

முழுமுதற்கடவுள் என்று பிள்ளையாரைக் கொண்டாடுகிறது இந்து மதம். எந்தக் கோவிலுக்குச் சென்றாலும் நம் வழிபாட்டினைத் துவங்குவது விநாயகரிடம் குட்டு போட்டுக்கொண்ட பிறகு தானே.. எல்லா கோவில்களிலும் பெரும்பாலும் பிள்ளையார் அர்த்த மண்டபத்திலும், மகா மண்டபத்திலும், பிரகாரங்களிலும் தான் காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் சில கோவில்களில் இருந்தாலும் ஓரத்தில் தான் இருப்பார்.
ஆனால் முழுக்க முழுக்க விநாயகருக்காகவே உரித்தான கோவில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ளது அறிவீர்களா...? அபூர்வமான இக்கோவிலை இந்தக் கட்டுரையில் தரிசிக்கலாம் வாருங்கள்.
மணிமுக்தீஸ்வரம் என்ற தலத்தில் உள்ள ‘உச்சிஷ்ட கணபதி’ திருக்கோவிலில் தான் விநாயகர் மூலவராக இருந்து அருள்பாலிக்கிறார்.
‘உச்சிஷ்ட’ என்ற சொல்லுக்கு ‘மீதமான உணவு’ என்று பொருள். முப்பத்து இரண்டு விநாயகர் வடிவங்களில் உச்சிஷ்ட கணபதி முக்கியமானவர். பொதுவாக பிரம்மச்சாரியாகவே காட்சி தரும் விநாயகர், இந்த உச்சிஷ்ட கணபதி கோலத்தில் நீலசரஸ்வதி தேவியைத் தன் மடியில் அமர்த்தி அணைத்துப் பிடித்தபடி காட்சி தருகிறார். இதுவே இவரின் சிறப்பம்சமும் கூட.
கருவறையில் அருள்பாலிக்கும் இந்த உச்சிஷ்ட கணபதி குடும்ப அமைதியை அருள்பவர் என்று நம்பப்படுகிறது. இவரை வேண்டிக்கொண்டு மகாமண்டபத்தின் பிரகாரத்தைச் சுற்ற ஆரம்பித்தால், அங்கே மொத்தம் பதினாறு வடிவங்களில் விநாயகப் பெருமானே தான் வீற்றிருக்கிறார்.
1. குஷி கணபதி – நோய்கள் நீக்க
2. ஹரித்ரா கணபதி – மக்களை ஈர்க்கும் சக்தி அருள
3. சொர்ண கணபதி – தங்கம் வாங்குமளவு செல்வ வளம் அருள
4. விஐய கணபதி – வெற்றிகளைப் பெற்றுத் தந்திட
5. அர்க்க கணபதி – நவக்கிரக தோஷங்களையெல்லாம் விலக்கித் தர
6. குரு கணபதி – குருவருள் கிடைத்திட
7. சந்தான கணபதி – புத்திர பாக்கியம் அருள
8. ஹேரம்ப கணபதி – அலையும் மனத்தினை அமைதிப்படுத்த
9. சக்தி கணபதி – செயல் வெற்றி அருள
10. சங்கடஹர கணபதி – தடங்கல்கள் தடைகளை உடைத்துவிட
11. துர்கா கணபதி – துன்பங்களைக் களைந்திட
12. ருண ஹரண கணபதி – கடன்களை அடைக்கும் சூழல் உருவாக்கிட
13. ஸ்ரீவல்லப கணபதி – பலம் அருளிட
14. சித்தி கணபதி – காரிய சித்தி அருள
15. வீர கணபதி – மனோதைரியம் அருளிட
16. சர்வசக்தி கணபதி – நல்ல ஆரோக்கியம் அருளிட
என மொத்தம் பதினாறு கணபதி திருமேனிகளையும் தரிசித்த பிறகு ‘முழுக்க முழுக்க ஒரு விநாயகர் கோவில் இது’ என்ற உணர்வினை நாம் அடைவது திண்ணம். இந்த 16 விநாயகத் திருமேனிகளும் வேறெங்குமே இல்லாத தனிச்சிறப்பாகும்.
நெல்லையின் நாயகியாம் காந்திமதி அடுத்தபடியாக தனிச்சந்நதியொன்றில் அருளக் காத்திருக்கிறாள். அவளை வணங்கி நகர்ந்தால் யோகக்கலை வளர்த்த பதஞ்சலி முனிவர் காட்சி தருகிறார்.
ஸ்ரீ வியாக்கிர பாத முனிவர்கள் லிங்க வடிவில் அடுத்தபடியாக வீற்றிருக்கிறார்கள். அவர்களைத் தொடர்ந்து சுவர்ண ஆகர்ஷண பைரவரும் நமக்கு அருள்புரிகிறார்.
இக்கோவிலுக்கு வெளிப்பிரகாரத்தில் அழகிய நந்தவனம் பராமரிக்கப்படுகிறது. நாகர் திருமேனிகள் வெளிப்பிரகார முடிவில் உள்ளன. இக்கோவிலின் தல விருட்சம் பனை மரமாகும்.
கோவிலின் அர்த்த மண்டபத்தில் மலர்கள் அர்ச்சனை பொருட்கள் வாங்க கடை ஒன்றும் உள்ளது.
900 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படும் இக்கோவில் சேதப்படுத்தப்பட்ட இருப்பதன் தடயங்களையும் ஆங்காங்கே காண முடிகிறது.
இக்கோவிலுக்கு வழிகாட்டிக்கொண்டு திருநெல்வேலியின் ஜீவ நதியான தாமிரபரணியும் நம்முடனேயே ஓடி வருவது மற்றொரு சிறப்பாகும். நெல்லை ரயில் நிலையத்திலிருந்து வெறும் பத்து நிமிட தொலைவில் தான் இந்த உச்சிஷ்ட கணபதி திருக்கோவில் உள்ளது. கண்டிப்பாகப் போய்வாருங்கள். கணபதியின் அருள் பெற்றிடுங்கள்..