
108 தொண்டை மண்டல சிவாலயங்களில் ஒன்றான மண்ணீஸ்வரர் திருக்கோவிலை இக்கட்டுரையில் தரிசிக்கலாம் வாருங்கள்.
முதலாம் குலோத்துங்கன் 11ஆம் நூற்றாண்டில் இந்த ஆலயத்தை எழுப்பியிருக்கலாம் என்று கருதுகிறார்கள். கிட்டத்தட்ட 900 ஆண்டுகள் பழமையான இந்த சிவாலயத்திற்கு விஜய நகர மன்னர்கள் திருப்பணிகள் செய்திருக்கிறார்கள். இது வரலாற்றுச் செய்தி.
புராணச் செய்தி கூறுவது யாதெனில், காடாக இருந்த இந்த இடத்தில் ஒரு பெரிய வன்னி மரத்தின் வேரினை வேடன் ஒருவன் நோண்டிய போது அதன் அடியில் சிவலிங்கம் ஒன்று வெளிப்பட்டதாம். அதை வெளியில் எடுக்க முயன்ற போது அங்கேயே கோவில் கொள்ள விரும்புவதாக அசரீரி ஒலித்ததாம்.
அதன்படி இங்கே இந்த சிவாலயத்தை பிரம்மபிரான் முன்னிலையில் எழுப்பியிருக்கிறார்கள் தேவர்கள். மண்ணுக்குள்ளே இருந்து சுயம்புவாகக் கிடைத்த லிங்கமாதலால் இவருக்கு மண்ணீஸ்வரர் என்ற நாமம் உண்டாகியிருக்கிறது.
தேவர்களின் தலைவனான இந்திரனுக்கு பிரம்மஹத்தி தோஷம் பிடித்த போது, இந்தக் கோவிலில் வந்து ஒரு மண்டலம் தங்கியிருந்து சிவபூஜை செய்தால் தோஷத்தில் இருந்து விடுபடலாம் என்று பிரம்மதேவர் அறிவுறுத்தியதன் பேரில் இந்திரனும் அவ்வாறே செய்து, பிரம்மஹத்தி தோஷத்தில் இருந்து விடுபட்டிருக்கிறான். அப்பேர்ப்பட்ட சக்தி வாய்ந்தவர் இந்த மண்ணீஸ்வரர்.
இத்தலத்தில் மண்ணே மருந்தாக உள்ளதாக நம்பப்படுகிறது. பதஞ்சலி மகரிஷியின் சீடர் பளிங்கு மகரிஷி இங்கு ஜீவ சமாதி அடைந்து சிவனோடு ஜோதி வடிவமாக ஒன்றிணைந்திருக்கிறார்.
கிழக்கு நோக்கி உள்ள இக்கோவிலுக்கு கோபுரம் இல்லை. நுழைவு வாயிலைக் கடந்து பலிபீடம், கொடிமரம் தாண்டி நந்தியம்பெருமான் காட்சி தருகிறார். அவரே நம்மை ஆச்சரியத்திலும் ஆழ்த்துகிறார். வழக்கமாக சிவாலயங்களில் நந்தியம் பெருமானின் திருவுருவச் சிலை சிவபெருமானை நோக்கிய வண்ணம் தானே இருக்கும். ஆனாலும் இக்கோவிலில் நந்தியம்பெருமாள் சிவனுக்கு எதிர் புறம் பார்த்துக் கொண்டிருக்கிறார். உள்ளே வரும் பக்தர்களை வரவேற்றுக் காக்கும் விதமாக அமைந்திருக்கும் நந்தி தேவரை வேறெந்த சிவாலயத்திலும் தரிசிப்பது அரிது.
அவரை வணங்கி அர்த்த மண்டபத்தில் பிரவேசித்தால் துவார கணபதியும் துவார முருகரும் காட்சி தருகிறார்கள். அவர்களிடம் அனுமதி பெற்று மகா மண்டபத்தில் பிரவேசிக்கலாம். விநாயகரும், வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானும் இருப் புறங்களிலும் நிற்க, கருவறைக்குள் நான்கு அடி உயரத்தில் சுயம்புலிங்கமாக மண்ணீஸ்வரர் அருள் பாலிக்கிறார்.
இந்திரனின் பிரம்மஹத்தி தோஷத்தை விலக்கி அருளிய மண்ணீஸ்வரப் பெருமானை மனமுருக பிரார்த்தனை செய்து கொண்டு, மகா மண்டபத்தில் உள்ள சிவகாமி சமேத ஆடலரசரையும் வணங்கிவிட்டு வெளியில் வந்தால் பிரகாரத்தில் வசந்த மண்டபம் உள்ளது.
நாகத்தை கையில் கொண்டுள்ள தக்ஷிணாமூர்த்தியும் நர்த்தன கணபதியும் கருவறை சுவற்றில் இடப்புறத்தில் காட்சியளிக்கிறார்கள். பிரகாரத்தில் மிகச்சரியாக மண்ணீஸ்வரரின் பின்புறத்தில் (அதாவது வழக்கமாக லிங்கோத்பவர் வீற்றிருக்கும் இடத்தில்) மகாவிஷ்ணுவின் திருவுருவச் சிலை உள்ளது இக்கோவிலின் மற்றொரு சிறப்பு.
பிரம்மதேவரும் விஷ்ணு துர்க்கையும் கருவறை சுவற்றின் வலப்புறத்தில் வீற்றிருக்கிறார்கள். பிரகாரத்தில் மகா கணபதிக்கும் பைரவருக்கும் சந்ததிகள் உள்ளன. தொடர்ந்து நவகிரகங்களும், சூரியர், சந்திரரும் காட்சி தருகிறார்கள்.
பிரகாரத்தை ஒரு வலம் வந்து முடித்தால் தெற்கு நோக்கி அமைந்திருக்கிறாள் மரகதாம்பிகை. கலைவாணியின் ரூபமாக அழகோவியமாக நின்ற கோலத்தில் அம்மை அருள் பாலிக்கிறாள்.
இக்கோவிலின் தலவிருட்சம் வன்னி மரம் ஆகும். கோவிலுக்கு அழகிய குளம் ஒன்றும் சிறிய கோசாலை ஒன்றும் உள்ளது. பிரம்மாண்டமான அரச மரமும் அதன் கீழே நாகர் சிற்பங்களும் உள்ளன. கோவிலின் கருவறையில் இருந்து காஞ்சிபுரத்துக்கு சுரங்கப்பாதை உள்ளதாக கூறப்படுவது இக்கோவிலைப் பற்றிய மற்றொரு சுவாரசிய தகவலாகும்.
பிரம்மஹத்தி தோஷம் நாக தோஷம் போன்ற தீவிரமான தோஷங்கள் நீங்க அப்பனும், கல்வியில் சிறந்து விளங்க அம்மையும் இக்கோவிலில் அருள் செய்கிறார்கள்.
இப்பேர்பட்ட சிறப்பு வாய்ந்த இந்த மரகதாம்பிகை உடனுறை மண்ணீஸ்வரர் திருத்தலம் அமைந்திருப்பது நம் சென்னையில் தான். தாம்பரத்திலிருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவிலும் வண்டலூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து இரண்டே கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ள மண்ணிவாக்கம் முதல் நிலை ஊராட்சியில் தான் இத்திருக்கோவில் அமைந்துள்ளது. பிரம்மோற்சவம் பிரதோஷம் என எல்லா விழாக்களும் சிறப்பாக இக்கோவிலில் நடைபெறுகின்றன. இந்தக் கோவிலின் பின்னால் கோமளவல்லி தாயார் உடனுறை மணிவண்ணப் பெருமாள் கோவிலும் உள்ளது. அவசியம் போய் வாருங்கள். அம்மையப்பரின் அருள் பெறுங்கள்.