
நெல்லையப்பர் கோவிலில் பல அரிய சிறப்புகள் காணப்படுகின்றன. அவற்றுள் சில வேறெங்கும் காண முடியாத தனிச்சிறப்பு வாய்ந்தவையாக உள்ளன. புகழ்பெற்ற நெல்லையப்பர் கோவிலில் நுழைந்தவுடன் பத்தடி உயரத்திற்கு மேலாக ஒரு அழகான வெள்ளை நிற நந்தி படுத்திருக்கும். அடுத்து உள்ளே சென்றால் சுமார் ஒன்பது அடியில் விநாயகர் இருக்கிறார். மூலவரைச் சுற்றி மூன்று பிரகாரங்கள் இருக்கின்றன.
முதல் பிரகாரத்தில் எல்லா கோவில்களை போல தட்சிணாமூர்த்தி, சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தினி, பைரவர் சன்னதிகள் இருக்கின்றன. கோவிந்த பெருமாள் சிவனுக்கு அருகிலேயே சயனித்திருக்கிறார். இந்த கோவிலின் இரண்டாவது பிரகாரம் சற்று பெரியது. இங்கே ஏழிசை சுரங்கள் இசைக்கும் தூண்கள் உள்ளன. இவற்றை தட்டி பார்த்தால் சுரங்களின் ஒலி கேட்கும். இந்த பிரகாரத்தில் தான் தாமிர சபை உள்ளது. அறுபத்தி மூன்று நாயன்மார்களின் சிலைகள், அஷ்டலட்சுமி, சனீஸ்வரர், சகஸ்ரலிங்கம் ஆகிய சிலைகளும் இருக்கின்றன.
மூன்றாவது பிரகாரம் மிகவும் பெரியது. மூன்று யானைகள் கூட இதில் சேர்ந்து நடக்கலாம். அவ்வளவு அகலம் கொண்டது. இந்த பிரகாரத்தில் இருந்து அம்மன் மண்டபம் வழியாக அம்மன் சன்னதிக்கு செல்லலாம்.
இங்கு ஆஞ்சநேயர், ஐயப்பன், மஞ்சனத்தி அம்மன், சரஸ்வதி, பிரம்மாவிற்கு தனி சன்னதிகள் இருக்கிறது. கோவிலின் மிகப்பெரிய உள்தெப்பம் இருக்கிறது. இந்த மூன்றாவது பிரகாரத்தில் முருகப்பெருமானுக்கு தனியாக பெரிய சன்னதி இருக்கிறது. ஆறுமுகமாய் மயில் வாகனனாய் வள்ளி தெய்வானையுடன் சந்தன காப்பில் நின்று அருள் புரிகிறார் முருகன். இந்த கோவிலில் உள்ள விநாயகர் பொல்லாப் பிள்ளையார் என்றும் முருகப்பெருமான் ஆறுமுகப்பெருமான் என்று அழைக்கப்படுகின்றார். இந்த நெல்லையப்பர் கோவிலில் சிவபெருமான் நெல்லையப்பராக காட்சியளிக்கிறார். அன்னை காந்திமதி அம்பாள் தனி சன்னதியில் வீற்றியிருக்கிறார்.
நெல்லையப்பர் கோவில் இருமூலவரைக் கொண்ட துவிம் மூர்த்தி என்ற வகை கோவிலாகும். இரு மூலவர்களாக சுவாமி நெல்லையப்பர் லிங்க வடிவத்திலும், கோவிந்தராஜர் சயன கோலத்திலும் அருகருகே தனி தனி சன்னதியில் பக்தர்களுக்கு காட்சி தருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள முக்கியமான ஐந்து சிவ சபைகளில் நெல்லையில் உள்ள ஸ்ரீ காந்திமதி நெல்லையப்பர் ஆலயம் தாமிர சபை கொண்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.
சிவபெருமான் நடனமாடிய ஐந்து முக்கிய தலங்களில் நெல்லையப்பர் கோவில் திருத்தலமும் ஒன்று என்பது சிறப்பாகும். கிழக்கு நோக்கி சன்னதி வாயிலின் இரு பக்கமும் துவாரபாலகர்கள் காவல் புரிய உள்ளே கருவறையில் வெட்டுப்பட்ட லிங்கத் திருமேனியாய் காட்சியளிக்கிறார் நெல்லையப்பர்.
இவரது தலைப்பகுதியில் கோடாரியால் வெட்டுப்பட்ட தழும்பை இன்றும் காணலாம். இந்த நெல்லையப்பருக்கு, வேண்ட வளர்த்தநாதர், வேணுவனநாதர், சாலிவாடீசர், வெட்டுப்பட்ட இறைவன், வேய்முத்தர் திருநெல்வேலி உடைய நயினார் ஆகிய பெயர்களும் இருக்கிறது.
சுவாமி நெல்லையப்பர் கோவிலில் நடுநாயகமாக சுவாமிக்கு நேர் எதிரே காட்சி தரும் நந்தியை மாக்காளை என்று போற்றுகின்றனர். மிகப்பிரமாண்ட வர்ண கலாப திருமேனியாக இந்த மாக்காளை சுண்ணாம்பு சுதையால் உருவாக்கப்பட்ட திருமேனியாகும்.
நெல்லையப்பர் கோவிலில் வீற்றிருக்கும் பொல்லாப்பிள்ளையார் சன்னதியில் பல துளைகள் கொண்ட ஜன்னல் இருக்கிறது பிள்ளையாரிடம் வேண்டிக்கொண்டு குழந்தை பேறு அடைந்தவர்கள் குழந்தையை ஜன்னல் வழியாக கொடுத்து வாங்கி வித்தியாசமான நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். இப்படி செய்தால் குழந்தைகள் தீர்க்காய்சாக விநாயகர் பாதுகாப்பு கவசத்தில் வளர்வார்கள் என்பது நம்பிக்கை.
மூன்று முகம், மூன்று கால்கள், மூன்று கரங்கள் கொண்ட ஜுரதேவர் சன்னதி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும்.
இவருக்கு வென்னீர் அபிஷேகம் செய்து நெற்றியில் மிளகு பற்று போட்டால் எத்தகைய கடுமையான காய்ச்சலும் குணமாகிவிடும் என்பது நம்பிக்கை ஆகும்.
மகிஷாசுரமர்த்தினி மஞ்சன வடிவு அம்மன் பண்டாசுரமர்த்தினி சந்நிதியும் உள்ளன. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மஞ்சன வடிவம்மன் சன்னதியில் ராகு காலங்களில் விளக்கேற்றி வழிபாடு செய்தால் மணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணமாகும். பகைவர் தொல்லையும் நீங்கும் என்பது நம்பிக்கை.
இந்த நெல்லையப்பர் கோவிலில் இசை தூண்களுடன் அற்புத மண்டபங்கள் உள்ளன.
ஆயிரங்கால் மண்டபம் : இந்த மண்டபம் ஐநூற்றிஇருபது அடி நீளமும், அறுபத்தி மூன்று அடி அகலமும், ஆயிரம் தூண்களையும் உடையதாகும். இந்த மண்டபத்தில் தான் காந்திமதி அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபமாக உள்ளது. கீழ்ப்பகுதியில் ஆமை ஒன்றினால் தாங்கப்படுவது போன்ற வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது. மகாவிஷ்ணுவே ஆமை வடிவத்தில் வந்து இறைவனை பூஜிப்பதாக ஐதீகம்.
ஊஞ்சல் மண்டபம்: தொண்ணூற்றி ஆறு தத்துவங்களை தெரிவிக்கும் விதமாக தொண்ணூற்றி ஆறு தூண்கள் உடையது. திருக்கல்யாண வைபவம் முடிந்த பிறகு சுவாமி அம்மன் ஊஞ்சலில் அமர்ந்த கோலமும் ஆடி மாத வளைகாப்பு திருவிழாவும் இங்கு நிகழும்.
சோமவாரம் மண்டபம் : இந்த மண்டபம் சுவாமி கோவிலின் வடபக்கம் உள்ளது. கார்த்திகை சோமவார நாளில் பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் நிகழும் மண்டபம் இங்கு எழுபத்தி எட்டு தூண்கள் உள்ளன.
சங்கிலி மண்டபம் :சுவாமி கோவிலையும் அம்மன் கோவிலையும் இணைப்பதால் சங்கிலி மண்டபம் என்று பெயர். இந்த மண்டபத் தூண்களில் காம விகார குரங்கு, வாலி, சுக்ரீவன், புருஷா மிருகம், பீமன், அர்ஜுனன் சிற்பங்கள் கண்ணை கவரும் வகையில் உள்ளன.
மணி மண்டபம் : இந்த மண்டபத்தின் மத்தியில் பெரிய மணி தொங்குவதால் மணிமண்டபம் என்பார்கள். ஒரே கல்லில் சுற்றி சுற்றி பல சிறு தூண்கள் உள்ளன. ஒவ்வொரு சிறிய தூணைத் தட்டினால் ஒவ்வொரு வாத்திய ஒலி தோன்றும். தூண் தோறும் ஸ்வரங்கள் மாறுபட்டு வரும். மரக்கட்டையில் மான் கொம்பு மாட்டி தட்டினால் அற்புதமான சரியான சுரம் கிடைக்கும். மொத்தம் நாற்பத்தி எட்டு சிறிய தூண்கள் உள்ளன.
வசந்த மண்டபம்: நூறு தூண்களை உடைய வசந்த மண்டபத்தில் கோடைகாலத்தில் வசந்த விழா நடைபெறும்.
நெல்லையப்பர் கோவிலுக்கு வந்து அத்தனை சிறப்புகளையும் பார்த்து நெல்லையப்பர் காந்திமதியை தரிசித்து பேரருள் பெறுங்கள்...
(நன்றி: தல வரலாறு நூல்)