பித்ரு தோஷம் நீக்கும் கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் கோவில்: ஒருமுறை தரிசித்தால் இவ்வளவு நன்மைகளா?

லவ-குசர்கள் வழிபட்ட அற்புதத் தலம்; இங்குள்ள அம்பாளையும் நந்தியையும் தரிசித்தால் திருமணம் கைகூடும்!
குறுங்காலீஸ்வரர் கோவில் - Kurungaleeswarar Temple,
குறுங்காலீஸ்வரர் கோவில் - Kurungaleeswarar Temple,
முனைவர் என். பத்ரி

சுமார் நாற்பது எட்டு ஆண்டுகள் கல்விப் பணியாற்றியுள்ள டாக்டர்.என்.பத்ரி (1956) தனது பி.எச்.டி. படிப்பை கல்வியியல் மற்றும் ஆங்கிலத்தில் முடித்தவர். NCERT விருதையும் பெற்றவர்.அகில இந்திய வானொலியின் கல்வி ஒலிபரப்புக்கான ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக பணியாற்றியுள்ளார். பல்வேறு பல்கலைக்கழகங்களின் தொலைதூரக்கல்வியின் படிப்புகளுக்கு கருத்தாளாராக பணியாற்றியுள்ளார். பல முன்னோடி தமிழ் இதழ்களில் இவருடைய கட்டுரைகளும் சிறுகதைகளும் பிரசுரிக்கப்பட்டு வருகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு கொண்டு தற்கால இளஞர்களுக்கு வழிகாட்டி வருகிறார்.

Updated on: 

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் அமைந்துள்ளது குறுங்காலீஸ்வரர் கோவில். இக்கோவிலின் இறைவனின் திருநாமம் குறுங்காலீஸ்வரர், குசலவபுரீஸ்வரர் ஆகியவை ஆகும். இறைவியின் திருநாமம் தர்மசம்வர்த்தினி ஆகும். சுவாமியும், சுவாமியின் வலப்புறம் தர்மசம்வர்த்தினி அம்பிகையும் வடக்கு நோக்கி காட்சி அளிக்கின்றனர். அம்பாள் அறம் வளர்த்த நாயகி என்றும் பக்தர்களால் அழைக்கப்படுகிறார்.

மதுரையில் சுவாமிக்கு வலப்புறத்தில் மீனாட்சி அம்மன் காட்சியளிப்பது போல் இத்தலத்திலும் அம்பாள் சுவாமிக்கு வலப் புறத்தில் காட்சி அளிக்கிறாள். இவர் அதிக சக்தியுடன் உள்ள இவள் இடது காலை முன்னோக்கி வைத்தபடி காட்சி தருவது மற்றொரு சிறப்பம்சம் ஆகும்.

தன்னை வேண்டும் பக்தர்களுக்கு விரைந்து வந்து அருள் செய்வதற்காக இவ்வாறு அம்மன் காட்சியளிப்பதாகக் கூறப்படுகிறது. சுவாமிக்கு வலது பக்கம் இருக்கும் அம்பாளை வணங்கினால் கல்யாணம் கைக்கூடும் என்பது ஐதீகம்.இந்தக் கோவிலில் மூக்கனாங்கயிறுடன் இருக்கின்ற நந்தியை நாம் தரிசனம் செய்ய முடியும். இவ்வாறு நாம் வேறு எந்த தலத்திலும் நந்தியை தரிசிக்க இயலாது.

சோழ மன்னன் ஒருவன், இவ்வழியே தேரில் சென்றபோது தேரின் சக்கரம் லிங்கத்தின் மீது ஏறி ரத்தம் வெளிப்பட்டது. பூமிக்கடியில் லிங்கம் இருந்ததைக் கண்ட மன்னன் பயந்துப் போனான். அதே இடத்தில் ஈஸ்வரனுக்கு கோயில் ஒன்றை எழுப்பினான். தேர்ச்சக்கரம் ஏறியதால் இந்த லிங்கத்தின் பாகம் பாதி நிலத்தில் புதைந்துவிட்டது.

எனவே இங்கு சிவன் மிகக் குள்ளமானவராக காட்சி அளிக்கிறார். இதனால் இந்தக்கோவிலில் உள்ள சுவாமிக்கு 'குறுங்காலீஸ்வரர்' என்ற பெயர் உண்டானது. 'குசலவம்' என்றால் 'குள்ளம்' என்றும் பொருள் உண்டு. இதன் அடிப்படையில் இவர்,’குசலவபுரீஸ்வரர்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

இதையும் படியுங்கள்:
சங்கரன்கோவில் புற்றுமண் பிரசாத மகிமை: நோய்களையும் தோஷங்களையும் தீர்க்கும் கோமதி அம்மன் சக்தி!
குறுங்காலீஸ்வரர் கோவில் - Kurungaleeswarar Temple,

தங்களின் தந்தை ராமனை எதிர்த்துப் போரிட்டதால், லவ குசர்களை பித்ரு தோஷம் பிடித்துக்கொண்டது. அந்த தோஷம் நீங்க லவ-குசர்கள் தாங்கள் போரிட்ட அதே இடத்தில் ஒரு பலாமரத்தின் அடியில் சிவலிங்கத்தை நிறுவி வழிபட்டனர். லிங்கம் பெரியதாக இருந்ததால் சிறுவர்களான லவ-குசர்களால் நிமிர்ந்து நின்று பூசிப்பதில் சிரமம் ஏற்பட்டது.

எனவே, லவ-குசர்கள் எளிதாய் பூசிக்க ஏற்றவாறு தன் திருமேனியை குறுக்கிக்கொண்டு குறுங்காலீஸ்வரராய் ஈசன் காட்சி அளித்தார்.

ஈசனின் கருணையைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த லவ-குசர்கள் தொடர்ந்து ஈசனை வழிபட்டு தோஷ நிவார்த்தி அடைந்தனர். அவரை நினைத்து வழிபட்டால் பித்ருதோஷம் நீங்கும் என்பது ஐதீகம்.

கோயிலுக்கு முன் பெரிய 16 கால் மண்டபம் உள்ளது. ஒரு தூணில் சரபேஸ்வரர் காட்சி அளிக்கிறார். இந்த சரபேஸ்வரர் வழிபாடு இங்கு மிகப் பிரசித்தம் ஆகும். இங்கு ஞாயிறுதோறும் மாலை ராகுகால நேரங்களில் பெருந்திரளான மக்கள் கூடி சரபேஸ்வரர் வழிபாடு நடத்துகின்றனர்.

இக்கோவில் வடக்கு நோக்கியிருப்பதால், இது ஒரு மோட்சத் தலமாகவும் கருதப்படுகிறது. பித்ருதோஷம் உள்ளவர்கள் குசலவ தீர்த்தத்தில் பரிகார பூஜைகளும், தர்ப்பணமும் செய்து கொள்கிறார்கள். பெற்றோருக்கு நீண்டநாள் தர்ப்பணம் செய்யாதவர்கள், அவர்கள் மறைந்த திதி, நட்சத்திரம் தெரியாதவர்கள் இங்கு எந்த நாளிலும் தர்ப்பணம் செய்யலாம்.

குறுங்காலீஸ்வரர் கோவில் - Kurungaleeswarar Temple,
குறுங்காலீஸ்வரர் கோவில் - Kurungaleeswarar Temple,

இத்தலம் 'ஆதிபிரதோஷத்தலம்' என்றும் அழைக்கப் படுகிறது. ஒரு பிரதோஷ தினத்தில் குறுங்காலீஸ்வரரைத் தரிசித்தால் ஆயிரம் பிரதோஷ தரிசனம் செய்த பலனும், ஒரு சனி பிரதோஷ தரிசனம் செய்தால் கோடி பிரதோஷ தரிசன பலனும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இக்கோவில், கோயம்பேடு மெட்ரோ நிலையம் மற்றும் மார்கெட் பகுதியில் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் ஈசனை நாம் வாழ்வில் ஒரு முறையாவது தரிசித்து நமது வேண்டுதல்களை நிறைவேற்றிக்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
மதுரை நகரின் மர்மமான காவலன்: 2000 ஆண்டு பழமையான கூடலழகர் கோவிலின் இரகசியங்கள்!
குறுங்காலீஸ்வரர் கோவில் - Kurungaleeswarar Temple,
logo
Kalki Online
kalkionline.com