

தேசம்மா கோவில் குறித்து ஊரில் பேசப்படும் புராணக் கதைகளில், கார்வேட்டி நகர ராஜா இங்கு வேட்டைக்கு வந்து திடீரென பார்வை இழந்ததும், தேசம்மா தேவி அருளால் புனித நீரை கண்களில் தெளித்து பார்வை பெற்றதும் குறிப்பிடப்படுகிறது. கண் பிரச்னை உள்ள பக்தர்கள் 21 நாட்கள் தங்கி குளத்தில் நீராடி வழிபட்டால் நோய்கள் குணமாகும் என நம்பி, ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர்.
செழிப்பான மரங்களைக் கொண்ட மலைத்தொடர்களின் பின்னணியில் அமைந்துள்ளது தேசம்மா கோவில். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்திலுள்ள நகரியில் இருக்கிறது இந்த தேசம்மா கோவில். கண் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 'பார்வையை அருளும் தெய்வம்' என்று தேசம்மா தேவி நன்கு அறியப்படுகிறார்.
ஸ்ரீ தேசம்மா கோயில், சித்தூர் மாவட்டத்தில் உள்ள நகரி நகருக்கு அருகில், திருமலை ராஜா கண்ட்ரிகாவில் 5 ஏக்கர் 37 சென்ட் நிலப்பரப்பில் அமைந்துள்ளது. இக்கோயில் 1980-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.
முதன் முதலில் இந்தப்பகுதி முழுவதும் காடாகத்தான் இருந்தது. அப்போது ஒருநாள் ஒரு முதிய பெண்மணி விறகு சேகரிக்க இந்த காட்டுக்கு வந்தார். அப்பொழுது தவறிப்போய் ஒரு முட்புதருக்குள் விழுந்து விடுகிறார். அங்கேயிருக்கும் முள் குத்தி பார்வை போய் விடுகிறது.
அவர் அழுகைக குரலைக்கேட்க அங்கே யாரும் இல்லை. யாரும் உதவிக்கு வரமுடியாத சூழலில் இருந்தவர் வலியில் துடித்தார். அப்போது திடீரென்று அங்கு வந்த ஒரு சிறுமி, காயங்களுக்கு மருந்து இட்டதோடு, அந்த மூதாட்டியை அவரது வீட்டிற்கு பத்திரமாக அழைத்துச் சென்றாள். அது மட்டுமல்ல. அவருக்கு பார்வை திரும்ப கிடைக்கவும் ஒரு வழியை காண்பித்தாள் அந்த சிறுமி.
''அம்மா! நீங்கள் தவறி விழுந்த இடத்தில் தோண்டினால் ஒரு அம்மன் சிலை கிடைக்கும். அதை வெளியே எடுத்து பிரதிஷ்டை செய்யுங்கள். அதற்கு அருகில் தோண்டினால் தீர்த்தம் பெருகும். அதை கண்ணில் தெளித்துக் கொண்டு அம்மனிடம் வேண்டுங்கள். பார்வை வந்துவிடும்'' என்று சொல்லி அந்த இடத்திலிருந்து மறைந்துவிட்டாள்.
அவரோ சிறுமி சொல்வதை நம்புவதா, வேண்டாமா என குழப்பத்துடன் தூங்கச் சென்றார். அன்றிரவு தூக்கத்தில் கனவு ஒன்று வந்தது. அதில், “சிறுமியாக வந்தது நான்தான்” என்றாள் பார்வதி தேவி.
மேலும் தேவி கூறியதாவது, “ஒருமுறை சிவனின் சாபத்தால் பூமியில் பெண்ணாக அவதரித்தேன். தவம் செய்வதற்கு ஏற்ற இடத்தை கண்டுபிடிக்க தேசமெல்லாம் அலைந்தேன். இறுதியில் இங்கு வந்து தவமிருந்தேன். எனது சிலை கண்டெடுத்த இடத்திற்கு அருகில் தோன்றும் தீர்த்தத்தால், சிலைக்கு அபிஷேகம் செய்து வாருங்கள். அந்த தீர்த்தம் கண் நோய்களை குணமாக்கும்' என்றாள். அதன்படி செய்த மூதாட்டிக்கு பார்வை கிடைத்தது. அந்த அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்து அன்று முதல் அம்மனுக்கு, 'தேசம்மா' எனப் பெயர் சூட்டி வழிபட ஆரம்பித்தனர்.
ஊரில் வாய்மொழியாக பேசப்படும் மற்றொரு புராணக் கதையின்படி கார்வேட்டி நகரத்தின் ராஜா இந்தப் பகுதிக்கு வேட்டையாட வந்தார், அவர் கோயில் இடத்தை நெருங்கியபோது, அவர் பார்வையை இழந்தார்.
பின்னர் தேசம்மா தேவி அவரது கண்களில் புனித அபிஷேக நீரைத் தெளிக்கச் சொன்னார். ராஜா அதன்படி செய்து பார்வையைப் பெற்றார். பக்தியின் அடையாளமாக, அவர் அவளுக்காக இந்த கோயிலைக் கட்டினார் என்றும் சொல்லப்படுகிறது.
இந்த திருத்தலம் 5 ஏக்கரில் பிரம்மாண்டமாக, அன்னையின் அருள்நெஞ்சம் போலவே இருக்கிறது. தேசம்மா என்ற அம்மனின் பெயருக்கேற்ப தேசமெங்கிலிருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பார்வை குறைபாடு உள்ளவர்கள் 21 நாட்கள் இங்கே தங்கி குளத்தில் நீராடி வழிபடுகின்றனர்.
குளத்தின் புனித நீரை பக்தர்களின் கண்களில் தெளித்தால், அவர்களின் அனைத்து கண் நோய்களும் குணமாகும் என்று நம்பப்படுகிறது. அம்மனுக்குகந்த ஆடி செவ்வாய், ஆடி வெள்ளி, ஆடிப்பூரம் போன்ற எல்லா நாட்களிலும் இங்கே விசேஷ வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.
கண் பார்வை பிரச்னைகள் உள்ள எல்லோரும் அவசியம் சென்று வழிபட வேண்டிய கோவில் தேசம்மா கோவில்.
இந்தத் தலத்தின் புராண மகிமைகள் மற்றும் தீர்த்தத்தின் வழிபாட்டு முறைகளை விரிவாக அறிந்துகொள்வதன் மூலம், கண் ஆரோக்கியம் காக்கும் ஆன்மீக நம்பிக்கையையும், நேரில் சென்று தரிசிப்பதற்கான தெளிவான வழிகாட்டுதலையும் நீங்கள் முழுமையாகப் பெற முடியும்.