
முசு – குரங்கு
ஒரு முறை கயிலாய மலையில் சிவபெருமானும் உமையம்மையும் உரையாடிக் கொண்டிருந்தனர். அங்கிருந்த வில்வ மரங்களில் குரங்குகள் கூட்டமாகத் தங்கியிருந்தன. அந்தக் கூட்டத்தில் இருந்த வயது முதிர்ந்த குரங்கு ஒன்று, வில்வ மரத்தின் இலைகளைப் பிய்த்து கீழே அமர்ந்திருந்த சிவபெருமான் பார்வதி தேவி மீது போட்டுக் கொண்டே இருந்தது. உமையம்மைக்கு இது சற்றே கோபத்தைத் தந்தாலும், ஈசன் தேவியை அமைதிப்படுத்தினார்.
“அறியாமல் செய்தாலும் நம்மை அர்ச்சிக்கும் முசுவிடம் கோபப்படலாமா,” என்று சிவபெருமான் சொன்னதும், பார்வதிக்கும் அந்த வயோதிகக் குரங்கின் மேல் இரக்கம் வந்தது.
சிவபெருமான் அந்தக் குரங்கின் அஞ்ஞானத்தை நீக்கினார். மெய்ஞானம் பெற்ற குரங்கு, மரத்திலிருந்து இறங்கி வந்து தன் தவறுக்கு வருந்தி, இருவரையும் வணங்கியது.
“வருந்தாதே, நீ சிறந்த வில்வங்களால் எங்களை அர்ச்சித்தாய். ஆகவே மனு வம்சத்தில் பிறந்து சிறந்த அரசனாக உலகையே ஆள்வாயாக,” என அருளினார்.
“பூலோகத்தில் பிறந்தால் உங்களையே நினைத்திருக்கும் என் மனம், செல்வத்தின்பால் சென்று வழி மாறிவிடும். அதிலிருந்து எப்படி மீள்வது?” என்று குரங்கு வினவியது.
“கவலைப்படாதே, மானிடப்பிறவி எடுத்தாலும் இதே முகத்துடன் இருப்பாய். சிறப்பாக அரசாண்டு தக்க சமயத்தில் என்னை வந்து சேர்வாய்" என்று சிவன் அருளினார்.
இதுதான் முசுகுந்த சக்ரவர்த்தியின் பிறப்பிற்கான ரகசியம். குரங்கு முகத்துடன் பூமியில் பிறந்த இவருக்கு, முசுகுந்தன் என்று பெயரிட்டு வளர்த்தார்கள். பின்னாளில் இவர் மிகச்சிறந்த அரசனாக உலகையே ஆண்டார்.
சரி, இவரிடம் ஏழு விடங்க மூர்த்திகள் எப்படி வந்தன? அதையும் பார்க்கலாம்.
ஒரு சமயம் வலாசுரன் என்ற அசுரன் தேவர்களின் தலைவனான இந்திரனுடன் போர் புரிந்தான். பூவுலகில் சிறப்பாக ஆட்சி புரிந்து நற்பெயருடன் விளங்கிய முசுகுந்த சக்ரவர்த்தியிடம் போரில் தனக்கு உதவும்படி இந்திரன் அழைப்பு விடுக்க, முசுகுந்த சக்ரவர்த்தியும் போரிட்டு அசுரனைத் தோற்கடித்தார்.
இந்திரன் மிகவும் மகிழ்ந்து, “யுத்தத்தில் எனக்கு உதவியாக இருந்து வெற்றியைத் தேடித் தந்த உங்களுக்கு பரிசளிக்க விரும்புகிறேன். என்ன வேண்டுமோ கேளுங்கள்,” என்றான் தேவேந்திரன்.
“நீங்கள் தினமும் பூஜிக்கும் விடங்க மூர்த்தியைத் தந்து அருள் புரியுங்கள்” என்றார் முசுகுந்தன்.
விடங்கம் - உளியால் செதுக்கப்படாதது.
இந்திரன் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை. தான் தினமும் பூஜிக்கும் மூர்த்தியைத் தரவும் விரும்பவில்லை. “மகாவிஷ்ணு எனக்கு வழங்கிய லிங்கம் அது. அதனால் அவரின் அனுமதி பெற்று உங்களுக்குத் தருகிறேன்” என்று தற்காலிகமாக சமாளித்தான்.
ஸ்ரீமன் நாராயணனிடம் அனுமதி கேட்க, அவரும் சம்மதித்து விட்டார். ஆனால், இந்திரனுக்கு அதைத் தர மனமில்லை. தேவசிற்பியை அழைத்து தன்னிடம் உள்ளது போலவே ஆறு மூர்த்திகளை வடிக்கச் சொன்னான். சிற்பியும் ஒரே மாதிரி வடித்துக் கொடுக்க, அந்த ஆறு மரகத லிங்கங்களையும் முசுகுந்த சக்ரவர்த்தியிடம் கொடுத்தான் இந்திரன்.
“அரசரே, நீங்கள் ஒன்றுதானே கேட்டீர்கள். நான் ஆறாகத் தருகிறேன், வாங்கிக் கொள்ளுங்கள்” என்றான்.
ஆனால் தான் கேட்ட லிங்கம் அதில் இல்லை என்பதைக் கண்டறிந்த முசுகுந்த சக்ரவர்த்தி, “கொடுப்பதாக இருந்தால் வீதி விடங்கரைக் கொடுங்கள். இல்லையேல் நான் புறப்படுகிறேன்” என்றார். வேறு வழியின்றி அரசன் கேட்ட விடங்கரோடு சேர்த்து மீதி ஆறு லிங்கங்களையும் கொடுத்தனுப்பினான் இந்திரன்.
இந்திரன் வைத்து பூஜித்த மூல லிங்கத்தை திருவாரூரில் பிரதிஷ்டை செய்தார் அரசன். மற்ற ஆறு லிங்கங்களை திருநள்ளாறு, திருமறைக்காடு, திருவாய்மூர், திருக்காறாயில், திருக்குவளை, நாகபட்டினம் ஆகிய திருத்தலங்களில் பிரதிஷ்டை செய்தார் முசுகுந்த சக்ரவர்த்தி.
இந்த ஏழு கோவில்களே 'சப்த விடங்க ஸ்தலங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. ஏழு விடங்க மூர்த்திகளின் பெயர்களும், நடனங்களின் பெயர்களையும் தெரிந்து கொள்ளலாம்.
திருவாரூரில் வீதி விடங்கர். இவர் ஆடும் நடனம் 'அஜபா நடனம்' என்று அழைக்கப்படுகிறது. மூச்சின் இயக்கத்தை உணர்த்துவது போல் இறைவன் ஆடும் நடனம் அஜபா நடனம் என்று அழைக்கப்படுகிறது.
திருநள்ளாறு நாகவிடங்கர் ஆடும் நடனம் 'உன்மத்த நடனம்' என்று அழைக்கப்படுகிறது. பக்தியில் பித்தர் ஆடுவது போன்ற நடனம்.
நாகப்பட்டினம் சுந்தர விடங்கர் ஆடுவது கடல் அலைகள் போன்ற 'தரங்க நடனம்' என்று அழைக்கப்படுகிறது.
திருக்காறாயில் ஆதி விடங்கர் ஆடுவது கோழியைப் போல் ஆடும் 'குக்குட நடனம்' என்று அழைக்கப்படுகிறது.
திருக்குவளை அவனி விடங்கர் ஆடுவது வண்டுகள் மலருக்குள் குடைவது போல் ஆடும் 'பிருங்க நடனம்' என்று அழைக்கப்படுகிறது.
திருவாய்மூர் நீல விடங்கர் ஆடுவது தாமரை மலர் அசைவது போன்ற 'கமல நடனம்' என்று அழைக்கப்படுகிறது.
திருமறைக்காடு புவன விடங்கர் ஆடுவது அன்னப் பறவை நடப்பது போல் ஆடும் 'அம்சபாத நடனம்' என்று அழைக்கப்படுகிறது.