
தக்ஷிண மார்க்கமும் வாம மார்க்கமும்:
ஶ்ரீ பிரம்மாண்ட புராணத்தில் உத்தர காண்டத்தில் ஶ்ரீ ஹயக்ரீவருக்கும் அகஸ்தியருக்கும் நடந்த ஸம்வாத ரூபமாய் அமைந்திருப்பதே லலிதா ஸஹஸ்ர நாமம்.
லலிதாம்பிகையின் ஆயிரம் நாமங்களை ஓதுவதால் ஏற்படும் நற்பலன்கள் அனைத்தையும் முழுதுமாகக் கூற யாராலும் முடியாது.
அம்பிக்கையைத் துதிப்பது பலவிதமாக இருப்பதாக ஆன்றோர்களால் கூறப்படுகிறது. அவற்றுள் முக்கியமானவை இரண்டு – ஒன்று தக்ஷிண மார்க்கம். இரண்டாவது வாம மார்க்கம். இதை ஸமய மார்க்கம் என்றும் கௌல மார்க்கம் என்றும் கூறுவர்.
வாம மார்க்கம் அல்லது கௌல மார்க்கம் என்பதைக் கடைப்பிடிப்பது என்பது கத்தி முனையில் நடப்பது போலவும், புலியின் கழுத்தைக் கட்டிக் கொள்வது போலவும் ஒரு பாம்பை கழுத்திலே அணிந்து கொண்டிருப்பது போலவும் உள்ள மார்க்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஆனால் தக்ஷிண மார்க்கம் அல்லது ஸமய மார்க்கம் என்பது எல்லோராலும் எளிதில் கடைப்பிடிக்கக் கூடியது. மெய்யான உள்ளன்புடன், பக்தியுடன் அம்பிகையை மனதாரத் துதிக்க வேண்டும். அவ்வளவு தான்!
ஶ்ரீ வித்யா ரகசியம்:
இப்படி அம்பிகையைத் துதிக்கும் சாஸ்திரத்திற்கு ஶ்ரீ வித்யா என்று பெயர். மிக மிக உயர்ந்தவற்றிற்கு முன்னால் தான் ஶ்ரீ என்பது சேர்த்துச் சொல்லப்படும். ஆக ஶ்ரீ வித்யா மிக உயர்ந்த ஒன்று என்று ஆகிறது.
புருஷ வடிவில் உள்ள தேவதைகளை அடைவதற்கு உரிய சாதனம் மந்திரம் எனப்படும். ஸ்தீரி வடிவில் உள்ள தேவதைகளை அடைவதற்கு உரிய சாதனம் வித்யை என்று சொல்லப்படும்.
சிவசக்தி ரூபமாக உள்ள அம்பிகை இந்த ஶ்ரீ வித்யா மூலமாக உபாஸிக்கப்படுவதால் வித்யையோடு கூட, இதை மந்திரமென்றும் மந்திரங்களுக்குள் எல்லாம் மிக உயரந்த மந்திரம் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.
இப்படிப்பட்ட ரகசியத்தை ரிஷிகள் கூறியுள்ளனர். குருமுகமாக இதைத் தெரிந்து கொள்ளலாம். சுருக்கமாகச் சொல்லப் போனால் அனைத்து நலன்களையும் தரக் கூடியது இதுவே என்று அறுதியிட்டு உறுதி கூறலாம்.
லலிதா சஹஸ்ர நாமம், அம்பிகையின் ஆயிரம் திரு நாமங்கள் மந்திர சாஸ்திர முறைப்படியும் இன்னும் பல்வேறு விதமான ரகசியங்களை உள்ளடக்கியும் தொகுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆயிரம் நாமங்களை உச்சரிப்பது எளிதானது; எவராலும் முடியக் கூடியது. இதற்கு அந்தஸ்தோ, பணமோ, அதிகாரமோ தேவையில்லை.
நாம பாராயணத்தில் பிரியமடைபவள்:
அம்பிகையின் அருளைப் பெற சிறந்த சுலபமான வழி இந்த லலிதா சஹஸ்ர நாம பாராயணம் தான். ஆயிரம் நாமத்தில் 732வது நாமமாக அமைவது நாமபாராயண ப்ரீதா என்பதாகும்.
தன்னுடைய நாமங்களைப் பாராயணம் செய்வதால் பிரியமடைபவள் என்பது இதன் பொருள். இதிலுள்ள அக்ஷரங்களின் மஹிமையை விரிவாக மந்திர சாஸ்திரங்கள் விளக்குகின்றன. அவற்றைத் தெரிந்து கொண்டால் பிரமிப்பு ஏற்படும்.
இக பர சௌபாக்யம் தரும் துதி:
இந்த சஹஸ்ரநாம பாராயணம் சகல விதமான வியாதிகளையும் நீக்கி விடும் (சர்வ ரோக ப்ரசமனம்). சகல சம்பத்துகளையும் அருளும் (ஸர்வ ஸம்பத் ப்ரவர்தனம்). சகல விதமான அகால மரணங்களையும் தடுத்து நீக்கி விடும் (ஸர்வாபமிருத்யு சமனம்) கால கிரமத்தில் ஏற்படக் கூடிய மரணத்தையும் போக்கி விடும் (காலம்ருத்யு நிவாரணம்).
இன்னும் பலன்களின் பட்டியல் நீளுகிறது. முழுவதையும் ஸஹஸ்ர நாமத்தின் உத்தர பாகத்தில் பல ச்ருதியில் காணலாம்.
இந்த ஸஹஸ்ர நாம பாராயணத்தால் நமக்கு மட்டும் நன்மை ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கும் நன்மை உண்டு. எப்படி? அதையும் பல ச்ருதி கூறுகிறது.
எவன் ஒருவன் தன்னுடைய ஜன்மத்தில் இந்த ஸஹஸ்ர நாமத்தை ஒரு தடவை கீர்த்தனம் செய்கிறானோ, அவனுடைய கண்ணுக்குத் தென்படும் சகல பிராணிகளும் தங்களுடைய சமஸ்த பாவங்களிலிருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
நம்மால் அனைவருக்கும் இப்படி ஒரு நன்மை உண்டு!
கோடிக்கணக்கான ஸஹஸ்ர நாமங்களில் உயர்ந்தது:
அகத்தியரிடம் தேவியின் ஸஹஸ்ர நாமங்கள் கோடிக் கணக்கில் உள்ளன என்று கூறப்படுகிறது. பிரமிக்கிறோம்.
அவற்றில் பத்து ஸஹஸ்ர நாமங்கள் மிக முக்கியமானவை.
கங்கா பவானீ காயத்ரீ காளீ லக்ஷ்மீ ஸரஸ்வதி |
ராஜராஜேஸ்வரி பாலா ச்யாமளா லலிதா தச ||
இந்த பத்து சஹஸ்ர நாமங்களுள் மிக உயர்ந்தது லலிதா ஸஹஸ்ர நாம பாராயணம்.
அம்பிகையைத் துதிப்போம்; அதிக வரம் பெறுவோம்!