இரண்டாம் நாள் - இழந்ததை மீட்டுத் தருவாள் ராஜராஜேஸ்வரி!

Navarathiri Second day
Navarathiri
Published on
இதையும் படியுங்கள்:
முதல் நாள் - மங்களம் அருள்வாள் மஹேஸ்வரி!
Navarathiri Second day

ராஜராஜேஸ்வரி என்ற பராசக்தியைக் கொண்டாடும் இரண்டாம் நாள் இன்று.

இந்த ராஜராஜேஸ்வரியால் அருள்பெற்ற இருவருடைய கதையைப் பார்க்கலாம்.

ஒருவன் சுரதன் என்ற மன்னன். எவ்வளவோ நேர்த்தியாக, தர்மம் தழைத்தோங்க ஆட்சி புரிந்தாலும், தான் பெரிதும் நம்பியிருந்த அமைச்சர்கள் மற்றும் உறவினர்களே தனக்கு எதிராகத் திரும்பியது கண்டு பெரிதும் அதிர்ச்சியுற்றான். தனியொருவனாக அவர்கள் அனைவரையும் எதிர்த்து வாழ முடியாது என்ற உண்மையைப் புரிந்து கொண்ட அவன், அவர்களிடமிருந்து தப்பித்தால் போதும் என்ற விரக்தியில் காட்டுக்குள் சென்று ஒளிந்தான். 

இப்படியும் உலகமா என்று தன் பரிதாப நிலையை பெரிதும் நொந்து கொண்ட சுரதன் காட்டில் அலைந்து திரிந்தபோது, தன்னெதிரே சோகம் கப்பிய முகத்துடன் ஒருவன் வருவதைப் பார்த்தான். அவனுக்கும் தன்னைப் போலவே ஏதோ மனக்குழப்பம் என்பதைப் புரிந்துகொண்ட சுரதன் அவனிடம் விசாரித்தான். 

எதிரே வந்தவன் ஒரு வணிகன். மிகப் பெரிய அளவில் வர்த்தகம் செய்து வந்தவன். நாணயம், வாக்குத் தவறாமை, நேர்மை ஆகிய நற்பண்புகளால் பெரிதும் கீர்த்தி பெற்றிருந்தவன். ஆனால் என்ன துரதிருஷ்டம்! சொந்த மனைவி, பிள்ளைகள், உறவினராலேயே இவன் வஞ்சிக்கப்பட்டான். யாருக்காக நாளெல்லாம் உழைத்தானோ அவர்களே அவனுடைய சொத்துகளைப் பறித்துக் கொண்டு அவனை ஊரை விட்டே துரத்தி விட்டார்கள். மிகுந்த வேதனையுடன் அவனும் இந்தக் காட்டுப் பகுதிக்கு வந்திருக்கிறான். 

அரசனும் வணிகனும் துரோகமிழைக்கப்பட்ட தத்தமது வாழ்க்கை அனுபவத்தை பரஸ்பரம் பரிமாறிக் கொண்டார்கள். சரி, ஒருவருக்கு அடுத்தவர் ஆறுதல் என்ற சூழல் அமைந்தாலும், இருவருக்குமே விடியல் என்பது கானல் நீர்தானோ என்ற ஏக்கமும் எழுந்தது. 

அவர்களுடைய அதிர்ஷ்டம், அந்தக் காட்டுப் பகுதியில் சுமேதஸ் என்ற முனிவரை அவர்கள் சந்தித்தார்கள். அவர்களுடைய இழிநிலையைக் கேட்டு மிகவும் பரிதாபப்பட்ட முனிவர், அவர்களிடம் அம்பிகையை சரணடைந்து வணங்குமாறு அறிவுறுத்தினார். அன்னையின் அருளால் துயரெல்லாம் நீங்கும் என்றும் விளக்கினார். 

ஆனால் அவர்கள் இருவருக்குமே அம்பிகையைப் பற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை. அவர்களுக்கு அம்பிகையின் மகிமையை முனிவர் தெளிவாக விளக்கினார். அன்னை பல அரக்கர்களைக் கொன்று உலகுக்குப் பேரருள் செய்த புராணங்களை விவரித்தார். அரசனும், வணிகரும் நவராத்திரி நாட்களில் அம்பிகையின் வரலாற்றை கேட்டும், படித்தும், சண்டி ஹோமம் செய்தும் வழிபட்டால் அவர்கள் இழந்தனவற்றை மீண்டும் பெற்று நலமடைவார்கள் என்று அறிவுறுத்தினார்.

இதையும் படியுங்கள்:
நலம்தரும் நவராத்திரி!
Navarathiri Second day

அதேபோல அவர்கள் முழு மனதுடன், முழு நம்பிக்கையுடன் யாகம் செய்தார்கள். ஹோமம் முடிவடையும் தறுவாயில் ஹோமகுண்டத்திலிருந்து அம்பிகை சங்கரியாக வெளிப்பட்டாள். அவர்களுடைய முன்வினைப் பயனால்தான் இப்படி ஒரு துன்பத்தை அவர்கள் ஏற்க வேண்டியிருந்தது என்றும், அந்த காலத்திலும் அவர்கள் மனம் தளராமல், நல்லன நடந்தே தீரும் என்ற நம்பிக்கையுடன் வாழ்ந்து வந்ததால், தாங்கள் இழந்தவற்றை அவர்களால் அடைய முடியும் என்று ஆசிர்வதித்தாள். இச்சமயத்தில் அம்பிகை அவர்களுக்குச் சொன்ன முக்கியமான விஷயம்.. அந்த கஷ்ட காலத்திலும் அவர்கள் தங்கள் விதியைத்தான் நொந்துகொண்டிருந்தார்களே தவிர, தங்களுக்கு துரோகமிழைத்தவர்களைப் பழி வாங்க வேண்டும் என்று அவர்கள் நினைக்காததும், செயல்படாததும்தான். இந்த நற்குணத்தாலேயே அவர்களுடைய பழைய நலன்களை அவர்களால் மீட்க முடியும் என்று வாழ்த்தி அருளினாள்.  

அம்பிகையின் அருள் வாக்குப்படியே நடந்தது. துரோகிகள் பலர் இருந்தாலும், ஏற்கெனவே மன்னனின் நல்ல குணத்தினால் கவரப்பட்ட விசுவாசிகள் சிலர் இருக்கத்தான் செய்தார்கள். அவர்கள் ஒரு கட்டத்தில் அவருடைய விரோதிகளை எதிர்த்துக் கொண்டு, மன்னனையே மீண்டும் தலைவனாக்கி மகிழ்ந்தார்கள். அவர்மீது சூது கொண்டவர்கள் நாட்டை விட்டே ஓடிப்போனார்கள். அதேபோல, வணிகரின் சொந்த பந்தங்களெல்லாம், அவருக்கு ஈடாகத் தம்மால் வணிகம் செய்ய இயலாத பலவீனத்தில் பல துர்பலன்களை அனுபவித்தார்கள். ஒரு கட்டத்தில் அவர்கள் தம் தவறை உணர்ந்து, அவரிடம் மன்னிப்பு கேட்டு அவரிடமிருந்து பறித்த சொத்துகளை அவரிடமே திரும்பக் கொடுத்து அவருடைய வர்த்தகம் மேலும் செழித்தோங்குமாறு செய்தார்கள். 

இதையும் படியுங்கள்:
நவராத்திரி கொலு டிப்ஸ்!
Navarathiri Second day

அந்த ராஜராஜேஸ்வரி அன்னையை இன்று முல்லை, துளசி, சாமந்தி மலர்களால் பூஜித்தால் நாமும் நம் வாழ்வில் நலம் பெறலாம். இன்று துர்க்கை அஷ்டோத்திரம் சொல்லலாம். துர்காஷ்டகம் படிக்கலாம்.

கூடவே நிவேதனமாக புளியோதரையும், பால் பாயாசம், மொச்சை சுண்டல் தயாரித்து படைத்து அம்பிகையின் அருளை நிச்சயமாகப் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com