

நவராத்திரி என்றாலே மிகவும் விசேஷமான ஒன்பது இரவுகள் என்றே சொல்லலாம் . நவராத்திரி வரலாறு, ஒன்பது நாட்களும் அம்பாளின் ஒவ்வொரு சிறப்பை பற்றி கூறுகின்றன.
மகேஸ்வரி, கௌமாரி, வராஹி, மகாலட்சுமி, வைஷ்ணவி, இந்திராணி, சரஸ்வதி, நரசிம்ஹி, சாமுண்டி என பலவகையான ரூபங்களை நம்முடைய தேவி எடுத்தாலும் அடிப்படை ஆதார சக்தி ஒன்றேதான். இந்த தெய்வங்கள் அனைத்தையும் நம் வீட்டிற்கு வரவழைத்து வணங்கி வழிபடும் பண்டிகையாகத்தான் இந்த நவராத்திரி கருதப்படுகிறது. இந்த நவராத்திரி பண்டிகையின் பின்னால் ஒரு புராணக்கதை இருக்கிறது. அதைப் பற்றி இப் பதிவில் பார்க்கலாம்.
நவராத்திரியின் பின்னணியிலிருக்கும் கதைதான் என்ன?
பல நூற்றாண்டுகளுக்கு முன்னால் சும்பன், நிசும்பன் என இரண்டு அசுரர்கள் இருந்ததாக புராணங்கள் கூறுகின்றன.
இந்த அரக்கர்கள் தெய்வங்களிடம் எந்த ஆணாலும் அரசனாலும் தங்களை அழிக்க முடியாத அளவிற்கு சக்தி வேண்டும் என்று வேண்டி அந்த வரத்தையும் பெற்றார்கள்.
தங்களை அழிக்க யாரும் இல்லை என்கிற ஆணவத்தில் அந்த அரக்கர்கள் கொடூரமாக மற்றவர்களை துன்புறுத்தினார்கள்.
இந்த அசுரர்களின் கொடுமைகளால் மக்கள் பல விதமான துன்பங்களை அடைந்தார்கள். முனிவர்களாலும் வேள்விகளை செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு அரக்கர்களையும் கண்டு அஞ்சி நடுங்கினார்கள்.
இப்படியே தொடர்ந்தால் பூமி தாங்காது, ஆகவே, மக்களை காப்பாற்ற வேண்டியது நம்முடைய கடமை என எண்ணிய தேவர்கள், மஹா விஷ்ணுவிடமும், சிவனிடமும் முறையிட்டார்கள். அவர்கள் பிரம்மனையும் சேர்த்துக் கொண்டு, என்ன செய்வது என ஆலோசித்தார்கள்.
ஆண்கள் யாராலும் அந்த இரு அசுரர்களையும் வெல்ல முடியாது என்பது வரம். ஆகவே, தேவர்களும் மூவர்களும் அன்னை ஆதி சக்தியை நோக்கிப் பிரார்த்தனை செய்தார்கள்.
மக்களின் துன்பம் கண்டு மனமுருகிய அன்னை ஆதிபராசக்தி அழகான மங்கையின் வடிவம் கொண்டு பூமிக்கு வந்தாள். அவளுடைய அழகுக்கு யாரும் நிகர் இல்லை என விளங்கினாள். பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும் தங்களுடைய சக்திகள் எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து அன்னைக்கு கொடுத்துவிட்டார்கள்.
இதனால் சிவன், பிரம்மா, விஷ்ணு மற்றும் தேவர்கள், என அனைவரும் சிலையாக மாறினார்கள். அதேபோல இந்திரனும் திக் பாலர்களும் தங்களுடைய ஆயுதங்களை எல்லாம் அளித்துவிட்டு சிலையாக நின்றார்கள். அன்னையும் அந்த ஆயுதங்களை எல்லாம் பத்துக் கரங்களில் தாங்கிக்கொண்டு போர்க்கோலம் பூண்டு அரக்கர்களையும் மற்றும் அவர்களுக்கு படைத் தளபதிகளாக இருந்த மது, கைடபன், ரக்தபீஜன் போன்றவர்களையும் அழித்து தர்மத்தை நிலைநாட்டினாள்.
இந்த தர்ம யுத்தத்தின்போது தேவர்களும் மற்றும் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரும் மற்றும் மற்ற அனைவரும் சிலையாக நின்ற காரணத்தினால்தான் அதைக் குறிக்கும் வகையில் பொம்மைக் கொலு வைக்கும் பழக்கமானது ஏற்பட்டது.
இந்த தர்மயுததமானது தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெற்றது. அதன்படிதான் இந்த நவராத்திரியானது தொடர்ந்து ஒன்பது நாட்களுக்கு கொண்டாடப்படுகிறது.
புராண காலத்தில் போர் நடந்தால் காலையில் தொடங்கி மாலை நேரம் வரை மட்டுமே நடைபெறும். அந்தி சாய்ந்த பிறகு, கூடாரங்கள் அமைத்து. போரின் களைப்பு தெரியாமல் இருக்க ஆடல், பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த போரிலும் அதைப் போலவே ஒன்பது இரவுகள் நடந்தன. அதனால்தான் நாம் இந்த விழாவை நவராத்திரியாகக் கொண்டாடுகிறோம்.
இந்த நவராத்திரி பண்டிகையில், மக்கள் இரவு நேரத்தில் கோலாட்டம், கர்பா, போன்ற நடன நிகழ்ச்சிகளை நடத்தி ஆனந்தமடைகிறார்கள்.
நம் வாழ்வின் இன்னல்களை நீக்கி, தேவியின் இன்னருளைப் பெற்றுத்தரும் வழிபாட்டு நியதிகளை சொல்லித் தருகிறது இந்த நவராத்திரி. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வடிவில் அம்பாளை தியானித்து, பூஜை செய்து, வழிபட்டு துர்கா தேவியின் ஆசீர்வாதத்தையும் அருளையும் பெறுவோமாக!
இந்த பதிவின் மூலம் நவராத்திரி பண்டிகையின் உண்மையான புராண பின்னணியை உணர்ந்து, கொலு வைப்பதன் தத்துவார்த்த அர்த்தத்தையும் ஒன்பது நாள் வழிபாட்டின் முழுமையான ஆன்மீகப் பலன்களையும் உங்கள் இல்லத்தில் பெறமுடியும்.