நான்காம் நாள் - செல்வம் பெருக்குவாள் செல்வாம்பிகை!

Navarathiri
Navarathiri
Published on
இதையும் படியுங்கள்:
மூன்றாம் நாள் - மன நிம்மதி அருள்வாள் மகிஷாசுரமர்த்தினி!
Navarathiri

இந்த நவராத்திரி வைபவத்தில் முதல் மூன்று நாட்கள் மஹாலக்ஷ்மியைக் கொண்டாடுகிறோம்.

செல்வம் என்பது நிலையில்லாதது. இன்று ஒருவருக்குச் சொந்தமான செல்வம், நாளை இன்னொருவருக்குடையதாக மாறிவிடுகிறது. இந்த நிலையற்ற தன்மையைக் குறிப்பது போலதான் மஹாலக்ஷ்மி தாமரை மலர் மீது நின்றிருக்கிறாள். மிக மென்மையான, நீரோட்டத்தின் வேகத்தில் அல்லாடக்கூடிய மலர் மீது அமர்ந்தும் கொள்ளாமல் நின்றிருக்கிறாள் லக்ஷ்மி என்றால், அது செல்வம் ஸ்திரமனதல்ல என்பதை நிரூபிக்கத்தானே!

ஆனால் யாருக்கு தயாள குணம் இருக்கிறதோ அவரிடம் சேரத்தான் செல்வமாகிய லக்ஷ்மி விரும்புகிறாள். அப்போதுதானே அவரிடமிருந்து, இல்லாதவர்களுக்கும் அது பகிர்ந்தளிக்கப்படும்! 

இந்த உண்மையை ஆதிசங்கரர் ஒரு சம்பவத்தால் நிலைநாட்டினார்.

துறவறம் பூண்ட அவர், அந்த நியதிப்படி ஒவ்வொரு வீடாகச் சென்று ‘பவதி பிக்ஷாந்தேஹி‘ என்று சொல்லி பிட்சைப் பொருட்களை யாசித்துப் பெற்று அதையே அன்றைய உணவாகக் கொள்வார். அப்படி ஒரு வீட்டின் முன் நின்று அவ்வாறு அவர் கோரியபோது உள்ளிருந்து வெகு நேரத்திற்கு எந்த பதிலும் வரவில்ல.  பொதுவாகவே, இவ்வாறு யாரேனும் சந்நியாசி வருகிறார் என்றால் பல வீடுகளில் அவருக்கு பிட்சை அளிக்க, உணவுப் பொருட்களைத் தயாராக எடுத்து வைத்திருப்பார்கள். அது அந்த யோகியை வெகு நேரம் காக்க வைக்கக் கூடாது என்ற விருந்தோம்பல் குணம் காரணமாகத்தான். 

ஆனால் குறிப்பிட்ட இந்த வீட்டிலிருந்து சற்று நேரத்துக்கு யாரும் வரவில்லை. பொதுவாக, சிறிது கால இடைவெளி விட்டு மூன்று முறை யாசித்த பிறகு, அடுத்த வீட்டை நோக்கிச் சென்று விடுவார் சந்நியாசி. வீட்டில் தானமளிக்க பொருள் எதுவும் இல்லாவிட்டாலோ அல்லது அவ்வாறு தானமளிக்க மனம் விரும்பாவிட்டாலோ எதற்காக அவர்களை வீணாக தர்ம சங்கடப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே சந்நியாசி அங்கிருந்து புறப்பட்டுப் போய்விடுவார். 

அதேபோல சங்கரரும் புறப்பட யத்தனித்தபோது வாசல் கதவு மெல்லத் திறந்தது. மிகுந்த தயக்கத்துடன் எட்டிப் பார்த்தாள் ஒரு பெண்மணி. அவளுடைய தோற்றமும், முறையாகப் பராமரிக்கப்படாத வீட்டின் தோற்றமும் அந்தக் குடும்பத்தின் ஏழ்மையைப் பறைசாற்றின. சங்கரர் அந்த அம்மையாரை நிமிர்ந்து பார்த்தார். இரு கரங்களுக்குள் மூடி வைத்திருந்த ஒரு பொருளை அவரிடம் நீட்டினாள் அந்தப் பெண். அவளுடைய கண்கள் கலங்கியிருந்தன. நெஞ்சிலிருந்து விம்மல் வெடித்தது.

இதையும் படியுங்கள்:
இரண்டாம் நாள் - இழந்ததை மீட்டுத் தருவாள் ராஜராஜேஸ்வரி!
Navarathiri

‘‘ஏனம்மா துயரம்?’’ சங்கரர் மென்மையாகக் கேட்டார். 

பால் வடியும் அந்த பாலக சந்நியாசியின் அன்பில் அப்படியே நெகிழ்ந்து போனாள் அந்தப் பெண்மணி. ‘‘கண்மணி, என்னை மன்னித்துவிடு. உனக்குக் கொடுக்க என்னிடம் எதுவுமில்லை. இதோ இந்த நெல்லிக் கனிதான் என் வீட்டின் மிச்சமுள்ள கடைசி உணவு. இது உண்ணத் தகுந்ததா என்பதும் எனக்குத் தெரியவில்லை. ஆனால் பிட்சை கோரும் உன்னை எதுவும் கொடுக்காமல் திருப்பி அனுப்பிவிட மனசு கேட்கவில்லை. அதனால்தான் இதைக் கொண்டு வந்தேன். இது உன் பசியை ஆற்றுமா என்பதும் சந்தேகமே. ஆனாலும் எனக்கு வேறு வழி தெரியவில்லை, என்னை மன்னித்துவிடப்பா…‘‘ என்று மனம் உருக, கண்ணீர் பெருக சொன்னாள்.

மெல்ல நகைத்தார் சங்கரர். ‘அம்மா, பிட்சையாக இடப்படும் பொருளைவிட, இருப்பதையும் இழப்பதற்குத் தயாராக உள்ள உங்கள் மனப்பாங்குதான் என் பசியை ஆற்றும். தனக்கே இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இல்லாதாருக்கு வழங்க வேண்டும் என்ற உங்களுடைய ஈகை உள்ளத்தால் நான் ஈர்க்கப்பட்டேன். சர்வமாதாவான ஜகதாம்பிகையை நான் பிரார்த்தித்துக் கொள்கிறேன். அவளருளால் நீங்கள் செல்வம் நிறைந்து வாழ்வீர்கள்,‘ என்று அன்புடன் சொல்லி, கனகதாரா ஸ்தோத்திரம் பாடினார். 

அவ்வளவுதான் அந்த வீடு முழுவதும் தங்கத்தால் ஆன நெல்லிக்கனிகளால் நிரம்பியது. அந்தப் பெண்மணியின் வறுமைத் துன்பம் நீங்கியது. உஞ்சவிருத்தி செய்து தன் குடும்பத்தின் வயிறு வளர்க்கும் கணவர் வீட்டுக்குத் திரும்பியபோது நடந்த சம்பவத்தை அவள் விவரித்தாள். அவரும் பெரிதும் மகிழ்ந்தார். அன்றிலிருந்து சங்கரர் வேண்டுதலால், இறையருளால் தங்களுக்குக் கிடைத்த பொக்கிஷத்தை அண்டை அயலார், உற்றம், சுற்றம், ஊரார், உலகோர் அனைவருக்கும் பகிர்ந்து அளித்தார்கள். அவர்களுடைய இந்த உயர் பண்பால் வறியோர் இல்லாது போயினர்.  செல்வம் சேர்வதன் உண்மையான தத்துவத்தை உலகோருக்கு உணர்த்தும் உன்னத தம்பதியாக அவர்கள் திகழ்ந்தார்கள். 

இதையும் படியுங்கள்:
முதல் நாள் - மங்களம் அருள்வாள் மஹேஸ்வரி!
Navarathiri

இந்த நன்னாளில், செந்தாமரை, ரோஜா மற்றும் ஜாதிப் பூக்களால் மஹாலக்ஷ்மியை அர்ச்சித்து வணங்கலாம். கனகதாரா ஸ்தோத்திரம் மற்றும் பிற லக்ஷ்மி துதிகளால் வழிபடுவதும் நல்லது. அவல் கேசரி, கற்கண்டு பொங்கல், உளுந்துவடை, பட்டாணி சுண்டல் ஆகியவற்றை நிவேதனமாகப் படைக்கலாம்.

இன்றைய வழிபாட்டால் நிறைந்த செல்வம் பெறுவதோடு, உலக நன்மைக்காக அவற்றை இல்லாதோர்க்கும் வழங்கி நற்பேறு அடையலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com