தருமமிகு சென்னைக்கு வரும் ஆன்மீக அன்பர்கள், மைலாப்பூர் கபாலீஸ்வரரை வணங்கித்தான் செல்வார்கள். ஆனால், கபாலீஸ்வரரை வணங்குவதற்கு முன்னால், மயிலையைச் சுற்றியுள்ள மற்ற ஆறு கோயில்களுக்கும் சென்று வணங்கிய பிறகே, கபாலீஸ்வரரை இறுதியாக வணங்கவேண்டும் என்பதையும், இதன் மூலம் முக்திப் பேற்றினை அடையலாம் என்பதையும் பல மெய்யன்பர்கள் அறிய வேண்டும் என்பதற்காகவே இந்தக் கட்டுரை!
ஏழாவதாக கபாலீஸ்வரரைக் கை கூப்பி வணங்குவதற்கு முன்னால், நாம் தரிசிக்க வேண்டிய ஆறு கோயில்களில் முதலிடம் வகிப்பது ஶ்ரீகாரணீஸ்வரர் ஆலயம்! கடற்கரைச் சாலையிலிருந்து வரும் காரணீஸ்வரர் கோயில் தெருவும் பஜார் சாலையும் சந்திக்குமிடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பன்னிரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த இது, வசிஷ்ட முனிவர் வழிபட்ட திருத்தலமாகும். அம்பிகை ஶ்ரீசொர்ணாம்பிகை. இங்கு வழிபடுபவர்களின் வாழ்க்கை பொன்னும் பொருளும் நிறைந்து சிறக்கும்.
கை கூப்பி வணங்கிக் கொள்ளுங்கள்.
இரண்டாவதாக நாம் செல்வது, ஶ்ரீதீர்த்தபாலீஸ்வரர் கோயில்! மயிலை - திருவல்லிக்கேணி வழியில் நடேசன் சாலையில் உள்ளது. அத்ரி முனிவரும் அகத்திய முனிவரும் வழிபட்ட திருத்தலம். மாசி மாதத்தில் 7 சிவாலயங்களின் உற்சவர்களும் கடலில் தீர்த்தவாரி காண்பதற்குமுன் இந்தக் கோயிலில் இருந்த 64 தீர்த்தவாரிக் குளங்களில்தான் தீர்த்தவாரி நடைபெறுமாம்.
நன்றாகச் சேவித்துக் கொள்ளுங்கள்!
நாம் இப்பொழுது நிற்பது ஶ்ரீ வெள்ளீஸ்வரர் கோயில் முன்பு. இது கபாலீஸ்வரர் கோயிலுக்கு அருகிலேயே உள்ளது. சிவனுக்கும், காமாட்சிக்கும் உரியது. ஆங்கீரச முனிவர் வழிபட்ட இடம். இத்தல ஈஸ்வரரை வழிபட, கண் நோய்கள் நீங்குமென்பது நம்பிக்கை. 'கண் டாக்டர்' என்றே இவரைப் பக்தர்கள் பாராட்டுகிறார்கள்.
'ம்! பார்த்து வாங்க!' கடை வீதியாச்சே (பஜார் சாலை).
அம்மையை வணங்கிக் கொள்ளுங்கள். இங்குள்ள பலிபீடம் சிறப்புப் பெற்றது. சுந்தர மூர்த்திநாயனாருக்கு நடராஜத் தாண்டவத்தை இறைவன் காட்டிய திருக்கோயில் இது. நமக்கு ஆத்மபலம் அளிக்கும் ஆலயம்!
நம்முன்னே காட்சியளிப்பவர் ஶ்ரீவாலீஸ்வரர்! கோலவிழி அம்மன் ஆலயத்துக்கு அருகில்தான் இவர் குடி கொண்டுள்ளார். இவரையும் ஶ்ரீ பெரியநாயகியையும் கௌதம முனிவர் வழிபட்டுள்ளார். ராமாயண வாலி பல அரிய வரங்களைப் பெற்ற திருத்தலமிது.
இதோ நம் கண்களில் காட்சியளிப்பவர் ஶ்ரீமல்லீஸ்வரர் - அம்பிகை ஶ்ரீ மரகதவல்லி. ஶ்ரீகாரணீஸ்வரர் கோயிலுக்குப் பின் புறம்தான் இவர் வீற்றிருக்கிறார். பிருகு முனிவர் வழிபட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் வழிபடுபவர்களின் குடும்பங்கள் மகிழ்ச்சியில் திளைப்பதுடன், பிள்ளைகளும் புத்திசாலித்தனத்துடன் செயல்படுவார்களாம்!
இப்பொழுது நாம் வந்து விட்டோம் மயிலையின் நாயகன் - நாயகியான, கபாலீஸ்வரர் - கற்பகாம்பிகை கோயிலுக்கு. புன்னை மரத்தடி இறைவனை, அம்பிகை மயில் வடிவத்தில் பூஜித்ததால் மயிலாப்பூர் என்ற பெயராம்! இத்திருக்கோயிலில் காஸ்யப முனிவர் வழி பட்டாராம். திருஞான சம்பந்தரின் தேவாரப் பாடல்களால் புகழ் பெற்ற ஆலயம். மயிலையின் சப்த சிவ ஸ்தலங்களில், இறுதியாக வணங்கப்பட வேண்டிய சிறப்புத் திருத்தலமிது!
மயிலைப் பகுதியே சிவமயமாகத் திகழ்வதாலேயே, 'மயிலையே கயிலை' என்றும், 'கயிலையே மயிலை' என்றும் புகழப்படுகிறது! ஏழு சிவாலயங்களையும் வணங்கி வந்த நமக்கு முக்தி உறுதி!