

இலக்கணம் கற்பிக்கத் தெரிந்த பண்டிதர் ஒருவர் இருந்தார். அவர் தனது மாணாக்கர்களுக்கு இலக்கணத்தைத் தெளிவாகக் கற்பித்தார். முழுவதுமாக தனது பாடத்தை முடித்துக் கொண்ட அவர், மாணவர்களுக்கு ஒரு சோதனை பயிற்சியைத் தந்தார். நான்கு வரிகளில் ஒரு கவிதை இயற்ற வேண்டும் என்பது தான் அவர் கொடுத்த பயிற்சி.
கவிதை எழுதுவதற்குக் கஷ்டப்பட்ட ஒரு மாணாக்கன் ஒரு வழியாக முதல் இரண்டு வரிகளை இப்படி எழுதினான்:
The Full Moon is shining bright
The tree has fruits at a height
அடுத்த இரண்டு வரிகளை எழுத வேண்டுமே, ஒரு வழியாக கஷ்டப்பட்டு இப்படி எழுதி முடித்தான்:
The food is not cooked alright!
Ganganna’s face is a horrid sight!
கொடுத்த பயிற்சி முடிக்கப்பட்டு விட்டதென்னவோ உண்மை! ஆனால் என்ன பரிதாபம், எவ்வளவு மோசம், என்ன ஒரு பயனற்ற கவிதை அது!
ஸ்ரீ சத்ய சாய்பாபாவின் 'பகவான் பாபா' புத்தகத்தை வாங்க கீழே உள்ள Link-கை கிளிக் செய்யவும்!
மனிதனின் வாழ்க்கையில் வருடங்கள் பலவும் இப்படி பயனற்று கழிக்கப்படுகின்றன. அவன் தனக்குத் தரப்பட்ட பயிற்சியை கொடுக்கப்பட்ட காலத்தில் முடிக்கிறான். எல்லோரும் நான்கு வரி கவிதையை முடிக்கிறார்கள். ஆனால் அதில் அர்த்தம் ஏதாவது இருக்கிறதா?
அவர்கள் கவனத்துக்கு உரியவர்கள்தாமா அல்லது பாராட்டுக்குத்தான் உரியவர்களா? இல்லை.
அவர்கள்தான் நினைத்தபடி செல்கிறார்கள், ஒவ்வொரு வாய்ப்பிலும் ஆசை,ஒவ்வொரு வரியிலும் சிந்தனை, தாங்கள் முழுவதுமாக 'வாழ்ந்து விட்டதாக' ஒரு திருப்தி! இப்படி தனக்குத் தானே அகமகிழ்ந்து கொள்வது மிகவும் தவறான ஒன்று.
கணக்கு முடிக்கப்பட்ட நிலையில் வரவு எவ்வளவு செலவு எவ்வளவு என்று பார்க்கப்படும்போது எவ்வளவு லாபம் சம்பாதிக்கப்பட்டது?
நீங்கள் அங்கும் இங்கும் அலைந்து திரிந்தீர்கள், ஆனால் உங்கள் வீட்டை அலட்சியம் செய்து விட்டீர்கள். வானத்தில் உள்ள நட்சத்திரங்களைப் பார்த்தீர்கள், ஆனால் உங்கள் உள்ளே உள்ள ஆகாயத்தை அளக்கவில்லை.
நீங்கள் அடுத்தவர்களின் வாழ்க்கையில் தலையிட்டு அவர்களிடம் குறைகளை கண்டுபிடித்து அவர்களைப் பற்றி இழிவாகப் பேசுகிறீர்கள். ஆனால் நீங்கள் உங்கள் எண்ணங்களையும், செயல்களையும், உணர்ச்சிகளையும் பார்க்காமல் அவை நல்லனவையா அல்லது கெட்டவையா என்பதையும் அலசி ஆராயாமல் அவற்றைப் பற்றி அக்கறை கொள்வதில்லை.
மற்றவர்களிடம் நீங்கள் காணும் தவறுகள் உங்களது நீட்சியே தான். மற்றவர்களிடம் நீங்கள் காணும் நல்லது அனைத்தும் உங்களது நல்ல தன்மையின் பிரதிபலிப்பே தான்.
தியானத்தின் மூலமாக மட்டுமே நீங்கள் நல்ல பார்வையை ஏற்படுத்திக் கொள்ளல், நல்லனவற்றைக் கேட்பதில் ஆர்வம் கொண்டு, நல்ல சிந்தனை, நல்ல செயல்கள் ஆகியவற்றைப் பண்படுத்தி அபிவிருத்தி செய்து கொள்ள முடியும்.
தியானத்தின் மூலம் உலகளாவிய தன்மை மற்றும் எங்கும் பரந்துள்ள இறைவனின் தன்மை பற்றிய கருத்தில் மூழ்க முடியும்.
உங்களது அன்றாட அனுபவங்களில் பெரிய கவலையானது சிறிய கவலைகளை ஒதுக்கி விட்டு அவற்றை மறப்பதில்லையா?
உங்கள் மனதை இறை நினைவால் நிரப்பி அவனுக்காக ஏங்கும் போது, ஏக்கத்துடன் அவனுக்காகவே வாடும் போது எல்லாவிதமான கீழ்த்தரமான ஆசைகளும், ஏமாற்றங்களும் ஏன், சாதனைகளும் கூட ஒன்றுமில்லாமல் போய்விடும். அவை அனைத்தையும் நீங்கள் மறந்து விடுவீர்கள். தெய்வீகத்தைப் பற்றிய ஏக்கத்தில் அவை அனைத்தும் மூழ்கிவிடவே வெகு சீக்கிரத்தில் தெய்வீக ஆனந்தத்தில் மூழ்குவீர்கள்.