'மினி' தொடர்கதை: என் மனம் உன் வசமே - அத்தியாயம் - 2

துன்பத்தில் துவண்ட இளைஞனின் வாழ்க்கை திசைமாறியது எப்படி? ஆன்மிகத் தேடலின் நெகிழ்ச்சியான தொடர்கதை.
'மினி' தொடர்கதை: என் மனம் உன் வசமே
'மினி' தொடர்கதை: என் மனம் உன் வசமேImage Credit: ChatGPT

சரித்ரபாலன் , பாலபித்தன் ஆகிய புனை பெயர்களில் சிறுகதைகள் , கவிதைகள் கட்டுரைகள் எழுதி வருகிறேன். பாலகுமாரன் வாசகராய் வாசிப்பை துவங்கிய எனது முதல் சிறுகதை மாலை முரசில் வெளிவந்தது.

Updated on: 
Deepam strip
Deepam strip

ஒரு குரு கிடைக்கும்வரை குழப்பம் இருக்கும். ஆன்மிக வாழ்வில் குருவை அறிதலே அடிப்படை... அவரே முதல். அவரை அணுகியே கடவுளை அறிய வேண்டும். இது ஒரு வழிமுறைதான், முடிவு அல்ல... ஆனால் இது சாத்தியமாகவும் அவனருள் வேண்டும். அவனருளாலேதானே அவன்தாள் வணங்க முடியும்.

பாத்திரம் அறிந்துதானே பிச்சை இடப்படும். எல்லோருக்கும் இறைபற்றிய ரகசியங்கள் உரைக்கப்படுவதில்லை. எல்லோரும் இறைவனின் அண்மையை அருமையை உணர்ந்துவிட முடியாது. மேலும் இந்த அளப்பரிய சக்தியின் ஆனந்தத்தை உரைக்கவும் பல்வேறு அற்புதங்கள் மூலம் உணர்த்தவும் எவர் தகுதியானவரோ அவருக்கே குரு நிலை அளிக்கப்படுகிறது. அவர் மூலம் அநேகர் தெய்வீகம் காண பாதை அமைகிறது.

வாழ்க்கை மிக அழகாக, மிக மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட விசயம். நம் ஒவ்வொரு வினைகளும் அதன் தன்மைக்கேற்றார்போல் இன்பமானதாகவும், துன்பமானதாகவும் விளைவுகள் தருகிறது. நம்முடைய பிறவிப்பயணம் புரியாமல் நாம் கடவுளை சாடுகிறோம். துன்பத்தை ஏன் கொடுத்தாய் என்று கோபமுறுகிறோம்.

உண்மையில் கடவுள் நாம் இந்த வினைகளில் இருந்து மீண்டு வருவோமா என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார். அவர் இருக்கும் இடத்தையும், சேரும் வழிகளையும் பல்வேறு விதமாய் இந்தப் புவியில் விதைத்துவிட்டு காத்திருக்கிறார். இந்த வாழ்வின் வெற்றியே வினைகளை அறுத்து விட்டு இறைவனை சேர்தல் என்பது புரியாமல் நாம் வெறுமனே விதைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கிறோம்.

கடவுளைச் சேர்வதற்கான வழியில் செல்லாமல், ஏதோ ஒரு பாதையில் இழுத்த இழுப்பில் சென்று துன்பங்கள் சேர்க்கிறோம். துன்பங்களை இறைவன் அளிக்கவில்லை ஆனால், இந்த வாழ்வு இறைவனால் அளிக்கப்பட்ட வாழ்வே என புரிந்து மனதை எப்போதும் அவன் வசம் வைத்திருந்தால் போதும். துன்பங்கள் திசைமாறும். மெல்ல இறைவனால் வாழ்வு திசை திருப்பப்படும்.

நாம் இறை பற்றிய தேடலை, நேசத்தை, லேசாய் வெளிப்படுத்தினாலும் போதும். இறைவன் தன் இருப்பை, துணையை, அருகாமையை உடனே உணரவைக்கிறான். விதியின் பாதையை மாற்றிவிடுகிறான். வினைகளை உடைத்து தூர எறிகிறான். பிறவித்துன்பம் களைந்து விடுகிறான்.

ராகவா இங்கே எது பிரச்னை? ஏன் இவ்வளவு துன்பம்? ஏன் இவ்வளவு குழப்பம்? நாம் இரண்டும் கெட்டான்களாக இருக்கிறோம். எக்கரையிலும் நிற்காமல் தடுமாறுகிறோம். எதிலும் முழுமையாய் இல்லாமல் இருக்கிறோம்.

இங்கே இந்த திருவண்ணாமலையில் இருந்தாரே, சூட்சுமமாய் இன்னும் இருக்கிறாரே யோகி ராம் சுரத்குமார் அவர் என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா. கடவுளின் கையில் உன்னை ஒரு கருவியாய் ஒப்படைத்துவிடு. இங்கே செய்கின்ற யாவையும் கடவுள் காரியமாய் செய். வாழ்வில் துன்பமில்லை. வாழ்வு இலகுவாகும். எல்லாவற்றையும் கடவுளாகிய தந்தை பார்த்துக்கொள்கிறார். மிரட்சி இல்லை. அடுத்து என்ன செய்வது என்கிற திகைப்பு இல்லை. தோல்வி பயம் இல்லை. மனம் முழுதும் கடவுளை நிரப்பிக்கொள் அது போதும்.

இவையெல்லாம் வெறும் வார்த்தைகளாகிவிடாமல் நிஜமாக்கு. உணர்வாக்கு. உணர்வில் இறைத்தன்மை உணர்ந்திட குருவைத்தேடு. குருவால் மாறும். சகலமும் மாறும்.

ராகவா... கவனி... நித்தம் நித்தம் கடவுளைப் பாடு... பேசு... அவர் நாமம் சொல். விடியலில் எழு. உள்ளங்கை பார். யோகப்பயிற்சிகள் தவறாது செய். எது செய்தாலும் கடவுள் நினைப்போடு செய். உனக்கு நடக்க வேண்டியவை தானே நடக்கும்." சொல்லிவிட்டு அந்தத் துறவி வானம் பார்த்தார். மெல்லிய சிரிப்போடு ராகவனின் வலக்கையை கோர்த்தபடியே காதோரம் நெருங்கி சொன்னார்.

இதை தினமும் தவறாது சொல். நேரம் கிடைக்கும் போதெல்லாம் சொல்.

'ஓம் ஶ்ரீராம் ஜெயராம் ஜெய ஜெய ராம்' மூன்று முறை அவர் திரும்ப திரும்ப ராகவன் காதில் சொன்னார்.

ராகவனுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு. அவன் பலமுறை இந்த மந்திர வார்த்தைகளை கேட்டிருக்கிறான். ஆனாலும் இப்போது இவர் வழியாய் இவர் சொல்ல கேட்கும்போது ஒவ்வொரு வார்த்தையும் அமுதாய் உள்ளே புது அதிர்வை உண்டாக்கி கொண்டு இறங்கியது. இதுதான் இறையுணர்வோ... இல்லை இது இறையுணர்வின் துளியோ... என்று தோன்றியது. அதன் பிறகு அவர் எதுவும் பேசவில்லை... "மீண்டும் எப்போதேனும் சந்திபோம் போய்வா" என்று விடை கொடுத்தார்.

அன்று அவரின் பாதம் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு திரும்பிய பின் ராகவன் வாழ்வு மொத்தமும் மாறிப்போனது. ஒரு நல்ல தனியார் கம்பெனியில் வேலை கிடைத்தது. குடும்பத்தைக் காப்பாற்ற தேவையான சம்பளம் கிடைத்தது. சமூக மதிப்பு உயர்ந்தது. நல்லவர் நட்பு கிடைத்தது. யோகமும் தியானமும் அவனைத் தேடி வந்து கற்பித்தார்கள்.

தம்பியைப் படிக்க வைத்து உயர்த்தினான். தங்கைகளுக்குத் திருமணம் செய்வித்தான். நல்ல மனைவி, குழந்தைகள் என்று வாழ்வு மொத்தமும் திசை திரும்பியது. இது எப்படி என்ற அவன் வியந்தான். இது என்னால் அல்ல... இறைவனாலேயே... என்று புரிந்துக்கொண்டு அமைதியானான்.

போராட்டங்கள், சந்தோஷங்கள், வெற்றிகள் என எல்லாவற்றையும் கடந்து ஒரு தேடல் அவனுக்குள் எப்போதும் இருந்தது. வாழ்வு பற்றிய ரகசியங்கள் அறியும் வேட்கை இருந்தது. அவரை அந்த வெண்தாடி சாமியாரை தேடிக்கொண்டு அவன் அலைந்தான். அவன் மனம் மீண்டும் மீண்டும் அவரையே அவரின் வார்த்தைகளையே எண்ணி எண்ணி அசைபோட்டது.

இந்த மாற்றங்களை அவரிடத்தில் பகிர்ந்துகொண்டு நன்றி சொல்ல வேண்டும் என்பதற்காக மட்டுமல்ல, அவரிடம் அடைக்கலம் புகுந்து, நீயே கதியென பணிந்து, மேலும் மேலும் ஆன்மீகம் அறிய அவரே உத்தம குரு என்பதை உணர்ந்தே அவரைத்தேடி ராகவன் ஒவ்வொரு மாதமும் ஏதேனும் ஒருநாளில் திருவண்ணாமலை வீதிகளில் அலைந்தான்.

"முதல் முறை சந்திப்பிலேயே நெடுநேரம் பேசி, உள்ளுணர்வில் இறைத்தன்மை பெருக்கும் மந்திர உபதேசம் அளித்து, தீட்சை அளித்து ஏதும் அறியாமல் இருந்த எனக்கும் இறைத்தேடல் கொடுத்த குருவே, தேவதேவா இப்போது உம்மைக் காணவேண்டும் என்கிற ஆவலில் ஓடி வந்திருக்கிறேன். தரிசனம் தாருங்கள் குருவே." ராகவன் மெல்லிய குரலில் பிதற்றியபடி தேடினான். கோவில், சன்னதி தெருவின் பாத்திரக்கடைகளின் ஓரம், குளத்தருகே, சேஷாத்ரி, ரமணாஸ்ரமங்களில், கிரிவலப்பாதையில் கோயில்களில் என எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

"குருவைத் தேடு, குருவைத் தேடு என்ற என் இனிய குருவே இதோ தேடுகிறேன். எங்கே சென்றீர். என் குரல் உங்களுக்கு கேட்கிறதா? அன்று நான் இருந்த அறியாமையில் உங்களைப் பற்றி எதுவும் கேட்கவில்லை. உங்களின் பெயர் கூட எனக்குத் தெரியாது. உங்களைப் பற்றி அடையாளம் சொன்னால் உங்களை வம்புக்காரர் என்கிறார்கள். கோபப்படுவார் என்று கூறுகிறார்கள்.

ஆனால், எனக்கு நடுநிசியைக் கடந்தும் உபதேசம் அளித்தீர். எனக்காக என் வார்த்தைகளை, வாழ்க்கை கதையைப் பொறுமையாய் கேட்டீர்கள். வழிகாட்டினீர்கள். உண்மையில் நீங்கள் வம்புக்காரர் அல்ல... அன்புக்காரர். குருவே... நீங்கள் சொன்னதின் முழுமையை இப்போது உங்களை தேடும்போதுதான் உணர்கிறேன். உங்களைத்தேட தேட உங்களின் உருவம் என்னில் பதிந்து நிற்கிறது. உங்களின் வார்த்தைகள் என்னில் ரீங்காரமிடுகிறது. பெயர் தெரியாவிட்டாலும் உங்களை குரு என்கிற வார்த்தையில் திரும்ப திரும்ப மனம் அழைத்துக் கொண்டு இருக்கிறது. வேறு எந்த நினைவும் ஆட்கொள்ளாமல் மனம் உங்களையே நினைக்க நினைக்க உள்ளே மாற்றங்கள் புரள்கிறது.

உடல் எந்த உபத்திரவத்திலும் சிக்காமல் இதமாய் இருக்கிறது. நடை மெலிதானது. பேச்சு குறைகிறது. எதிர்படும் உயிர்களின் மேல் நேசம் பரவுகிறது. வாழ்வு பற்றிய பயம் இல்லாது, மிரட்சி இல்லாது, நாளை பற்றிய கவலை இல்லாது, நிகழ்காலத்தில் செய்யும் பணியில் ஆழ்ந்து ஈடுபட முடிகிறது. ஒவ்வொரு நாளும் உங்களின் நினைவோடு, துவங்கி, உங்களின் நினைவோடு நகர்ந்து, உங்களின் நினைவோடு முடிகிறது.

உங்களை மீண்டும் எப்போது சந்திப்பேன் என்று தெரியவில்லை. ஒருவேளை சந்திக்கவே முடியாமல்கூட போகலாம். ஒரு குரு சீடனை தன்னிடம் இருந்து உரிய நேரத்தில் பிரித்தால்தான் சீடனின் உள்முக வளர்ச்சி பலப்படும். குருவின் தன்மையை தன்னுள் பாவித்து பாவித்து அந்த நிலைக்கே செல்ல முடியும்.

நல்லது, குருவே உங்களைச் சந்திக்கும் வரை இன்னும் இன்னும் ஆழ்ந்து இந்தப் பயணத்தில் நான் ஈடுபடுவேன். என்றேனும் ஒருநாள் உங்கள்முன் நான் கனிந்து நிற்பேன். உங்களால் மீண்டும் தொடப்படுவதுற்குரிய அருகதையைப் பெறுவேன். இது உறுதி. ஆன்மிக வாழ்வில் மட்டுமல்ல லோகாயத வாழ்விலும் வெற்றிபெற இந்த அருணை வாழ் சிவனும் நீங்களும் துணையிருப்பீர்களாக."

ராகவன் மீண்டும் அண்ணாமலையாரை வணங்கினான். கோபுர தரிசனம் பார்த்தான். மெல்லிய நடைபோட்டு பேருந்து நிலையம் வந்தான். ஒரு தனியார் பேருந்து அவனுக்காகவே காத்திருப்பதுபோல் வந்து நின்றது.

'மினி' தொடர்கதை: என் மனம் உன் வசமே
'மினி' தொடர்கதை: என் மனம் உன் வசமேImage Credit: ChatGPT

அடுத்த மாதமும் விடுமுறை நாளில் வரவேண்டும். அடுத்த முறை மலைமேல் சென்று அங்குள்ள துறவியர் கூட்டத்தை தரிசித்தவாறு குருவையும் தேட வேண்டும். நினைத்தபடியே ராகவன் பேருந்தில் ஏறி அமர்ந்தான்.

அவன் அமர்ந்த சில நிமிடங்களில் பேருந்து புறப்படதொடங்கியது. பேருந்தில் எல்லோரையும் திசை திருப்பும் வண்ணம் பாடல் ஒலித்தது. 'என் மனம் உன் வசமே... கண்ணில் என்றும் உன் சொப்பனமே... விழிகாணும் காட்சியாவும் உன் வண்ணக்கோலமே' பாடல் தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது. ராகவனின் மனம் மட்டும் குருவசமே நிலைத்திருந்தது.

(நிறைவு)