பக்தர்கள் கவனத்திற்கு: மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 6 நாட்களுக்கு சாமி தரிசனம் ரத்து!

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 6 நாட்கள் வரை மூலவர் மீனாட்சி-சுந்தரேசுவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவர் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவர் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
Updated on

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வருகிற 11 முதல் 16-ம்தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவர் தரிசனம் ரத்து செய்யப்படுவதாகவும், அந்த நாட்களில் திருப்பணிகள் நடைபெறும் எனவும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.

மதுரையின் நடுவே அமைந்துள்ளது மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் (Madurai Meenakshi Sundareswarar Temple). இச்சிவன் கோவிலின் மூலவர் சுந்தரேசுவரர் மற்றும் அம்பிகை மீனாட்சியம்மன் ஆவர். இக்கோவிலை மதுரை மீனாட்சியம்மன் கோவில் என்றும் அழைக்கின்றனர். இது வைகை ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ள மிகப்பழமையான மற்றும் புகழ்பெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க கோயிலாகும்.

இக்கோவில் தமிழ்நாட்டில் உள்ள 366 மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில்களின் மூலக்கோவிலாக உள்ளது. இத்தலத்தில் முதல் பூஜை, அம்பிகை மீனாட்சிக்கே செய்யப்படுகிறது.

இத்தலம் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் பாண்டிய நாட்டுத் தலங்களுள் ஒன்றாகும். அதோடு திருவாசகத் தலங்களுள் ஒன்று எனும் பெருமையையும் உடையது. இத்தலத்தின் பெயரைச் சொன்னாலே முக்தி என்பது சைவர்களின் நம்பிக்கையாகும்.

சிதம்பரம், காசி, திருக்காளத்தி வரிசையில், முக்கியமான நான்காவது தலமாகத் திருவாலவாய் உள்ளது. மேலும் இத்தலம், முக்கியமான சிவத்தலமாக மட்டும் இல்லாமல், அம்பிகையின் 51 சக்தி பீடங்களுள் ஒன்றுமாகும்.

இத்தலத்தின் மூலவர், சுந்தரேசுவரர் சுயம்பு மூர்த்தியாவார். இத்தலத்தின் அம்பாள் (தாயார்) மீனாட்சி அம்மனாவார். இவரது விக்கிரகம், பச்சை மரகதக் கல்லால் ஆனது. அம்பாள் மீனாட்சியின் கருவறையானது, 32 சிங்க உருவங்களும், 64 சிவ கணங்களும், 8 கல் யானைகளும் தாங்கி நிற்கும் அபூர்வமானதாகும்.

இதையும் படியுங்கள்:
மீனாட்சி திருக்கல்யாணத்தில் யாருக்கு முதல் மாங்கல்யம்? பலரும் அறியாத 'பிரியாவிடை' அம்மன் ரகசியம்!
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவர் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

இவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த கோவிலில் வரும் செப்டம்பர் 17-ம்தேதி கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

அதை முன்னிட்டு வரும் 11-ம்தேதி முதல் 16-ந்தேதி வரை மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் தரிசனம் செய்ய இயலாது என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதையொட்டி கோபுரங்களுக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் நிறைவடைந்துள்ளன. 415-க்கும் மேற்பட்ட பரிவார தெய்வங்களுக்கு மருந்து சாற்றுதல் நிகழ்ச்சி நடந்தது. வடக்கு ஆடி வீதியில் 182 குண்டங்களுடன் பிரமாண்ட யாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

இந்த நிலையில் மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்திற்கான யாக சாலை பூஜைகள் வருகிற 6-ம்தேதி முதல் 17-ம்தேதி வரை நடக்கின்றன. அதில் 16-ந்தேதி பரிவார மூர்த்திகள் கும்பாபிஷேகம் நடக்கிறது. அடுத்த நாள் 17-ந்தேதி காலை 7.40 மணிக்கு மேல் 8.10 மணிக்குள் கும்பாபிஷேக பெருவிழா நடக்கிறது. பின்னர் கோவிலில் 18-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மண்டல பூஜைகள் நடக்க உள்ளன.

எனவே கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 11-ம்தேதி முதல் 16-ந்தேதி வரை 6 நாட்களுக்கு மூலவர் மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரரை தரிசனம் செய்ய இயலாது. ஏனெனில் அந்த நாட்களில் மூலவர் சன்னதியில் திருப்பணிகள் தீவிரமாக மேற்கொண்டு சுவாமிகளுக்கு மருந்து சாற்றப்படும். எனவே அந்த நாட்களில் சுவாமி, அம்மனை தரிசிக்க முடியாது.

இதையும் படியுங்கள்:
மதுரையில் ஆன்மீகக் கொண்டாட்டம்: மீனாட்சி அம்மன்- கள்ளழகர் கோவில்களில் வசந்த உற்சவம் தொடக்கம்!
மீனாட்சி அம்மன், சுந்தரேசுவர் - மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

கும்பாபிஷேக தினத்தன்று அதாவது 17-ம்தேதி தான் பொதுமக்கள் அம்மன், சுவாமியை தரிசனம் செய்யலாம் என கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Kalki Online
kalkionline.com