மூன்றாம் நாள் - மன நிம்மதி அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி!
இன்று நவராத்திரி வைபவத்தின் மூன்றாம் நாள். துர்க்கை அவதாரத்தின் பூரணத்துவம் கொண்ட நாள் இது என்றே சொல்லலாம்.
அசுரத் தோன்றல்களான சண்ட- முண்டன், சும்பன் – நிசும்பன், ரத்தபீஜன் ஆகிய அசுரர்களை மாய்த்த அம்பிகை இறுதியாக மஹிஷாசுரனையும் வதைத்த புராணத்தை இன்று பார்க்கலாம்.
இந்த அரக்கர்களை வதைக்க வேண்டும் என்று தேவர்களும், முனிவர்களும், மக்களும் இறைவனிடம் வேண்டினார்கள். ஆனால் சிவனோ, மஹாவிஷ்ணுவோ, பிரம்மனோ ஏதோ ஒரு கட்டத்தில் அவர்களுக்கு வரமளித்திருந்ததால், அவர்களைத் தாமே அழித்தல் நேரமையாகாது என்பதால், புதிதாக ஒரு சக்தியை உருவாக்கி அந்தப் பணியை நிறைவேற்ற முனைந்தார்கள். வடிவம் கொடுப்பது மட்டுமல்லாமல், தம்மிடம் இருந்த அனைத்து ஆயுதங்களையும் அளித்து அரக்கத்தனத்தை அழிக்க அந்த சக்தியை அனுப்பி வைத்தார்கள். துர்க்கையும் பேரழகியாக உருக் கொண்டு பூலோகம் வந்தாள். அவளைப் பார்த்த சண்டன் - முண்டன் என்ற இரு அசுரர்கள், அவளுடைய அழகில் மயங்கி, பிறகு ராஜ விசுவாசம் காரணமாக இவள் தங்களுடைய மன்னர்களான சும்பன் - நிசும்பனுக்கே உரியவள் என்று கருதினார்கள்.
அந்தக் கருத்தை அவளிடம் அவர்கள் வெளியிட்டபோது, தன்னைப் போரில் வெல்பவரைத்தான் தான் மணப்பது என்று சபதம் எடுத்திருப்பதாகவும், ஆகவே அந்த மன்னர்களைப் போருக்கு வரச் சொல்லுமாறும் கட்டளையிட்டாள் துர்க்கை. அதுகேட்டு அவளை எதிர்த்த சண்டன் – முண்டன் இருவரையும் வீழ்த்தினாள்.
இதை அறிந்த சும்பன் – நிசும்பன் இருவரும் அவளை எதிர்க்க வந்து, அவளுடைய பேரழகில் மயங்கி இருவரும் அவள் தனக்குத்தான் என்ற சுயநலத்தில் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு மாய்ந்தார்கள்.
ரம்பன் என்ற அசுரன் வக்கிர புத்தி உடையவனாக இருந்தான். மகிஷினி என்ற பெயர் கொண்ட பெண் எருமை மீது காதல் கொண்டான். தானும் ஓர் ஆண் எருமையாக உருமாறி அவளைக் கலந்தான். ஆனால் அந்த விலங்கு நிலையிலேயே இன்னொரு ஆண் எருமை தாக்க அவன் இறக்க நேரிட்டது. ரம்பன் மரித்தது கண்டு மனம் வெதும்பிய மகிஷினி, தான் கர்ப்பிணியாக இருந்தபோதிலும், தாளாத வருத்தத்தால் உடனே நெருப்பில் பாய்ந்து தன்னை மாய்த்துக் கொண்டாள். அப்போது அவளுக்கு எருமைத் தலையும், மனித உடலும் கொண்ட ஒரு பிள்ளை பிறந்தான். தாயின் இறப்பிற்குப் பிறகு, அந்தப் பிள்ளை மகிஷாசுரனாக, உலகமே அஞ்சி நடுங்கும்படி அட்டகாசம் புரிந்தான். தன்னுடைய சக்தியை மேலும் அதிகரித்துக் கொள்ள பிரம்மனை நோக்கி பதினாயிரம் ஆண்டுகள், வெறும் காற்றை மட்டும் புசித்து, ஒற்றைக் காலில் நின்றபடி, கடுந்தவம் புரிந்தான்.
இவனுடைய தவாக்கினி உலகையே தகிப்பது கண்டு திகைத்த பிரம்மன் அவனுக்கு முன் பிரத்யட்சமானார். அவரிடம், தனக்கு எந்த ஆணாலும் மரணம் சம்பவிக்கக் கூடாது என்ற வரத்தைக் கோரினான் அவன். பெண் என்றால் பலவீனமானவள், அடங்கிப் போகிறவள், எதிர்க்கத் துணியாதவள் என்றே துச்சமாக எண்ணியிருந்தான்.
ஆக, மகிஷனைத் தீர்க்க ஒரு பெண்ணைதான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று மும்மூர்த்திகளும் தீர்மானித்தார்கள். அதன்படி அவர்கள் தத்தமது பராக்கிரமங்களை ஒன்றிணைத்து பராசக்தியாக உருக்கொடுத்தார்கள்.
பராசக்தி சிம்ம வாகனத்தில் புறப்பட்டாள். அவளைப் பார்த்ததுமே அவள் அழகில் மயங்கி அவளை மணக்க விரும்பினான் மகிஷன். ஆனால், தன்னை போரில் யார் வெல்கிறார்களோ அவரையே தான் மணப்பது என்ற சபதம் கொண்டிருப்பதாக அம்பிகை சொன்னபோது உடனே அவளுடனான போருக்கு ஆயத்தமானான் மகிஷன். இருவரும் உக்கிரமாகப் போரிட, இறுதியில், தன் சூலாயுதத்தால் மகிஷனின் தலையைக் கொய்து அவனை மாய்த்தாள் மகேஸ்வரி.
இவ்வாறு அம்பிகைத் தன் பராக்கிரமத்தை நிரூபித்த இந்த நன்னாளில் அம்பிகையை மஹிசாசுரமர்த்தினியாக வழிபடுவது வழக்கம்.
இன்று, செண்பக மொட்டு மற்றும் குங்குமத்தால் அர்ச்சனை செய்வார்கள். கோதுமையால் செய்த இனிப்பு மற்றும் காராமணி சுண்டலை அம்பிகைக்கு நிவேதித்து, வருவோருக்கெல்லாம் விநியோகித்து நிம்மதியான வாழ்வைப் பெறலாம்.
கூடவே இந்த ஸ்லோகத்தையும் சொல்லலாம்:
த்ரிநேத்ரம் ஹாஸ்யசம்யுக்தாம் ஸர்வாலங்கார பூஷிதாம்
விஜயாம் த்வாமஹம் வந்தே துர்க்காம் துர்க்கதி நாஸினீம்
பொதுப் பொருள்:
மூன்று கண்களோடு துலங்கும் துர்க்கை அன்னையே, நமஸ்காரம். புன்முறுவல் பூத்த திருமுகம் கொண்டவளே, சர்வ அலங்காரபூஷிதையாக எழில்கோலம் காட்டுபவளே, எதிலும் வெற்றி அருளும் விஜயாம்பிகையே, நமஸ்காரம். நின்னைச் சரணடைந்தவர்களின் துர்வினைகள் அனைத்தையும் நாசம் செய்யும் துர்க்காம்பிகையே நமஸ்காரம்.

