்னு கேட்டிருந்தோம். அதில் தேர்வான சுவாரஸ்யமான கட்டுரைகளில் ஐந்தாவது கட்டுரை இதோ…

ஐயனார் என்றதும்,முன்னங்கால்களைத் தூக்கியபடி தாவும் குதிரை சிலையின்மீது பெரிய மீசையுடன், கையில் வாளேந்தி, கர்ண கடூரமாகப் பார்வையை வீசும் சிலையை நீங்கள் மனத்தில் நினைத்துக் கொண்டால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. எங்கள் கீழப்பெருமழை ஐயனார் என்டைர்லி டிபரண்ட்!

ஆமாம்! முற்றிலும் வேறுபட்டவர். இந்த வரையறை களுக்கெல்லாம் அப்பாற்பட்டவர். ஊரைவிட்டு மிகவும் தள்ளி, மரைக்காக் கோரையாற்றை ஒட்டிய நீரோடைக்குப் பக்கத்தில், அமைதி தவழும் விளை நிலங்களின் அருகில் உள்ள சிறிய நிலப்பரப்பே எங்களூர் ஐயனார் சாமியின் இருப்பிடம்.

Aiyanar temple - ஐயனார் சாமி
ரெ. ஆத்மநாதன்

சிறு மைதானத்தின் தென்மேற்குப் பகுதியில், எங்கள் பகுதிகளில் எங்கும் காணாத இரண்டு சிறு மரங்கள் மற்றும் மைதானத்தின் கிழக்குப் பகுதியில் சில பனை மரங்கள் ஆகியவையே அவரின் அடையாளம். எளிமையின் இருப்பிடம். அந்த இனந்தெரியா மரங்களின் அடியில் ஒரு மண்சட்டி மட்டும் காணப்படும்.

வெள்ளிக்கிழமைகளில் ‘பச்சை’என்ற பெயரில், ஊறவைத்த பச்சரிசியில் நாட்டுச் சர்க்கரை, தேங்காய் கீறல்கள் சேர்த்த கலவை, வாழைப்பழம்,அந்தந்த சீசனில் கிடைக்கும் மாம்பழம், பலாப்பழம் போன்ற எல்லாவற்றையும் ராவாகவே படைத்து, சாம்பிராணிப் புகையில் அவற்றை ஐயனாருக்குக் காணிக்கை ஆக்கிவிட்டு, பிரசாதமாகச் சாப்பிடுவோம்!

அந்தச் சட்டியில் தணல் வளர்த்து சாம்பிராணி போடுவதோடு சரி! அனைத்தும் ஸ்ட்ரிக்டாக ஆண்களுக்கு மட்டுமே. பெண்களுக்கு நோ அட்மிஷன்! ஊரைப் பொதுவாகவும், ஊர் மக்கள் ஒவ்வொருவருக்கும் தனியாக உதவவும் சாமி என்றும் தயங்கியதே இல்லை! முப்பாட்டனார் காலத்திலும், அப்பா காலத்திலும், அடியேன் காலத்திலும் அவரின் உதவிகள், கண்கூடானவை. முப்பாட்டனார் காலத்தில் ஊரில் மாட்டுத் திருடர்கள் கை வரிசை காட்டியபோது ஊரார் எவ்வளவு முயன்றும், அவர்களைப் பிடிக்கவோ, திருட்டை நிறுத்தவோ முடியாது போனதால், ஐயனாரின் மைதானத்தில் மாடுகளைக் கொண்டு வந்து கட்டிவிட்டு, தூரத்திலுள்ள தங்கள் வீடுகளுக்குச் சென்று விட்டார்களாம்!

இதையும் படியுங்கள்:
ஶ்ரீ மணவாள மாமுனிகள் யார்? 'ஸ்ரீ மணவாள மாமுனிகளை வணங்குகிறேன்' என்று பாடியது யார்?
Aiyanar temple - ஐயனார் சாமி

பொழுது விடிந்ததும் வந்து பார்த்தால் மாட்டை அவிழ்த்தபடி ஒருவரும், இரண்டு மூன்று வயல்கள்தாண்டி மற்றவரும் பார்வையிழந்து தவித்துக் கொண்டிருந்தார்களாம். ஊரார் அவர்களை மீட்டு, மன்னிக்க, அவர்களோ ஐயனாருக்கு சிறப்புப் பூஜைகள் செய்ததுடன், பெருஞ்சிலைகளும் கொண்டு வந்து வைத்தார்களாம். எளிமை விரும்பியான ஐயனார் அன்றிரவே அவற்றை உடைத்துப் போட்டு விட்டாராம்!

அப்பா காலத்தில், ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் வந்து விட்டாலே மரைக்காக் கோரையாறு பொங்கிப் பிரவாகம் எடுத்துவிடுமாம். எந்த நேரம் எந்த இடத்தில் உடைப்பு ஏற்பட்டு விடுமோ என்ற அச்சத்தில் ஊரார் இரவெல்லாம் கண் விழித்து காவலுக்கு இருப்பார்களாம். எவ்வளவு விழிப்புடன் இருந்தாலும் அசதியில் கண்ணயர்ந்து விட்டால், ஐயனார் குதிரையில் போகும் குளம்படிச் சத்தம் கேட்குமாம். அந்தச் சத்தத்தில் அவர்களை ஐயனார் விழிக்க வைத்து விடுவாராம்.

Aiyanar temple - ஐயனார் சாமி
Aiyanar temple - ஐயனார் சாமிAI Image

அவர்களும் விழித்து உஷாராகி, கொண்டு வந்து தயாராக வைத்திருக்கும் வைக்கோல் கட்டுக்களை உடைப்புக்குத் தயாராகும் இடங்களில் வைத்து மண்போட்டு மூடி, கரையைப் பலப்படுத்தி, உடைப்பு ஏற்படாமல் காப்பாற்றி விடுவார்களாம்!

ஊரில் தங்கும் சந்தர்ப்பங்களில் நான் வயல் வேலைகளைக் கவனிப்பதுண்டு. ஐயனார் கோயிலின் எதிரே எங்கள் நாற்றங்கால் ஒன்றுண்டு. வெள்ளிக் கிழமைகளில் அந்த வயல் பக்கம் போகையில், கோயில் பாம்பைக் காணலாம் என்றும், அதுவே நம் வயல்களின் பாதுகாவலன் என்றும் என் தந்தையார் கூறக் கேட்டிருக்கிறேன். ஒரு சில வெள்ளிக் கிழமைகளில் அதனைக் காணும் பாக்கியமும் பெற்றிருக்கிறேன்.

அந்த வருடம் திடீரென்று வந்த பயிர் நோயால் நாற்றங்கால்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட, ஐயனார் கோயிலின் எதிரேயுள்ள எங்கள் நாற்றங்காலில் மட்டும் பயிர் நன்றாக வளர்ந்திருந்தது. ஊருக்கு நாற்றுப் பறிக்க வந்த அயலூர் ஆட்கள் அதனைப் பார்க்க, மாலை எல்லோரும் போன பிறகு, யாரும் அறியாமல் ஆளுக்கு ஒரு கட்டு நாற்றைப் பறித்துக் கட்டிச்சென்றால் நல்ல விலைக்கு விற்று காசு பார்க்கலாம் என்று முடிவு செய்து, பொழுது போன பிறகு இரண்டு, மூன்று பேர் சென்று நாற்றங்காலில் இறங்கியுள்ளார்கள். கோயில் நல்ல பாம்பு சீறிக்கொண்டு துரத்த, அவர்கள் ஓட, அவர்களின் திருட்டுப் புத்தி ஊராருக்குத் தெரிந்துவிட்டது! எளிமையின் இருப்பிடமான எங்கள் ஐயனார், என்றைக்கும் எங்கள் காவல் தெய்வந்தான்!

இந்தப் பதிவை வாசிப்பதன் மூலம், தமிழ்நாட்டின் ஆழமான கிராமிய வழிபாட்டு முறைகளின் எதார்த்தத்தையும், ஆடம்பரங்களை மறுக்கும் எளிய ஆன்மீகத்தின் உண்மையான சக்தியையும் நீங்கள் உணர்வீர்கள். உங்கள் குலதெய்வம் மற்றும் கிராமத்து எல்லை தெய்வங்களின் மீதான நம்பிக்கையும், பக்திப் பிணைப்பும் மேலும் பலப்படும்.

logo
Kalki Online
kalkionline.com