முதல் நாள் - மங்களம் அருள்வாள் மஹேஸ்வரி!

Navarathiri
Navarathiri
Published on
இதையும் படியுங்கள்:
நலம்தரும் நவராத்திரி!
Navarathiri

ஒரு விழா, பண்டிகை என்றால் அலங்காரம் இல்லாமலா? நவராத்திரி என்பது மாலை வேளைகளில் அனுசரிக்கப்படும் தெய்வீகக் கொண்டாட்டம். அந்த தினங்களில் நாம் விதவிதமான பொம்மைகளைப் படிகளில் அழகாக கொலு வைத்து அந்த அறையையே அலங்கரித்து, ஊதுவத்தி, தசாங்கம் போன்றவற்றை ஏற்றி வைத்து தெய்வீக மணம் கமழ்வதாக உருவாக்கிக் கொள்ள வேண்டும். சம்பிரதாயப்படி ஒன்பது படிகள் வைப்பது வழக்கம். இட வசதி குறைபாட்டாலோ, அத்தனை படிகளிலும் வைக்கக் கூடிய எண்ணிக்கைக்கு பொம்மைகள் இல்லாவிட்டாலோ, அவரவர் சௌகரியப்படி 7, 5 அல்லது 3 படிகள் கூட அமைத்து விழாவைக் கொண்டாடலாம். 

நவராத்திரி பெண்களுக்கான விழா என்றுதான் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. அம்பிகையை நம்மால் நேரில் தரிசிக்க இயலாது என்பதால், இந்த நவராத்திரி கொலுவைப் பார்க்க வரும் பெண்களை அம்பிகையாக பாவித்து அவர்களுக்கு சுண்டல் போன்ற பிரசாதங்களை வழங்குகிறோம். வயது வித்தியாசம் பார்க்காமல், ஏற்றத் தாழ்வு பார்க்காமல் அனைவரையும் சமமாக நடத்தும் சமுதாய நல்லிணக்கம் இது என்று நாம் பெருமையாகச் சொல்லிக் கொள்ளலாம். நவராத்திரி என்பதால் பொதுவாகவே ஒன்பது நாட்களும் மாலை 6 மணிமுதல் இரவு 8 மணிவரை விழாவை மேற்கொள்வது நம் சம்பிரதாயம்.

முதல் நாளன்று மஹேஸ்வரி என்றும் வணங்கப்படும் பராசக்தியின் பராக்கிரமத்தைப் பார்க்கலாம்.

ஆதிபராசக்தியான துர்க்கையைப் பொதுவாக பார்வதியோடு ஐக்கியப்படுத்திச் சொல்லலாம். அவள் ஹிமவானின் புத்திரி என்பதால் அவளை மலைமகள் என்றே நாம் போற்றுகிறோம். 

தீயவர்களை மாய்த்து நல்லவர்களுக்கும், அப்பாவிகளுக்கும் நற்கதி அருளியவள் மகேஸ்வரி என்ற பராசக்தி. அசுரர்களை அழித்து, எளியோரையும், அப்பாவி நல்லோரையும் காக்கும் அற்புத தெய்வம் பராசக்தி.

நவராத்திரி முதல் நாள் அம்பிகைக்கு வெண்பெங்கல் நைவேத்தியம் செய்து கொலுவை பார்க்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு கொடுப்பது வழக்கம். இந்நாளில் அம்பிகையை வணங்கினால் எதிரிகள் விலகுவர், கடன் தொல்லைகள் நீங்கும். ஆயுளும், செல்வமும் விருத்தி அடையும். 

இதையும் படியுங்கள்:
நவராத்திரி கொலு டிப்ஸ்!
Navarathiri

நவராத்திரி நாட்களில் அரிசிமாவில் புள்ளி கோலமிட வேண்டும். இன்ன கோலம்தான் என்று இறுதியான சட்ட திட்டமோ, சம்பிரதாயமோ இல்லை. அவரவர் வீடுகளில் மூதாதையர் எவ்வாறு கோலமிட்டு வழிபட்டார்களோ அதே வழிமுறையை இப்போதைய சந்ததியினரும் பின்பற்றலாம். 

மஹேஸ்வரி அம்மனுக்கு ஏற்ற மல்லிகை, சிவப்பு அரளி, வில்வம் மலர் சூட்டியும், அர்ச்சித்தும் வழிபடுவது வழக்கம். துர்க்கை துதி, ஸ்லோகங்கள், பாடல்கள் எல்லாம் பாடி அம்பிகையை மகிழ்விப்பதும் பாரம்பரிய வழக்கமே. முதல்நாளில் அம்பிகையை இரண்டு வயது குழந்தையாக பாவித்து பூஜிப்பதும் சம்பிரதாயம்.  நம் குடும்பத்திலோ அல்லது அக்கம்பக்கத்திலோ அல்லது உறவிலோ அந்த வயதுப் பெண்குழந்தை இருக்குமானால் அழைத்து வந்து முடிந்த அலங்காரங்கள் செய்து, நிவேதனப் பிரசாதங்களை அளிக்கலாம். 

கொண்டைக் கடலை (வெள்ளை அல்லது கறுப்பு) சுண்டல் மற்றும் வெண்பொங்கல் தயாரித்து அம்பிகைக்கும், பிற அனைத்து பொம்மைகளுக்கும் நிவேதனம் செய்து அனைவருக்கும் வழங்குவது பல வீடுகளில் பழக்கம். கூடவே பழங்கள், வெற்றிலை-பாக்கு வைத்தும் நிவேதனம் செய்யலாம். 

மஹேஸ்வரியாக வந்து அம்பிகை மது, கைடபர் ஆகிய இரு அரக்கர்களையும் அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நவராத்திரியின் இந்த முதல் நாள் அமைகிறது. அதாவது அவர்களை அம்பிகை நேரடியாகத் தாக்கி அழிக்கவில்லை என்றாலும், அவ்வாறு அவர்களை வதம் செய்வதற்கு மஹாவிஷ்ணுவிற்கு தன் பூரண சக்தியையும் நல்கியவள் சாமுண்டிதான். மஹாவிஷ்ணுவிற்கே ஏற்பட்ட மாயையைப் போக்கியவள் இவள் என்கிறது புராணம். தன்னிடமிருந்தே உருவான இந்தத் தீயவர்களைத் தானே அழிக்க வேண்டும் என்று தீர்மானம் செய்து கொண்டார் மஹாவிஷ்ணு. அவர்களுடைய சாபப்படி அவர்களைத் தம் மடியில் கிடத்திக் கொன்றார். இதனாலேயே அவர் மதுசூதனன் என்றும் போற்றப்பட்டார். இவ்வாறு மஹாவிஷ்ணுவுக்கே மாயையை விலக்கி அரக்கர்களை அழிக்க உதவியதால் பராசக்தி   ‘மதுகைடபஹந்த்ரி‘ என்று போற்றப்படுகிறாள். 

இதையும் படியுங்கள்:
வெற்றிக்கு வித்திடும் நவராத்திரி!
Navarathiri

இன்றைய தினம் ‘அம்பா, சாம்பவி, சந்திரமவுலிரமலா, அபர்ணா, உமா பார்வதீ, காளீ, ஹேமவதீ, சிவா த்ரிநயனீ, காத்யாயினீ, பைரவீ, சாவித்ரீ, நயௌவனா, சுபகரீ, ஸாம்ராஜ்ய லக்ஷ்மீப்ரதா, சித்ரூபி, பரதேவதா, பகவதீ ஸ்ரீராஜராஜேஸ்வரீ‘ – என்று அம்பிகையின் நாமங்களை ஸ்துதி செய்யலாம்.

இந்த வழிபாட்டால், வறுமை நீங்கும், ஆயுள் நீடிக்கும் என்பது அனுபவ பூர்வமான நம்பிக்கை.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com