

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 'மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி' ஆலயம் (Melmalayanur Angala Parameswari Temple) மிகவும் பிரசித்தி பெற்ற ஆலயமாகும். இது செஞ்சியிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ளது. அம்பாள் கிடந்த கோலத்தில் (மல்லாந்து) காட்சி தருகிறாள்.
புராணத்தின்படி முன்னொரு காலத்தில் பிரம்மதேவனுக்கு ஐந்து தலைகள் இருந்தன. தோற்றத்தில் சிவபெருமானைப் போல காட்சியளித்த பிரம்மன் ஒரு சமயம் கயிலைக்கு சென்றார். வந்திருப்பது சிவபெருமானே என்று நினைத்த பார்வதிதேவி பிரம்மனை வணங்கி அவருக்கு பாத பூஜை செய்தாள். அந்த சமயத்தில் சிவபெருமான் அங்கே வந்திட பார்வதிக்கு தனது தவறு புரிந்தது.
"சுவாமி! இவர் தங்களைப் போல தோற்றமளித்ததால் தான் தவறாக புரிந்து கொண்டு பூஜை செய்தேன். ஆனால் இவர் அதற்கேதும் மறுப்பு தெரிவிக்கவில்லை. தான் பிரம்மதேவன் தான் என்றும் எனக்கு உணர்த்தவில்லை" என்று பார்வதி தேவி சிவனிடம் அழுகுறையாக முறையிட்டாள்.
சினமடைந்த சிவபெருமான் பிரம்மனது ஐந்தாவது தலையை கொய்து எறிந்தார். இதனால் அவரை பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக் கொண்டது. கீழே விழுந்த அந்த ஐந்தாவது தலை சிவனின் கையில் ஒட்டிக் கொண்டது. தனது கணவனுக்குக் கொடுக்கப்பட்ட தண்டனையை அறிந்து சரஸ்வதி தேவி கோபமுற்று "பிரம்மஹத்தி தோஷத்தால் மயானந்தோறும் அலைந்து திரிவீராக" என்று சிவபெருமானை சபித்தாள்.
பிரம்மஹத்தி தோஷத்தால் பீடிக்கப்பட்ட பெருமானின் கையில் விழும் உணவை அவர் கையில் ஒட்டிக் கொண்டிருந்த பிரம்ம கபாலம் புசிக்கத் தொடங்கியது. இதனால் உண்ண ஏதும் கிடைக்காமல் இறைவன் பசி தாகத்துடன் காடு மலையெல்லாம் அலைந்து திரிந்தார்.
அப்போது பார்வதி தேவி பல்வகை உணவுகளை அங்கே சூறையிட்டாள். சிவபெருமான் கையில் உள்ள கபாலம் அந்த உணவை உண்பதற்காக சிவனின் கையை விட்டு கீழே இறங்கியது. சிவன் அங்கேயுள்ள அக்னி தீர்த்தத்தில் நீராடி தன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கப்பெற்றார். கபாலம் உடனே தேவியைப் பற்றிக் கொள்ள தேவி விஸ்வரூபம் எடுத்து அந்த கபாலத்தை காலால் அடித்து நொறுக்கி அதைத் தன் கழுத்தில் மாலையாகப் போட்டு அங்காள பரமேஸ்வரியாகக் காட்சியளித்தாள்.
கபால வதம் முடிந்தவுடன் அன்னை அங்காளியாக மயான பூமியில் ஆவேசமாக நடனமாடினாள். அவள் ஆடிய ஆட்டத்தில் இந்த உலகமே தடம் புரள்வது போலிருந்தது. அவள் போர்க்கோலம் பூண்டு தேரில் ஏறிப் பயணித்தாள். அன்னையை சாந்தப்படுத்த ஸ்ரீ விஷ்ணு, தேரின் அச்சாணியை முறியச் செய்தார். கீழே மல்லாந்து விழுந்த அம்பாள் சினம் தணிந்து நான்கு திருக்கரங்களுடன் சூலம், கத்தி, உடுக்கை, கபாலத்துடன் எழுந்து உட்கார்ந்து அங்கேயே அங்காள பரமேஸ்வரி என்ற திருநாமம் கொண்டு எல்லோருக்கும் தரிசனம் கொடுத்தாள்.
இந்த நிகழ்வு நடந்தது மகா சிவராத்திரிக்கு அடுத்த அமாவாசை தினத்தன்று. இந்த அம்மன் கோவில் கொண்டுள்ள எல்லா இடங்களிலும் மாசி மாத அமாவாசையன்று மயானக் கொள்ளை என்னும் பெயரில் சூறையிடுவது நடைபெறுகிறது. அன்று அம்பாள் பிரம்ம கபாலத்திற்காக சூரையிட்டாள்.
இன்றும் எல்லா துஷ்ட சக்திகள் பேய், பிசாசுகளுக்கு அன்று அம்மன் உணவை சூறையிடுவது நடைபெறுகிறது. அந்த உணவை உண்டு அந்த துஷ்ட சக்திகள் அந்த இடத்தை விட்டு நீங்கி விடுவதாக ஐதீகம். தமிழகமெங்கும் உள்ள எல்லா அங்காள பரமேஸ்வரி ஆலயங்களிலும் மாசி மாத அமாவாசையன்று மயானக் கொள்ளை உற்சவம் சிறப்பாக நடைபெறும்.