

பெருமாளுக்கு உள்ள 106 வைணவ திவ்ய தேசங்களில் பத்தாவது திவ்ய தேசமாக புள்ள பூதங்குடி வல்வில் ராமன் கோவில் அமைந்துள்ளது.
கோவிலின் தல வரலாறு:
ராமாயண காலத்தில் ராவணன் சீதையை கவர்ந்து சென்றபோது ஜடாயு என்ற பறவை சீதையை காப்பாற்ற ராவணனுடன் போர் புரிந்தபோது ராவணனுடைய வாலினால் தாக்கப்பட்டு தரையில் விழுந்தது. உயிருக்கு போராடிய ஜடாயு என்ற பறவையைப் பார்த்த ராமர் மற்றும் லட்சுமணன் நடந்த நிகழ்வுகளை ஜடாயுவிடம் கேட்டு அறிந்து பின் அந்த ஜடாயுப் பறவையின் உயிர் பிரிந்த உடன் உடலை அடக்கம் செய்து ஈம சடங்கை செய்ய ராமர் எண்ணினார்.
இருப்பினும் எந்த ஒரு புண்ணிய காரியத்தை செய்யும்பொழுதும் உடன் மனைவி இருக்கவேண்டும் என்ற காரணத்தினால் சீதை இல்லாததை எண்ணி கவலையுற்று பூமாதேவி உதவியுடன் பொன்னாலான சீதையை வடிவமைத்து இறுதியாக ஜடாயுவிற்கு மோட்சம் அளித்தார். ராமர் ஜடாயு என்ற பறவைக்கு மோட்சம் அளித்ததால் திருக்கோவிலுக்கு புள்ளபூதங்குடி என்று பெயர் வந்தது.
கோவிலின் அமைப்பு:
இத்திருக்கோவில் தஞ்சாவூர் மாவட்டம் புள்ள பூதங்குடி ஊரில் அமைந்துள்ளது. கோவில் கிழக்கு நோக்கி, ஐந்து நிலை பிரம்மாண்டமான ராஜகோபுரங்களுடன் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலில் கோபுரம் சோபன விமானம் என்றும் தீர்த்தமாக க்ருத்ரா புஷ்கரணி ஜடாயு தீர்த்தம் உள்ளது. தல விருட்சமாக புன்னை மரம் உள்ளது.
இத்திருக்கோவிலில் ராமர் வல்வில் ராமன் என்ற பெயரிலும் தங்கத்தினால் ஆன சீதையை கொண்டு ஜடாயூ பறவைக்கு ராமர் மோட்சம் அளித்ததன் காரணமாக இங்குள்ள தாயாருக்கு பொற்றாமரையாள் மற்றும் ஹேமாப்ஜ வள்ளி என்ற பெயரும் உண்டு. ஜடாயில் என்ற பறவைக்கு மோட்சம் அளித்த பின்பு ராமர் அயர்ந்து படுத்த நிலையில் உள்ளதைப் போலவே இத்திரு கோவிலிலும் இரண்டு கரங்களுடன் படுத்த நிலையில் இருந்தார். அதனை இங்கு வந்து பார்த்த திருமங்கையாழ்வார் இரண்டு கரங்களுடன் ஒரு மனிதன் படுத்திருப்பதைப்போல் இருப்பதால் இறைவன் என்று அறியாமல் அவ்விடத்தை விட்டு நீங்கினார்.
பின் பெருமாளே திருமங்கை ஆழ்வாரை அழைத்து நானே திருப்பாற்கடலில் படுத்திருக்கும் பெருமாள் ராமர் அவதாரத்தில் படுத்திருப்பதாக கூறி நான்கு கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக திருமங்கையாழ்வாருக்கு காட்சியளித்தார்.
திருமங்கையாழ்வாரும் பெருமாளை பார்த்த பெரும் மகிழ்ச்சியில் இத்திருக்கோவிலில் மங்களா சாசனம் செய்த பெருமையை இத்திருக்கோவில் பெற்றுள்ளது. பின் இங்குள்ள ராமர் படுத்த நிலையில் எங்கும் காணாதவாறு நான்கு கரங்களுடன் சங்கு சக்கரதாரியாக காட்சி தருகிறார். ராமருடன் லட்சுமணன், ஜடாயு, அனுமான் மற்றும் பூமாதேவி பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
வல்வில் ராமர் என்றால் “வலிமையான வில்லை கொண்ட ராமன் “என்பது பொருள். மேலும் இத்திரு கோயில் புதனுக்குரிய ஸ்தலமாகும். இங்குள்ள யோக நரசிம்மரை வழிபட உத்தியோக உயர்வு கிடைக்கும் என்பது ஐதீகம். இங்குள்ள ராமரை வழிபட திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கை. ராமர் தன்னுடைய தந்தையான தசரதருக்கு இறுதி காரியங்கள் செய்ய முடியாமல் போனாலும் ஜடாயுவிற்கு இறுதி காரியங்களை செய்து மோச்சத்தை அளித்த புனித தலமாக திருக்கோவில் விளங்குகிறது. மேலும் இத்திருக்கோவில் பித்ரு தோஷ நிவர்த்தி தளமாகவும் உள்ளது.