

ஆன்மீகத்திலும் வாழ்வியலிலும் விளக்கேற்றுவது இருளை அகற்றி ஒளியைத் தரும் புனிதமான செயலாகக் கருதப்படுகிறது. விளக்கில் நாம் பயன்படுத்தும் எண்ணெய், தீபம் மட்டுமின்றி, அதில் இடும் 'திரி'க்கும் தனித்துவமான ஆற்றல் உண்டு. சரியான திரியைக் கொண்டு விளக்கேற்றும்போது, அது வீட்டில் நேர்மறை ஆற்றலைப் பெருக்கி, செல்வ வளத்தையும் தெய்வ அருளையும் ஈர்த்துத் தரும் என்பது நம்பிக்கை.
செல்வத்தைப் பெருக்கும் விளக்கு திரி வகைகள் - வெவ்வேறு திரிகள் வெவ்வேறு பலன்களைத் தரவல்லவை:
பஞ்சு திரி:
பொதுவான மங்கள காரியங்களுக்கும், வீட்டில் அமைதி நிலவவும் பயன்படும்.
தாமரைத் தண்டு திரி:
மகாலட்சுமியின் பரிபூரண அருளைப் பெற்றுத்தரும். தீராத கடன்களைத் தீர்த்து, தொழில் மற்றும் வியாபாரத்தில் நிலைத்த செல்வத்தை ஈர்க்கும்.
வாழை நார்த் திரி:
குடும்பத்தில் உள்ள மனக்கசப்புகளை நீக்கி, குலதெய்வத்தின் அருளையும், அமைதியையும் தரும்.
சிவப்பு நிறத் திரி:
திருமணம் மற்றும் சுபகாரியத் தடைகளை நீக்கும்.
மஞ்சள் நிறத் திரி:
அம்பிகையின் அருளையும், பொன் பொருள் சேர்க்கையையும் தரும்.
வெள்ளை எருக்கன் திரி மற்றும் விநாயகர் அருள்:
ஆன்மீகத்தில் வெள்ளை எருக்கன் செடி மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. வெள்ளை எருக்கன் பட்டையின் நாரில் இருந்து திரிக்கப்படும் 'வெள்ளை எருக்கன் திரி' விநாயகப் பெருமானுக்கு மிகவும் உகந்தது.
விக்னங்களை நீக்கும்: விநாயகர் தடைகளை உடைப்பவர். வெள்ளை எருக்கன் திரியில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி விளக்கேற்றினால், தொழில் மற்றும் வாழ்வில் ஏற்படும் தடைகள் அனைத்தும் அகலும்.
செல்வ வளம்: பணப்புழக்கம் அதிகரித்து, தொழில் வளர்ச்சி உண்டாகும்.
எதிர்மறை ஆற்றல் விலகும்: வீட்டில் உள்ள செய்வினை தோஷங்கள், கண் திருஷ்டி மற்றும் ஏவல் போன்ற எதிர்மறை சக்திகள் விலகி, லட்சுமி கடாட்சம் பெருகும்.
ராகு-கேது தோஷ நிவர்த்தி: எருக்கன் திரி விளக்கு ராகு-கேது தோஷங்களை போக்கி, மன அமைதியைத்தரும்.
எருக்கன் திரியின் பிற சிறப்புகளும் பயன்படுத்தும் முறையும்:
வெள்ளை எருக்கன் மூலிகைக்கு மூலிகைகளின் அரசன் என்ற பெயரும் உண்டு. இதன் நாரில் செய்யப்படும் திரியைக் கொண்டு விளக்கேற்றும் போது வெளியாகும் புகை வீட்டில் உள்ள கிருமிகளை அழிக்கும் மருத்துவ குணமும் கொண்டது. மன உளைச்சல், பதற்றம் மற்றும் தேவையில்லாத பயத்தைப் போக்கி மன அமைதியைத்தரும்.
விளக்கேற்றும் முறை:
வெள்ளை எருக்கன் திரியைப் பயன்படுத்தும்போது, அகல் விளக்கில் பசு நெய் அல்லது சுத்தமான நல்லெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும். செவ்வாய், வெள்ளி, சங்கடஹர சதுர்த்தி மற்றும் விநாயகர் சதுர்த்தி நாட்களில் காமாட்சி அம்மன் விளக்கு காமாட்சி அம்மன் விளக்கு ஏற்றுவதோ அல்லது கணபதி மூர்த்தியின் முன் இந்த திரியிட்டு தீபமேற்றி வழிபடுவது இரட்டிப்பு பலன்களை தரும்..
வெள்ளை எருக்கன் திரியின் ஆன்மீகப் பரிகாரங்களும் அறிவியல் நன்மைகளும் மற்றும் விநாயகர் வழிபாடும் கிரக தோஷ நிவர்த்தியும்.
வெள்ளை எருக்கன் மூலிகையானது சூரியனின் அம்சத்தை கொண்டது. ஜாதகத்தில் சூரிய திசை அல்லது சூரிய புத்தி நடப்பவர்கள்,வெள்ளை எருக்கன் திரியில் சுத்தமான பசு நெய் விட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய உதயத்தின் போது விளக்கேற்றி வந்தால் கிரக தோஷங்கள் விலகி சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும்.
தீராத கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தொடர்ந்து 48 நாட்கள் (ஒரு மண்டலம்) விநாயகருக்கு வெள்ளை எருக்கன் திரியிட்டு தீபமேற்றி அருகம்புல் சாற்றி வழிபட்டு வந்தால் கடன் சுமைகள் படிப்படியாக குறையும்.
வீட்டு தோஷங்கள் மற்றும் திருஷ்டி அகல:
ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் மாலை நேரத்தில் வீட்டின் வாசற்படியில் அல்லது பூஜை அறையில் இந்த திரியிட்டு நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் வீட்டில் உள்ள எப்பேர்ப்பட்ட கண்திருஷ்டியும் எதிர்மறை ஆற்றல்களும் விலகும்.
தொழில் நிறுவனங்கள் மற்றும் கடைகளில் வெள்ளிக்கிழமை தோறும் வெள்ளை எருக்கன் திரியில் விளக்கேற்றி வைப்பது வாடிக்கையாளர்களின் வருகையை அதிகரிக்கும்.
அறிவியல் மற்றும் மூலிகை மருத்துவம்:
ஆன்மீகப் பலன்கள் மட்டும் அல்லாமல் வெள்ளை எருக்கன் செடிக்கு சிறந்த மருத்துவக் குணமும் உண்டு. இதன் பட்டையிலிருந்து தயாரிக்கப்படும் திரியில் இருந்து வெளிப்படும் புகையானது காற்றில் உள்ள நுண்கிருமிகளை அழிக்கும் கிருமிநாசினியாகச் செயல்படுகிறது.
இப்புகையை சுவாசிக்கும்போது சுவாசம் சம்பந்தப்பட்ட சிரமங்கள் குறைவதோடு நரம்பு மண்டலம் அமைதியடைந்து மன அழுத்தம் மற்றும் பதட்டம் அகலும்.
தீபம் எரியும்போது வெளியாகும் ஒளியும், திரியிலிருந்து வரும் புகையும் வீட்டிலுள்ள எதிர்மறை அதிர்வுகளை அழிக்கும் தன்மை கொண்டவை. நமது தேவைக்கு ஏற்ப சரியான திரியைத் தேர்ந்தெடுத்து, குறிப்பாக விநாயகருக்கு உகந்த வெள்ளை எருக்கன் திரியில் விளக்கேற்றி வழிபாடு செய்வதன் மூலம் தடைகள் நீங்கி, பொன் பொருளும் செல்வ வளமும் பெருகும் என்பது திண்ணம்.