

வஜ்ரநபா கட்டியதாகக் கூறப்படும், 2200 ஆண்டுகள் பழமையான துவாரகை கோவில், கடலில் இருந்து கிருஷ்ணர் மீட்ட நிலத்தில் எழுந்ததாக ஐதீகம். ஆதிசங்கரர் நிறுவிய சாரதா பீடம், கிருஷ்ணன் 36 ஆண்டுகள் ஆட்சி செய்த துவாரகை நகரம் கடலில் மூழ்கிய வரலாறு, கடலுக்கடியில் கண்டெடுக்கப்பட்ட சுவர்கள், தூண்கள், சங்குகள், நாணயங்கள், மண்பாண்டங்கள் ஆகிய தொல்பொருள் சான்றுகள் இதன் பெருமையை வெளிப்படுத்துகின்றன.
குஜராத் மாநிலத்தில் கோமதி நதிக்கரையில் அமைந்துள்ள துவாரகேஷ் கோவில் புகழ்பெற்ற கிருஷ்ணன் கோவில் ஆகும்.
குஜராத் மாநிலத்தின் தேவ பூமி துவாரகா மாவட்டம் கோமதி நதியும் அரபிக் கடலும் இணையும் பகுதி இந்த கோவில் ஜகத் மந்திர் எனவும் அழைக்கப்படுகிறது. இந்துக்களின் புனிதமான சார் தாம் மற்றும் சப்த பூரி தலங்களில் ஒன்றாக உள்ளது.
இக்கோவில் ஐந்து தளங்கள் 72 வேலைபாட்டுடன் கூடிய தூண்கள் கொண்டது. சுமார் 160 அடி உயரத்தில் கம்பீரமாக கட்டப்பட்டுள்ளது.
பக்தர்களின் வருகைக்காக சொர்க்கவாசல் மோட்ஷ வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளது. காலை 7 மணி முதல் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் 9 மணி வரையும் நடைதிறந்து இருக்கும்.
ஆரம்பகாலத்தில் துவாரகைதான் குஜராத்தில் தலைநகரமாக விளங்கி வந்தது. இங்கு ஆதிசங்கரர் நிறுவிய சாரதா பீடமும் உள்ளது. பகவான் கிருஷ்ணர் ஆட்சி செய்து வந்த நகரமாகும். ஐயாயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமையானது. தனது மாமனான கம்சனை வதம் செய்த பிறகு துவாரகை மன்னனாக முடிசூடிய கண்ணன் துவாரகையில் வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.
கிருஷ்ணர் துவாரகையில் இருந்து வெளியேறியதும் அந்த நகரமே கடலில் மூழ்கியது. இது முக்தி தரும் ஏழு தலங்களில் ஒன்றாக உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது. 2200 ஆண்டுகள் பழமையான கோவிலாகும். இந்த கோவில் வஜ்ரனபா என்பவரால் கட்டப்பட்டது. கடலில் இருந்து கிருஷ்ணரால் மீட்கப்பட்ட நிலத்தில்தான் கோவில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது.
இந்த கோவிலின் வடக்கு வாசலை மோட்ச வாசல் என அழைக்கின்றனர். இந்த வாசல் வழியாக சென்றால் மூலஸ்தானத்தை அடையலாம். இந்த கோவிலின் தெற்கு வாசல் சொர்க்கவாசல் என அழைக்கப்படுகிறது. இதன் வழியாக சென்றால் கோமதி நதியை அடையலாம். சுண்ணாம்புக்கல் மற்றும் மணல் கற்களால் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. ஐந்து அடுக்குகளைக் கொண்டது.
மழைக்காலத்தில் 16 நாட்கள் துவாரகை நகரம் மட்டும் வெப்பம் நிறைந்ததாக காணப்படும். துவாரகா கோவில் கருவறையில் அமைந்துள்ள மூலவர் விக்ரகம் சாலகிராமத்தால் ஆனது. பார்ப்பதற்கு கருங்கல்லால் ஆன விக்கிரகம் போல காட்சி அளிக்கும். கோவில் உச்சியில் ஆரஞ்சு மஞ்சள் நீளம் என பல வண்ணங்களில் உள்ள கொடி எப்போதும் பறந்து கொண்டு இருக்கும். இங்கு சூரியன் சந்திரன் வசிப்பதாக ஐதீகம்.
இங்குள்ள கொடி ஒரு நாளைக்கு ஐந்து முறை மாற்றப்படுகிறது. கிருஷ்ணர் கையில் உள்ள சுதர்சன சக்கரம் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இது போரில் பல அசுரர்களை வென்ற
ஆயுதமாக கருதப்படுகிறது. இந்த சக்கரம் பல நூற்றாண்டுகளுக்கு மேல் பாதுகாக்கப்பட்டு வந்தது. 36 ஆண்டுகள் கிருஷ்ணன் துவாரகையை ஆட்சி புரிந்துவந்தார். துவாரகையில் கிருஷ்ணன் ருக்மணியை திருமணம் செய்து கொண்டார். ருக்மணி கிருஷ்ணனின் எட்டு மனைவிகளில் ஒருவர் ஆவார்.
கிருஷ்ணர் இந்த உலகத்தை விட்டு சென்ற பிறகு துவாரகை கடலில் மூழ்கியது. இன்றும் இந்த கோவிலில் நகரத்தில் உள்ள எச்சங்கள் கடலுக்கு அடியில் காணப்படுகிறது. 1963 ஆராய்ச்சிகளின் படி துவாரகையின் பல கட்டடங்கள் கடலுக்கு அடியில் இருந்தது என கூறப்படுகிறது. 1983 முதல் 1990 வரை
உள்ள ஆராய்ச்சிகளின்படி துவாரகையில் பழங்கால பொருட்கள் சுவர்கள் அஸ்திவாரங்கள் தூண்கள் பாசன கால்வாய்கள் கண்டறியப்பட்டன.
1960 இல் நடைபெற்ற ஆராய்ச்சியில் விஷ்ணு ஆலயத்தில் எச்சங்கள் காணப்பட்டது. இதன்படி துவாரகை ஒன்றுக்கும் மேற்பட்ட முறையில் அழிந்து இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். இங்கு அதிக அளவில் சங்குகள் எடுக்கப்பட்டது அக்காலத்தில் யாதவர்கள் சிவனை வழிபட துவாரகையிலிருந்து சென்றதாக கூறப்படுகிறது.
மகாபாரதம் நிகழ்ந்தது கிமு 1500 காலகட்டம். இங்கு கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் அந்த காலகட்டத்தை சார்ந்தவை. சங்குகள் நாணயங்கள் மண்பாண்ட பொருட்கள் அணிகலன்கள் என ஏராளமாக கண்டெடுக்கப்பட்டது.